தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தமிழ்நாட்டின் பல்வேறு தொகுதிகளிலும், ‘என் மண் என் மக்கள்’ எனும் நடைப்பயணத்தை நடத்திவருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயில் அருகே பேசிய அண்ணாமலை, “இந்தக் கோயிலுக்கு வெளியே அவர்கள் (தி.மு.க.) ஆட்சிக்கு வந்த பிறகு 1967ல் ஒரு பலகையை வைத்திருக்கிறார்கள். அதில், ‘கடவுளை நம்புபவன் முட்டாள்; ஏமாளி; அதனால் கடவுளை யாரும் நம்பாதீர்கள்’ என தமிழ்நாட்டில் உள்ள எல்லா கோயில் வெளியேயும் .. இது போல் ஒரு சாதனையை செய்துவிட்டதாக ஒரு கம்பத்தை வைத்து கொடி ஏற்றி வைத்திருக்கிறார்கள். ஆனால், இந்துகள் ஆகிய நாம் அமைதியாக அறவழியில் வாழ்பவர்கள். இன்று இந்த ஸ்ரீரங்க மண்ணில் இருந்து பா.ஜ.க., தமிழ்நாட்டில் பா.ஜ.க. ஆட்சிக்கு வரும்போது முதல் வேலையாக அந்த கம்பத்தை அப்புறப்படுத்தி, நம்முடைய ஆழ்வார்கள், நாயன்மார்கள், தமிழ் புலவர்கள்.. தமிழ் புலவர் திருவள்ளுவர் ஆகியோரின் சிலைகள் அங்கே வைக்கப்படும் என உறுதி எடுத்துக்கொள்கிறது” என்று பேசியிருந்தார். இதற்கு தி.மு.க., அ.தி.மு.க. உள்ளிட்ட கட்சியினர் தங்களது கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.
தற்போது இந்த முறையும் தமிழ்நாடு பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை அவுட்டே எனும் வகையில் பலர் திருச்சி ஸ்ரீரங்கம் கோயில் வெளியே இருக்கும் பெரியார் சிலை அமைக்கப்பட்டது குறித்து கருத்து தெரிவித்துவருகின்றனர்.
ஸ்ரீரங்கத்தில் பெரியார் சிலை நிறுவப்பட்டது தொடர்பாக சீனி விடுதலை அரசு பேசிய வீடியோ ஒன்று வைரலாகிவருகிறது. அதில் சிலை நிறுவக் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தில் தொடக்கி சிலை நிறுவியது வரை பல்வேறு ஆதாரங்களைப் பதிவு செய்துள்ளார்.
இந்த சிலை நிறுவுவதற்கான முதல் முயற்சி 1969ம் ஆண்டு ஸ்ரீரங்கத்தில் நடைபெற்ற திராவிடர் கழக தொண்டர்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அத்தீர்மானம் குறித்து 1969, ஜூலை 28ம் தேதி விடுதலை நாளிதழில் செய்தி வெளியாகியுள்ளது. அதில் “சீரங்கம் நகரத்தில் தந்தை பெரியார் அவர்களின் திருவுருவச் சிலை அமைக்க ஒரு இடம் தேர்ந்து எடுத்து அது சம்மந்தமான வேலைகளை துரிதமாக செய்வது” என்று உள்ளது. கோவிலுக்கு முன்னர்தான் சிலை நிறுவ வேண்டுமென அத்தீர்மானத்தில் குறிப்பிடப்படவில்லை. அதன்படி நகராட்சிக்கு மனு அளிக்கப்பட்டு, அன்றைய நகர் மன்ற உறுப்பினர்களும் ஒருமனதாகச் சிலை அமைக்கத் தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளனர். அப்போது வெங்கடேஸ்வர தீட்சிதர் என்பவர் ஸ்ரீரங்கம் நகர் மன்ற தலைவராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பின்னர் 1973ல் 144 சதுர அடி (12×12) நிலம் ஒதுக்கப்பட்டு அரசாணை வெளியிடப்படுகிறது. 1975ம் ஆண்டு திராவிடர் கழகத்திடம் அந்நிலமும் ஒப்படைக்கப்படுகிறது. அப்போது பெரியார் சிலை நிறுவ உள்ள இடம் என்கிற கல்வெட்டினை, அந்த இடத்தில் திராவிடர் கழகத்தினர் வைத்துள்ளனர். காலப்போக்கில் அந்த கல்வெட்டு சிதைந்து விட்டதினால் மீண்டும் இரண்டாவது முறையாக 1996, டிசம்பர் மாதம் 4ம் தேதி ஆசிரியர் வீரமணி தலைமையில் மீண்டும் ஒரு கல்வெட்டு வைக்கப்பட்டது.
