கிருஷ்ணகிரி ராணுவ வீரர் இறந்த சம்பவத்தில் திமுக அரசும் சரியான நடவடிக்கை எடுக்கவில்லை. முதலமைச்சரும் எந்த விதமான கருத்தும் சொல்லவில்லை என ஈரோடு கிழக்கு தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட அண்ணாமலையும், பாஜகவினரும் சொல்கிறார்கள் என்ற கேள்விக்கு கல்வியாளரும் அரசியல் விமர்சகருமான ராமசுப்பிரமணியன் நக்கீரன் டிவி யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டி ஒன்றில் அளித்த பதில் பின்வருமாறு...
யாராவது ஒருவர் கொலை செய்தால், முதல்வர் ஏன் கண்டனம் தெரிவிக்கவில்லை; பதில் சொல்லவில்லை என்று கேட்பதை பாஜகவினர் பொதுவான பழக்கமாக வைத்து இருக்கின்றனர். கிருஷ்ணகிரி ராணுவ வீரரின் சம்பவத்தை பொறுத்த வரையில், இறந்த ராணுவ வீரர் பிரபுவும், கொலை செய்த சின்னசாமியும் நெருக்கமான உறவினர்கள் தான். அதைத் தாண்டி இதனை தேசவிரோதமானது; ஒரு ராணுவ வீரர், அதுவும் பணியில் இருப்பவரை கொன்றுவிட்டனர் என்று பேசுவது தவறு. இது மக்கள் மத்தியில் எடுபடவில்லை.
இது சம்பந்தமாக சின்னசாமி உடன் சேர்த்து 10 பேர் கைதும் செய்யப்பட்டனர். இந்த சம்பவம் 8 ஆம் தேதி நடைபெற்றது. 14 ஆம் தேதி ராணுவ வீரர் இறந்துவிட்டார். 15 ஆம் தேதி காலை சின்னசாமியை கைது செய்துவிட்டனர். இது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கூறுகையில், “முதல் தகவல் அறிக்கையில் கொலை முயற்சி என்று பதிவு செய்தோம். ராணுவ வீரரின் இறப்புக்கு பிறகு, அதனை கொலை வழக்காக பதிவு செய்து விட்டோம்” என்று சொல்கிறார்.
2022 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 22 ஆம் தேதி ஆரணியில் ஒரு ராணுவ வீரரை, அவரின் மனைவியும், மனைவியின் ஆண் நண்பரும் சேர்ந்து கொலை செய்துவிட்டனர். இந்த சம்பவத்தில், ராணுவ வீரரை கொன்றுவிட்டார்கள். முதல்வர் என்ன சொல்லுகிறார் என்று ஏன் அண்ணாமலை கேட்கவில்லை. அதற்கு காரணம் அந்த பெண்ணுடன் சேர்ந்து கொலை செய்த ஆண் ஒரு பாஜககாரன். கொலை செய்யப்பட்டவர் ராணுவ வீரர் என்ற போதிலும் அண்ணாமலை ஏன் வாயை திறக்கவில்லை.
ராணுவ வீரர் பிரபுவின் உறவினர் குடிநீர் தொட்டி அருகில் துணியை துவைத்து உள்ளார். அதற்கு கவுன்சிலர் சின்னசாமி எதிர்ப்பு தெரிவித்து, குடிக்கிற தண்ணீர் தொட்டி அருகில் துணி துவைக்கும் போது துணி துவைத்த தண்ணீர் எல்லாம் குடிக்கும் நீரில் கலந்தால் குடிக்க முடியாமல் போய் விடும் என்று கூறியுள்ளார். இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது. ராணுவ வீரரும் கடுமையான வார்த்தைகளை எல்லாம் பேசி இருக்கிறார்கள். இதில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கூறுகையில், “இது சிறிய வாய்த்தகராறாக இருந்து பின்பு கம்பி, கட்டைகளை எல்லாம் கொண்டு தாக்கி உள்ளனர்” என்று கூறியுள்ளார்.
இவ்வாறு ராமசுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.