அண்ணாமலையின் ரபேல் வாட்ச் விவாதத்துக்கு உள்ளான நிலையில், தி.மு.க. அமைச்சர்களின் சொத்து விவரங்களை வெளியிடப் போவதாக அண்ணாமலை மிரட்டிக் கொண்டிருக்கிறார். ஆனால், அண்ணாமலைக்காக இதுவரை பா.ஜ.க. என்ன செலவு செய்தது என்ற விவரம் வெளியாகியுள்ளது. நூற்றுக்கணக்கான கோடிகள் அண்ணாமலைக்காக பா.ஜ.க. செலவு செய்துள்ளது. அவருக்காக ‘வார் ரூம்’ எனப்படும் கணினித் தொடர்பு மையங்கள் மூன்று இடங்களில் உருவாக்கப்பட்டுள்ளன. ஒரு வார் ரூம் உருவாக்க மூன்று கோடி ரூபாய் தேவை. ஒவ்வொரு வார் ரூமிலும் 80 கணிப்பொறி பட்டதாரிகள் மாதம் முப்பதாயிரம் ரூபாய் சம்பளத்தில் அமர்த்தப்பட்டுள்ளார்கள்.
முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான இடம், போலி நிதி நிறுவனமான சுரானாவுக்கு சொந்தமான இடம் மற்றும் பெங்களூருவில் உள்ள ஒரு இடம் ஆகிய மூன்று இடங்களில் வார் ரூம் எனப்படும் கணிப்பொறி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தற்பொழுது நான்காவது வார் ரூம் ஒன்றை சென்னை மவுண்ட் ரோட்டில் அமைக்க முடிவு செய்துள்ளார்கள்.
இந்த வார் ரூம் மூலம்தான் என் மீது தாக்குதல் நடத்துகிறார்கள் என காயத்ரி ரகுராம் குற்றம் சாட்டுகிறார். பெங்களூருவில் உள்ள வார் ரூம் மூலம் ‘அண்ணாமலை பிரதமராகத் தகுதியுள்ளவர்’ என்ற பிரச்சாரம் உத்தரப்பிரதேசம் போன்ற வட மாநிலங்களுக்குச் செல்கிறது. இவை ஒவ்வொன்றையும் பராமரிக்க லட்சக்கணக்கான ரூபாய் பா.ஜ.க.வால் செலவழிக்கப்படுகிறது. இது தவிர தமிழகத்தில் இயங்கும் நூறு யூடியூப் சேனல்களை பா.ஜ.க. வாங்கியிருக்கிறது. ஒவ்வொரு யூடியூப்பருக்கும் மாதம் மூன்று லட்சம் ரூபாய் சம்பளம் அளிக்கப்படுகின்றது. இது மட்டுமில்லாமல், தி.மு.கவுக்கு தேர்தல் வேலை பார்த்த பிரஷாந்த் கிஷோர் போல, அவரிடமிருந்து பிரிந்து தற்பொழுது காங்கிரசுக்கு வேலை பார்க்கும் சுனில் மற்றும் வாராகி ஆகியோரை அண்ணாமலைக்காக பா.ஜ.க. களமிறக்கியுள்ளது. சுனில், அண்ணாமலைதான் அடுத்த பிரதமர் என்கிற பிரச்சாரத்தை மேற்கொள்கிறார். வாராகி தமிழகம் முழுவதும் சாதிக் கலவரத்தை உருவாக்கி, அதில் பா.ஜ.க எப்படி பலனடைய முடியும் என ஆய்வு மேற்கொண்டு வியூகம் அமைக்கிறார்.
இதுதவிர பேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களில் அண்ணாமலையின் பேச்சை ஒலிபரப்ப அந்தப் பேச்சுக்கு லைக்குகள் பெற பல அமெரிக்கன் கம்பெனிகள் பா.ஜ.க.வால் உபயோகப்படுத்தப்பட்டு வருகின்றன. சமீபத்தில் ட்விட்டருக்கு தலைமையேற்ற ‘எலான் மாஸ்க்’ அண்ணாமலைக்கு போலி லைக்குகள் போடும் கம்பெனிகளைக் கண்டுபிடித்து அவற்றை நீக்கிவிட்டார். அதனால் அண்ணாமலைக்கு ட்விட்டரில் லைக்குகள் குறைந்துவிட்டது என்கிறார்கள் பா.ஜ.க.வினர்.
கடந்த சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க. சார்பில் போட்டியிட்ட ஒவ்வொரு வேட்பாளருக்கும் பதினைந்து கோடி ரூபாய் பா.ஜ.க. கொடுக்க அண்ணாமலைக்கு மட்டும் நாப்பத்தைந்து கோடி ரூபாய் கொடுத்திருக்கின்றது. எந்த ஊரில் ஆர்ப்பாட்டம், போராட்டம் என எதை நடத்தினாலும் பா.ஜ.க. தலைமையகத்திலிருந்து அறுபது லட்சம் ரூபாய் மீட்டர் போட்டுவிடுவார் அண்ணாமலை. அதுபோல இந்த வருடத்தில் இருபது மீட்டிங் போட்டு பதினைந்து கோடி ரூபாய் வாங்கியிருக்கிறார் அண்ணாமலை.
