திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை இரயில் நிலையம் அருகிலுள்ள குப்பைத் தொட்டியில் டிசம்பர் 10ந்தேதி விடியற்காலை ஒரு குழந்தையின் அழுகுக்குரல் கேட்டது. குப்பை தொட்டியில் எழுந்துக்கொள்ள முடியாமல் எழுந்து நின்று அழுதது. இதனை சாலையோரம் வசிக்கும் நாடோடிகளும், அந்த பகுதியில் கடை வைத்திருப்பவர்களும் பார்த்துள்ளனர்.
10 மாத குழந்தையான அது அம்மா, அப்பா என மழலை குரலில் சொல்லியபடி அழுதது, மற்றப்படி அந்த குழந்தைக்குப் பேச்சு வரவில்லை. இந்த குழந்தையை யாரோ வீசிவிட்டு சென்றுள்ளார்கள் என்கிற தகவல் கிடைத்து ஜோலார்பேட்டையே பரபரப்பானது. அங்கிருந்த பெண்கள் சிலர், நான் என் வீட்டுக்கு எடுத்து சென்று இந்த பெண் குழந்தையை வளர்க்கிறேன் என போட்டிபோட துவங்கினார்கள். இதனால் நாடோடி மக்களுக்கும் சிலருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதனைப்பார்த்த அங்கிருந்த வியபாரிகள், இதுப்பற்றி ஜோலார்பேட்டை காவல்நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் அங்கு வந்த காவலர்கள் குழந்தையை மீட்டனர். இதுப்பற்றி மாவட்ட ஆட்சியர் சிவன்அருளுக்கு தகவல் சொல்லி குழந்தையை சமூக நலத்துறையினர் மூலம் காவல்நிலையம் சென்று எழுதி தந்துவிட்டு குழந்தையை தங்கள் பொறுப்பில் எடுத்துச்சென்று தனியார் குழந்தைகள் பாதுகாப்பத்தில் ஒப்படைத்தனர்.
இந்நிலையில் அந்த குழந்தை தங்களுடையது என ஆலங்காயம் காவல்நிலையத்திற்குத் தகவல் தெரிவித்துள்ளார் குழந்தையின் தந்தை ஆனந்தன். இவர் ஆலங்காயம் அடுத்துள்ள புதுபூங்குணம் கிராமத்தை சேர்ந்த கட்டிட மேஸ்திரி ஆவார். இவருக்கும், திருப்பத்தூர் வட்டத்திற்கு உட்பட்ட மேல்நிம்மியப்பட்டு கிராமத்தை சேர்ந்த பிரியாவுக்கும் 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணமாகியும் உடனடியாக குழந்தையில்லை. அதனால் இருவருக்கும் அடிக்கடி தகராறு வந்துள்ளது. மனைவி மீது கணவருக்கு சந்தேகம் வந்துள்ளது. இதனால் பிரிந்து வாழ்ந்தள்ளனர். ஊர் பெரியவர்கள் முன் சமாதானம் பேசப்பட்டு அவர்களை சேர்த்துவைத்துள்ளனர். 10 மாதத்துக்கு முன்பு இந்த தம்பதிக்கு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது.
இந்நிலையில் கணவன், மனைவி இடையே சண்டை வர, தனது தாய் வீட்டில் இருந்து கிளம்பியவர் குழந்தையை கொண்டு வந்து குப்பை தொட்டியில் வீசிவிட்டு ப்ரியா எங்கேயோ சென்றுவிட்டார். இந்த தகவல்களை கலெக்டரிடம் தெரிவித்து, குழந்தை தன்னுடையது என்கிற ஆவணத்தை ஆனந்தன் காட்டியபின், குழந்தையை ஆனந்தனிடம் ஒப்படைத்துள்ளனர். தற்போது ஆலங்காயம் காவல்நிலையத்தில் தரப்பட்ட புகாரை தொடர்ந்து ப்ரியா எங்கு சென்றார் என தேடும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.