மக்களுக்காக அரசாங்கமா? கார்பரேட் கம்பெனிகளுக்காக அரசாங்கமா? என்ற கேள்விகள் சமீப ஆண்டுகளாக உரத்த குரலில் எழுகின்றன.
மத்தியில் மோடி அரசாங்கமும், மாநிலத்தில் அதிமுக அரசாங்கமும் இந்த நிலைமையை உருவாக்கி வைத்திருக்கின்றன. மோடி அரசாங்கத்தின் பல நடவடிக்கைகள் ஏழை மக்களிடமிருந்து வரியைப் பறித்து கார்பரேட் நிறுவனங்களுக்கு வாரி வழங்கும் வகையிலேயே இருக்கிறது.
தமிழ்நாட்டில் மீத்தேனை எதிர்த்தும், ஹைட்ரோ கார்பனை எதிர்த்தும் காவிரி பாசனப் பகுதிகளில் மக்கள் போராட்டங்களைத் தொடர்கிறார்கள். தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என்று அந்த ஆலையைச் சுற்றியுள்ள 17 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் 100 நாட்களாக போராட்டத்தை தொடர்கிறார்கள்.
இந்தப் போராட்டத்தை மாநில அரசு வேடிக்கை பார்க்கிறது. மக்கள் பொறுமையிழந்து மாவட்ட ஆட்சியரை சந்திக்க பேரணி நடத்தினால், அவர்களை சந்தித்து விளக்கம் அளிக்கவேண்டிய மாவட்ட ஆட்சியர், துப்பாக்கிச் சூட்டுக்கு உத்தரவிட்டிருக்கிறார். இதோ, உயிருக்காக போராட்டம் நடத்திய அப்பாவி மக்களை காக்கை குருவிகளைப் போல கொன்று குவித்திருக்கிறார்கள்.
அமைதியாக வந்த 50 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்களை போலீஸார் தடுக்க முயன்றதே தவறு. அவர்கள் முன்கூட்டியே அறிவித்துவிட்டுத்தான் பேரணியை தொடங்கினார்கள். அவர்களைத் தடுக்க 144 தடை உத்தரவு பிறப்பிக்கும் போலீஸார், மாவட்ட ஆட்சியரை அழைத்து மக்களை சந்திக்கும்படி செய்திருக்கலாமே.
தூத்துக்குடியை கலவரபூமியாக மாற்றியது யார்? இக்கட்டான சூழ்நிலையை சமாளிக்கத் தெரியாத ஆட்சியரும், மாநில அரசும் எதற்காக பதவியில் நீடிக்க வேண்டும் என்பதே மக்களுடைய கேள்வியாக இருக்கிறது.
மெரினாவில் அமைதியாக போராடிய மக்களை எப்படி கலைத்தார்களோ, அதேபோல போலீஸார் தூத்துக்குடி மக்களையும் கலைக்க முயன்றார்கள். அவர்களே கலவரத்தை உருவாக்கி, வன்முறை வெறியாட்டத்தை தூண்டியிருக்கிறார்கள்.
பத்திரிகையாளர்களையும், தொலைக்காட்சி கேமராமேன்களையும் விரட்டியிருக்கிறார்கள். இதன்மூலம் அவர்கள் நடத்திய அட்டூழியத்தை மறைக்க முயன்றிருக்கிறார்கள்.
நடுநிலையாளர்கள் முன் உள்ள கேள்விகள் இவைதான். மக்களுடைய உயிர்பயத்தை போக்க வேண்டியது அரசின் கடமையா இல்லையா? சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் ஸ்டெர்லைட் ஆலையை மூடித்தொலைப்பதில் அரசுக்கு என்ன சிரமம் இருக்கிறது? மக்களைக் காட்டிலும் கார்பரேட் கம்பெனியின் நலன்களைத்தான் அரசு முக்கியமாக நினைக்கிறதா? மக்களுடைய இத்தனை எழுச்சிமிக்க போராட்டத்திற்கு பிறகும் ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதாக அறிவிக்காமல் காலந்தாழ்த்துவது ஏன்? மக்களை அச்சுறுத்தத்தான் இந்த துப்பாக்கிச் சூடா?
அரசு என்ன வேண்டுமானாலும் நினைக்கலாம். ஆனால், மக்கள் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். பேய்கள் ஆட்சி செய்தால் பிணந்தின்னும் சாத்திரங்கள் என்று முன்னோர் சொன்னதை மெய்ப்பிக்கும் இந்த ஆட்சியாளர்களை விரைவில் மக்களே தண்டிப்பார்கள்.