விடுதலை பெற்ற பிறகு தமிழகத்தில் முதன்முதலில் காங்கிரஸ் ஆட்சியில்தான் துப்பாக்கி சூடு நடைபெற்றது. இந்தி மொழியை கட்டாயப்பாடமாக திணிக்க மத்திய அரசு முயற்சி செய்தது. இதை எதிர்த்து தமிழகம் முழுவதும் மாணவர்கள் போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டத்தை ஒடுக்க அன்றைக்கு உள்துறை அமைச்சராக இருந்த கக்கன் துப்பாக்கிசூடு நடத்த உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்து, நூற்றுக்கணக்கான மாணவர்களும் இளைஞர்களும் துப்பாக்கிக் குண்டுகளுக்கு இரையாகினர்.
அதன்பிறகு, 1972 ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் கோவில்பட்டி பகுதியில் நடைபெற்ற விவசாயிகள் போராட்டத்தில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. அதில் 3 விவசாயிகள் கொல்லப்பட்டனர்.
1980ஆம் ஆண்டு எம்ஜியார் ஆட்சியில் இலவச மின்சாரம், இலவச உரம் கோரி நாராயணசாமி நாயுடு தலைமையில் தமிழகம் முழுவதும் விவசாயிகள் போராட்டம் நடத்தினார்கள். அந்தப் போராட்டத்தை ஒடுக்க போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தினார்கள். அதில் 14 விவசாயிகள் கொல்லப்பட்டனர். அதே ஆண்டு குருஞ்சாக்குளத்தில் போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதில் 8 விவசாயிகள் உயிரிழந்தனர்.
1985 ஆம் ஆண்டு சென்னையில் மீனவர்கள் தங்கள் வாழ்வாதாரத்துக்காக நடத்திய போராட்டத்தை ஒடுக்க மீனவ நண்பனாகவும், படகோட்டியாகவும் நடித்த எம்ஜியார் உத்தரவில் துப்பாக்கிசூடு நடத்தப்பட்டது. அதில் 3 மீனவர்களும், பரமக்குடியில் நடைபெற்ற சாதிக்கலவரத்தை ஒடுக்க நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 5 பேரும் பலியாகினார்கள்.
அருப்புக்கோட்டை அருகே ராட்சத ஆழ்குழாய் கிணறு தோண்டுவதை எதிர்த்து 1987 ஆம் ஆண்டு விவிசாயிகள் நடத்திய போராட்டத்தை அடக்க துப்பாக்கிசூடு நடத்த எம்ஜியார் உத்தரவிட்டார். அதில் 2 பெண்கள் உள்பட 5 பேர் பலியாகினர்.
1992 ஆம் ஆண்டு கோவில்பட்டியில் விவசாயிகள் சங்கத்தினர் நடத்திய போரட்டத்தை அடக்க ஜெயலலிதா துப்பாக்கிச் சூடுக்கு உத்தரவிட்டார். அதில் 2 பேர் பலியாகினர். 1994 ஆம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சியில் காஞ்சிபுரத்தில் பஞ்சமி நிலத்தை மீட்க தலித் மக்கள் நடத்திய போராட்டத்தை அடக்க துப்பாக்கிச்சூடு நடத்த உத்தரவிட்டார். அதில் 2 பேர் பலியாகினர்.
1995 ஆம் ஆண்டில் நெல்லை மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் சாதிக்கலவரத்தை அடக்க ஜெயலலிதா உத்தரவின் பேரில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. அதில் 2 பேர் பலியாகினர்.
1991 ஆம் ஆண்டு பதவியேற்ற ஜெயலலிதா, எம்ஜியாரைப் போலவே தனது ஆட்சிக்காலத்திலும் துப்பாக்கிச் சூடுக்கு மிகச் சாதாரணமாக உத்தரவிடுவதை வழக்கமாக கொண்டிருந்தார்.
1997 ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் கயத்தாறு, சிவகாசி ஆகிய இடங்களில் போராட்டத்தைக் கலைக்க துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இதில் உயிர்ப்பலி ஏதுமில்லை.
1997 ஆம் ஆம் ஆண்டு தேனி மாவட்டம் பெரியகுளத்தில் தடையை மீறிய டாக்டர் கிருஷ்ணசாமியை போலீஸார் கைது செய்தனர். இதைக் கண்டித்து நெல்லையில் நடைபெற்ற பேரணியில் ஏற்பட்ட மோதலைக் கட்டுப்படுத்த போலீஸ் துப்பாக்கிச் சூடுக்கு உத்தரவிடப்பட்டது. அதில் ஒருவர் பலியானார்.
மாஞ்சோலை தோட்டத்தொழிலாளர் கூலி உயர்வுகேட்டு நடத்திய போராட்டத்தில் பலர் கைது செய்யப்பட்டனர். இதைக் கண்டித்து நெல்லையில் பேரணி நடத்தப்பட்டது. அப்போது நடந்த கலவரத்தை அடக்க தடியடி நடத்தினார்கள். தடியடியில் தப்பிக்க கலைந்து ஓடியவர்கள் தாமிரபரணி ஆற்றில் குதித்தனர். இதில் 17 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். துப்பாக்கிச் சூட்டில் இறந்ததாக கூறப்பட்டாலும் அதற்கு ஆதாரம் இல்லை என்று கூறப்பட்டது.
2001 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தண்டனைபெற்ற குற்றவாளி என்ற நிலையில் சட்டத்துக்குப் புறம்பாக ஜெயலலிதா இரண்டாம் முறையாக பதவியேற்றார். உடனே திமுக தலைவர் கலைஞரை கைது செய்ய உத்தரவிட்டார். நள்ளிரவில் நடைபெற்ற அந்த கைதை கண்டித்து திமுகவினர் நடத்திய போராட்டத்தை கலைக்க ஜெயலலிதா துப்பாக்கிசூடு நடத்த உத்தரவிட்டார். அதில் 4 திமுகவினர் பலியாகினர்.
2011 ஆம் ஆண்டு இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தும் நிகழ்வுக்காக சென்றவர்கள் மீது இன்னொரு பிரிவினர் நடத்திய தாக்குதலை முடிவுக்குக் கொண்டுவர ஜெயலலிதா துப்பாக்கிச்சூடு நடத்த உத்தரவிட்டார். அதில் 7 பேர் பலியாகினர்.
2013 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் தேதி ராமேஸ்வரம் தங்கச்சி மடத்திலும், 2014 ஆம் ஆண்டு டிசம்பர் 27 ஆம் தேதி தேனியில் பார்வர்டு பிளாக் கட்சித் தலைவர் ஒருவரின் இறுதி ஊர்வலத்திலும், 2016 ஆம் ஆண்டு நவம்பர் 10 ஆம் தேதி நெல்லை மாவட்டத்தில் காதல் பிரச்சனையால் ஏற்பட்ட மோதலைக் கலைக்கவும் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. மூன்றுசம்பவங்களும் அதிமுக ஆட்சியில் நடைபெற்றவை என்பது குறிப்பிடத்தக்கது.
இப்போது, 2018 ஆம் ஆண்டு மே 22 ஆம் தேதி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி அமைதியாக போராட்டம் நடத்திய பொதுமக்கள் மீது காட்டுமிராண்டித் தனமாக நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் அப்பாவிகள் 13 சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
மொத்தத்தில் எம்ஜியார், ஜெயலலிதா ஆட்சிகளில்தான் எதற்கெடுத்தாலும் துப்பாக்கிச்சூடு நடத்தி போராட்டங்கள் ஒடுக்கப்பட்டுள்ளன என்பது தெரிய வருகிறது.