அரசு ஒதுக்கிய இடத்தில் சிலை அமைக்க 2002ம் ஆண்டு அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவுக்குச் சிலை அமைப்புக் குழு செயலாளர் கோ.பாலு என்பவர் கடிதம் எழுதியுள்ளார். இதற்கிடையில் சிலை பற்றி வைக்கப்பட்டிருந்த கல்வெட்டு 2004ம் ஆண்டு சில மர்ம நபர்களால் உடைக்கப்பட்டது. தொடர்ச்சியான முயற்சியில் 2006ம் ஆண்டு கலைஞர் முதல்வராக இருந்த போது சிலை நிறுவும் பணிகள் தொடங்கியது. அன்றே பாஜகவினர் சிலர் பெரியார் சிலை நிறுவக்கூடாது எனப் பிரச்சனை செய்ததாக சீனி விடுதலை அரசு கூறுகிறார்.
மேற்கொண்டு அவர் கூறியது, “2006, டிசம்பர் 16ம் தேதி சிலை திறப்பதற்கான அறிவிப்புகள் வெளியாகின. அதே ஆண்டு டிசம்பர் மாதம் 7ம் தேதி அதிகாலை பெரியாரின் சிமெண்ட் சிலை சங் பரிவார் கும்பலினால் உடைக்கப்படுகிறது. இதற்குக் கடுமையான எதிர்ப்புகள் எழுகிறது. ஒரு கட்டத்தில் பெரியார் சிலை இடிப்பிற்கும் எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை எனத் தமிழக பிராமணர் சங்கம் அறிக்கை வெளியிட்டனர்.
அப்போது ஆசிரியர் வீரமணி அந்த இடத்தில் புதிய சிலை நிறுவ வேண்டும் என எங்களுக்கு உத்தரவிட்டார். 7ம் தேதி அதிகாலை பெரியாரின் சிமெண்ட் சிலை இடிக்கப்படுகிறது. 8ம் தேதி இரவு அதே இடத்தில் வெண்கலச் சிலை வைக்கப்பட்டு, திட்டமிட்ட நாளில் சிலையும் திறக்கப்பட்டது. அந்த சிலை வீம்புக்காக நிறுவப்பட்டது அல்ல. அரசின் உத்தரவுப்படி, சட்டப்படி நிறுவப்பட்டது” எனக் கூறியுள்ளார்.
ஆக கோயில் வெளியே சிலை வைத்தது அரசு அல்ல, தி.க. என்பதும், சிலை வைக்கப்பட்டது 2006ம் ஆண்டு தானே தவிர, அண்ணாமலை சொல்வது போல் 1967 இல்லை என்பதும் வரலாறாக உள்ளது.
முன்னதாக 1921ம் ஆண்டு இறந்த மகாகவி பாரதியார் 1931ம் ஆண்டு ஈரோட்டில் பேசினார் என்பதும், 1961ல் பிறந்து 1990 இறந்த கோவில்பட்டி வீரலட்சுமி 1947ல் நாட்டை விட்டு வெளியேறிய வெள்ளையரை எதிர்த்து போரிட்டார் என்பதும், 1967ல் ஆட்சிக்கு வந்த தி.மு.க. 1962ல் மருதமலை கோயிலுக்கு மின்சாரம் வழங்கவில்லை என்பதும், சங்கக் காலத்தைச் சேர்ந்த கடையேழு வள்ளல்களில் ஒருவரான வல்வில் ஓரி சுந்தந்திரப் போராட்ட வீரர் என்பதும், 1630ல் பிறந்த 1680ல் இறந்த சத்ரபதி சிவாஜி 1967ல் சென்னை காளிகாம்பாள் கோயிலுக்கு வந்தார் என்பதும் அவருக்கு மட்டுமே தெரிந்த வரலாறு என கிண்டலடிக்கின்றனர் சமூகவலைத்தள வாசிகள்.