அண்ணாமலைக்கென மூன்று செயலாளர்கள் இருக்கின்றார்கள். அவர்களுக்கு மாதம் ஒரு லட்சம் ரூபாய் சம்பளம் பா.ஜ.க கொடுக்கின்றது. வீட்டுச் செலவுக்கென மாதம் பதினைந்து லட்சம் ரூபாய் வாங்குகிறார் அண்ணாமலை. இது தவிர முக்கியமான சந்திப்புக்களை ஜெயலலிதாவுக்கு மிகவும் பிடித்தமான கொடநாடு பகுதியில் உள்ள ஒரு பங்களாவில்தான் அண்ணாமலை நடத்துவார். ஜெமினி கணேசனுக்குச் சொந்தமான அந்த பங்களாவுக்கு லட்சக்கணக்கான ரூபாய் வாடகை கொடுக்கிறது பா.ஜ.க. இதுதவிர, கார் செலவு, கம்ப்யூட்டர் செலவு, உணவுச் செலவு என லட்சக்கணக்கில் பில் போடுகிறார் அண்ணாமலை.
இப்படித்தான் அண்ணாமலை என்கிற உருவத்தைப் பராமரித்து அவர் வாயால் திராவிட இயக்கங்களைத் திட்ட வைத்து பா.ஜ.க.வை வளர்க்க கோடிக்கணக்கான ரூபாயை பா.ஜ.க. செலவு செய்து கொண்டிருக்கின்றது. அண்ணாமலையோ, “நான் சாணக்கியன்” என அடிக்கடி சொல்கிறார். அமர் பிரசாத் ரெட்டி, எந்த வேலையாக இருந்தாலும் நான் முடித்துத் தருகிறேன் என மக்களை ஏமாற்றும் நிதி நிறுவனங்களான சுரானா, ஐ.எப்.எஸ்., ஆருத்ரா போன்றவைகளை காப்பாற்றுகின்றார். இதில் கோடிக்கணக்கான ரூபாய் பணத்தை அண்ணாமலைக்கு வருமானமாக அமர் பிரசாத் ரெட்டி வசூலித்துத் தருகிறார். இவையெல்லாம் கேசவ விநாயகம் மூலம் புகாராக பா.ஜ.க. தலைமைக்குச் சென்றுள்ளது.
கோடிக்கணக்கான ரூபாய் செலவு செய்து பா.ஜ.க.வை வளர்க்க அண்ணாமலை என்கிற ஒரு பிம்பத்தை உருவாக்கினால் அவர் திருட்டுத்தனமாக கோடிக்கணக்கான ரூபாயை போலி நிதி நிறுவனங்கள் மூலம் வசூல் செய்கிறார் என்கிற தகவலை அறிந்து பா.ஜ.க. மேலிடம் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை நேரடியாக தமிழக பா.ஜ.க. அலுவலகத்துக்கே அனுப்பி வைத்தது. யாரிடமும் எதுவும் பேசாத அமைதி டைப்பான நிர்மலா சீதாராமனிடம் கட்சி நிர்வாகிகள் அண்ணாமலை மீதான புகார்களைக் கொட்டித் தீர்த்துவிட்டனர். அதையெல்லாம் கவனமாகக் குறிப்பெடுத்துக் கொண்டார் நிர்மலா சீதாராமன். நிதியமைச்சர் நிர்மலாவைச் சந்திக்க மிகவும் தாமதமாக வந்த அண்ணாமலை, அவரை அவமானப்படுத்துவது போல நடந்து கொண்டார். அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் டெல்லிக்குப் பயணமான நிதியமைச்சர் நிர்மலா, அண்ணாமலைக்கு எதிராக மத்திய பா.ஜ.க.வில் பேச இருக்கிறார் என்கிறார்கள் பா.ஜ.க.வினர்.
"நான் ஐ.பி.எஸ். ஆபீசர் ஆனதிலிருந்து இதுவரை உள்ள சொத்துக் கணக்குகளைக் காட்டுவேன்” என ரபேல் வாட்சுக்கு பில் கேட்ட விவகாரத்தில் அறிவித்துள்ளார் அண்ணாமலை. ஒவ்வொரு வருடமும் ஐ.பி.எஸ். ஆபீசராக இருப்பவர் தனது சொத்து விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும். அதனால், 2021 தேர்தலில் போட்டியிட்ட அண்ணாமலை தேர்தல் கமிஷனில் தனது சொத்து விவரங்களை தாக்கல் செய்துள்ளார். இன்னும் ஒரு வருடம்தான் அவர் கணக்குக் காட்டவில்லை.
அதைக் காட்டுவதென்ன பெரிய விசயமா? பா.ஜ.க. அண்ணாமலைக்காக செலவு செய்த நூற்றுக்கணக்கான கோடிகளுக்கு அண்ணாமலையால் கணக்குக் காட்ட முடியுமா? அமர் பிரசாத் ரெட்டி மத்திய அரசின் பேரைப் பயன்படுத்தி தமிழகத்தில் அண்ணாமலையுடன் சேர்ந்து அடித்த பெரும் கொள்ளைக்கு கணக்கு உண்டா? என பா.ஜ.க.வினர் கேள்வி எழுப்புகிறார்கள்.