சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கிடுகிடுவென உயர்ந்திருக்கிறது. அங்கு வந்து சென்றவர்கள், அவர்களைச் சந்தித்தவர்கள் என நாளுக்குநாள் கோவிட்-19 பாசிட்டிவ் அட்மிஷன்கள் குவிகின்றன. ஆனால், கரோனாவுக்கு முன்பாகவே, அந்தப் பகுதியை ஒரு மோசமான வைரஸ் ஆட்டிப்படைப்பதாகப் பரவலாகப் பேசப்படுகிறது.
அப்படி என்னதான் நடக்கிறது. அந்த வைரஸ் யார்? அவர் செய்துவரும் சேட்டைகள் என்னென்ன… நமது சிறப்புப் புலனாய்வு நிருபர் வெளிச்சத்திற்குக் கொண்டுவந்த விஷயங்கள் இதோ… சென்னை கோயம்பேடு மார்க்கெட், இந்த போலீஸ் ஸ்டேஷன் லிமிட்டிற்குள்தான் வருகிறது. இங்கு ரைட்டராக இருப்பவர்தான் அந்த வைரஸ். ஊரடங்கு கெடுபிடியால் அத்தியாவசியத் தேவைக்கு வெளியில் வருபவர்களின் வாகனங்களைப் பறிமுதல் செய்வது காவல்நிலையங்களின் வாடிக்கை. கரோனா காலம் முடிந்தபிறகு சட்டப்பூர்வமாக என்ன நடவடிக்கையோ, அதை நீதியரசரே எடுப்பார். ஆனால், நமது ரைட்டரை தனியாக கவனித்தாலே வாகனம் கிடைத்துவிடும் என்கிறார்கள்.
சட்டமாவது நீதியாவது என்று உத்தம வாழ்வு வாழும் இந்த ரைட்டர், தனது எடுபிடியான அந்த முதல்நிலை காவலரை வைத்துக்கொண்டு எல்லா தில்லுமுல்லு வேலைகளையும் கச்சிதமாக முடித்துக் கொண்டிருக்கிறார். இத்தனைக்கும், அந்தக் காவல் நிலையத்தின் சட்டம் ஒழுங்கு ஆய்வாளருக்கும், உதவி ஆய்வாளர்களுக்கும் இது தெரியாமல் இருப்பதுதான் கொடுமையிலும் கொடுமை.
ஏற்கனவே கோயம்பேடு மார்க்கெட் கரோனா ஹாட்ஸ்பாட்டாக வாய்ப்பிருப்பதாக, பல நாட்களுக்கு முன்பே நக்கீரன் எச்சரித்தது. ஆனால், இந்தப் பகுதியைக் கண்ட்ரோலில் வைத்திருக்கும் ரைட்டர், மார்க்கெட்டுக்கு உள்ளே செல்பவர்களுக்குச் சகட்டுமேனிக்கு அனுமதிச்சீட்டு கொடுத்திருக்கிறார். ஒருவேளை அப்படி அனுமதிச்சீட்டு இல்லாமல் யாராவது வந்தால், அவர்களைச் சோதனை செய்யும் காவலர்களே நேராக ரைட்டரிடம் அனுப்பி வைக்கிறார்கள். அவசரகதியில் மார்க்கெட்டுக்கு வருபவர்களுக்கு, பாஸ் வந்தால் போதுமென்று நினைப்பதால் ரைட்டரின் பாக்கெட் பக்காவாக நிரம்பியிருக்கிறது.
மேலும், மார்க்கெட்டில் கரோனா நெருக்கடியைக் காரணம்காட்டி, அத்தியாவசியப் பொருட்களுக்கான கடைகளை மட்டுமே திறக்க அனுமதி உள்ளது. பூ மார்க்கெட் அத்தியாவசியப் பொருட்கள் லிஸ்டில் வராததால், அதைத் திறக்க அனுமதியில்லை. ஆனால், ரைட்டரை தனியாக வீட்டில் சந்தித்து கவனித்தவர்கள், தாராளமாக அடுத்த நாள் கடை திறக்கலாமாம். பூ மார்க்கெட்டில் இருந்தே, கோயம்பேடு மார்க்கெட் பகுதியில் கரோனா தன் கணக்கைத் தொடங்கியது என்பதை, இங்கே நினைவுப்படுத்துகிறோம். இந்த ஊரடங்கு நேரத்தில், மற்ற காவல்நிலைய ரைட்டரெல்லாம் மாமூல் கிடைக்காமல் திண்டாடும் நேரத்தில், ரைட்டர் மட்டும் கொலைக் குத்தாட்டம் போடுகிறார் என்றால், சாதாரண நாட்களில் எந்தெந்த ஸ்டைலில் ஸ்டெப் போட்டிருப்பார். கொஞ்சம் ஆராய்ந்ததற்கே, தலை சுற்றியது.
