13 அல்லது அதற்கும் கூடுதலான உயிர்களைப் பலிகொடுத்த பிறகு மக்கள் கோரிக்கை வெற்றி பெற்றிருக்கிறது. மக்களுடைய போராட்டத்துக்கு மதிப்பளிக்காமல் அவர்களை காக்கை குருவிகளைப் போல சுட்டுக்கொன்று அச்சுறுத்த முயன்ற அரசப்பயங்கரவாதம் தோற்றிருக்கிறது. மெல்லக்கொல்லும் விஷ ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி 100 நாட்கள் தொடர் போராட்டம் நடத்திய மக்கள், 100வது நாள் மாவட்ட ஆட்சியரைத்தான் சந்திக்கச் சென்றார்கள். ஆனால், ஆட்சியாளர்கள் துப்பாக்கியால் சந்தித்தார்கள்.
துப்பாக்கிக் குண்டுகளுக்கு பலியான மக்களுக்கும், குண்டுகளால் காயம்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் மக்களுக்கும் தமிழகமே வீரவணக்கம் செலுத்துகிறது. இந்த அரசாணை ஏன் மே 22ஆம் தேதியோ, அதற்கு அடுத்த நாளோ வெளியிடவில்லை? என்ற கேள்வி இப்போது எழுகிறது.
மக்களை அச்சுறுத்தி விடலாம். அவர்களுடைய போராட்ட உணர்வை நீர்த்துப்போகச் செய்துவிடலாம் என்று அரசு எதிர்பார்த்தது. அதனால்தான் இணையச் சேவையை முடக்கியது. போலீஸைக் குவித்தது. வீடுவீடாகச் சென்று இளைஞர்களையும், போராட்டக்காரர்களையும் அடித்து நொறுக்கி மிரட்டிப் பார்த்தது. ஆனால், எதுவும் தூத்துக்குடி மக்களை அசைக்க முடியவில்லை. அவர்கள் ஸ்டெர்லைட்டை மூடியே தீரவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்கள். ஸ்டெர்லைட்டை எதிர்த்து போராட்டத்தை தொடர்வோம் என்பதில் உறுதியாக இருந்தார்கள்.
பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு செல்ல அமைச்சர்களே பயந்தார்கள். ஒருவழியாக அமைதியை ஏற்படுத்திவிட்டதாக நினைத்து, பாதிக்கப்பட்டவர்களை பார்க்க அமைச்சர்கள் சென்றபோதுதான் அவர்களுடைய போராட்ட உணர்வு மங்கவே இல்லை என்பதையும், அரசுக்கு எதிரான மக்களுடைய கோபத்தை அடக்க முடியவில்லை என்பதையும் உணர்ந்தார்கள்.
அதுமட்டுமின்றி, வைகோவும், ஸ்டாலினும் 10 மாவட்ட மக்களைத் திரட்டி தூத்துக்குடி செல்லப் போவதாக அறிவித்தது அரசுக்கு மேலும் நெருக்கடியை ஏற்படுத்தியது. மேலும், சட்டமன்றத்தில் திமுக சார்பில் ஸ்டெர்லைட்டை மூட தீர்மானம் கொண்டுவரப் போவதாக கூறப்பட்டது. இது அரசுக்கு ஏற்படுத்திய நெருக்கடி காரணமாகவே அவசரமாக எடப்பாடி பழனிச்சாமி இந்த அறிவிக்கையை வெளியிட்டிருக்கிறார்.
எப்படியோ, மக்களுடைய போராட்ட உணர்வுக்கு கிடைத்த இந்த வெற்றியை உயிர்களை இழந்த வலியையும் மீறி வரவேற்போம்.