நம் காலத்தின் மறக்க முடியாத, இதுபோல இன்னொருவர் பிறக்க முடியாத... பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம். எம்.ஜி.ஆரில் தொடங்கி தனுஷ் வரை இவர் குரல் தமிழ் திரைப்பட நாயகர்களுக்கு வலு சேர்த்தது. ஒரு பாடகராக தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி, என பல மொழிகளில் பாடிப் புகழ்பெற்றவர் பாலசுப்ரமணியம். இவரது பாடல்கள் காதலாகவும் வீரமாகவும் உத்வேகமாகவும் தாலாட்டாகவும் பக்தியாகவும் ஒலிக்காத வீடு தமிழகத்தில் இல்லை எனலாம். தமிழ் சினிமாவின் அழிக்க முடியாத முக்கிய பகுதியாக எஸ்.பி.பாலசுப்ரமணியம் என்றும் திகழ்வார். அதிக பாடல்களை பாடி கின்னஸ் சாதனை அளவுக்கு சென்ற எஸ்.பி.பிக்கு பாடகர் என்பதை தாண்டி இன்றைய இளைஞர்கள் அறியாத முகமொன்று இருக்கிறது. அது அவரது 'இசையமைப்பாளர்' முகம்.
கே.வி.மஹாதேவன் தொடங்கி எம்.எஸ்.விஸ்வநாதன், இளையராஜா, சங்கர் கணேஷ், சந்திரபோஸ், மரகதமணி, ஏ.ஆர்.ரஹ்மான், தேவா, வித்யாசாகர், யுவன் சங்கர் ராஜா... இப்படி கால வரிசையில் வந்தால் ஜி.வி.பிரகாஷ், அனிருத் என இன்றைய இசையமைப்பாளர்கள் வரை கிட்டத்தட்ட அனைத்து முக்கிய இசையமைப்பாளர்கள் இசையிலும் பாடியிருக்கிறார் எஸ்.பி.பி. இப்படியிருக்க, இவர் பாடகராக மிக மிக பிஸியாக இருந்த காலகட்டத்தில், இசைஞானி இளையராஜா கோலோச்சிய காலகட்டத்தில் எஸ்.பி.பி இசையமைத்திருக்கிறார். கிட்டத்தட்ட நாற்பது படங்களுக்கும் மேலாக இசையமைத்திருக்கிறார் எஸ்.பி.பி. தமிழில் இயக்குனர் ஸ்ரீதர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த 'துடிக்கும் கரங்கள்' படத்திற்கு இசையமைத்தார் எஸ்.பி.பி. இவர் இசையமைத்ததில் என்றென்றும் நிலைத்திருக்கும் பாடல்களை கொண்ட திரைப்படம் 'சிகரம்'. எஸ்.பி.பி நடித்திருந்த இந்தப் படத்தில் 'வண்ணம் கொண்ட வெண்ணிலவே...', 'இதோ இதோ என் பல்லவி', 'அகரம் இப்போ சிகரம் ஆச்சு' போன்ற பாடல்கள் மிகச்சிறந்தவை. இன்றும் இப்பாடல்கள் தொலைக்காட்சிகளில் ஒலிக்கின்றன, யூ-ட்யூபில் இசைக்கப்படுகின்றன. பலரும் இவை இளையராஜா இசையமைத்த பாடல்கள் என்று எண்ணுகின்றனர். சமுத்திரக்கனி இயக்கிய முதல் படமான 'உன்னை சரணடைந்தேன்' படத்துக்கும் இசையமைத்தார் எஸ்.பி.பி.
ஒரு இணையில்லாத பாடகராக இருந்த எஸ்.பி.பி., ஒரு சிறந்த இசையமைப்பாளராகவும் திகழ்ந்தார். ஆனால், பாடகராக அவர் பயணம் இடைவிடாது தொடர்ந்ததால் இசையமைப்பாளராக அதிக படங்களில் பணியாற்றவில்லை. எஸ்.பி.பி. ஒரு சிறந்த குணச்சித்திர நடிகர் என்பதும், டப்பிங் கலைஞர் என்பதும் நாம் அறிந்ததே.