கோயம்பேடு இன்னோவா பெட்ரோல் வாகனத்தில் அலுவலில் இருப்பவர்கள், தினமும் டியூட்டி முடிந்து செல்லும்போது, ரூ.500 கட்டாயம் ரைட்டருக்கு படியளந்தாக வேண்டும். கொடுக்கவில்லை என்றால் அந்த அதிகாரி அப்படியே தூக்கியடிக்கப்படுவார். அந்த ஸ்டேஷனின் எல்லைக்கு உட்பட்ட எட்டு டாஸ்மாக் பார்களின் உரிமையாளர்கள், கடைக்கு ரூ. 3 ஆயிரம் வீதம், ஒவ்வொரு மாதமும் கப்பம்கட்ட வேண்டுமாம். நெற்குன்றத்தில் திருட்டு மணல் விற்பனை செய்யும் கும்பல்கள், லாரிக்கு ரூ.3 ஆயிரம் என ஆறு லாரிகளுக்கு மாமூல் வெட்ட வேண்டுமாம். தடை செய்யப்பட்ட போதை பொருட்களான ஹான்ஸ், மாவா, கஞ்சா போன்றவை மார்க்கெட்டில் கொடிகட்டிப் பறக்க, தனியாக மாதம் ரூ.40 ஆயிரம் ரைட்டருக்கு சென்றுவிடுமாம். இப்படி மாமூல் மட்டுமே ஒரு லட்சம் தேறும் என்கிறார்கள்.
இவ்வளவு சேட்டைகள் செய்கிறாரே, அந்த ரைட்டர்… ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் இதையெல்லாம் கண்டிக்க மாட்டாரா? என்று நீங்கள் நினைப்பது சரிதான். அந்த இன்ஸ்பெக்டர் சிங்கிள் டீ குடித்தால் கூட, சொந்தக்காசை செலவு செய்கிறவர். இதுவே, ரைட்டரும், அவரது எடுபிடியான முதல்நிலைக் காவலரும் கொள்ளை அடிப்பதற்கு போதுமானதாக இருந்தது என்று பேசிக் கொள்கிறார்கள். அந்த இன்ஸ்பெக்டரின் பெயரைப் பயன்படுத்தியே கலெக்ஷனைக் கச்சிதமாக முடிப்பதில்தான், இருவரின் சாமர்த்தியமும் அடங்கியிருப்பதாகச் சொல்கிறார்கள்.
அந்த ஸ்டேஷனின் உளவுப்பிரிவு கூட மேலதிகாரிகளுக்கு இந்த விஷயங்களைப் போட்டுக் கொடுப்பதில்லை என்பது கசப்பான உண்மை. காரணம், இந்தக் கொள்ளையில் கேள்வி கேட்காத அளவுக்கு அவர்களுக்குக் கணிசமான பங்கு கிடைக்கிறதாம். அதுபோக, அவர்களைப் பற்றி மாட்டிக்கொடுக்க முயற்சித்தாலே, தவறாகச் சொல்லிக்கொடுத்து தூக்கியடிப்பதில் கில்லாடியாம் இந்த ரைட்டர். எனவே, நமக்கேன் வம்பு? நம்ம வண்டி நல்லா ஓடினா போதுமென்று, ரைட்டரை வெயிட்டாக கவனித்து கைக்குள் வைத்துக் கொள்வார்களாம்.
கரோனா இல்லை அதோட தாத்தாவே வந்தாலும், இந்த வைரஸை அடிச்சிக்க முடியாது என்று, ரைட்டரின் அட்ராசிட்டியை எண்ணி கோயம்பேடு மார்க்கெட்வாசிகள் புலம்புகிறார்கள். நாணயத்துக்காக வேலைபார்க்கும் இதுபோன்ற ரைட்டர்களால், நாணயமாக வேலைசெய்யும் அதிகாரிகளின் பெயரும் சேர்ந்தே கெடுகிறது.