மறைந்த முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான கலைஞரின் 100வது பிறந்தநாள் இந்த ஆண்டு முழுவதும் கொண்டாடப்படும் என முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதனையொட்டி தமிழகம் முழுவதும் கலைஞர் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அம்பத்தூர் கிழக்கு பகுதி கொரட்டூர் - சுவாதி மஹாலில் அமைச்சர் சேகர்பாபு கலைஞர் நூற்றாண்டு விழாவை ஏற்பாடு செய்திருந்தார். அந்த விழாவில் நக்கீரன் ஆசிரியர், நடிகர் நாசர், பேராசிரியர் அருணன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு பேசினார்கள்.
அதில் பேசிய நக்கீரன் ஆசிரியர், “2009 ஆம் ஆண்டு அன்று தனியார் மருத்துவமனையில் கலைஞரின் முதுகுத்தண்டில் அறுவை சிகிச்சை ஒன்று நடந்தது. அறுவை சிகிச்சை முடிந்த பிறகு மருத்துவமனையில் தொலைக்காட்சியில் எனது பேட்டியை பார்த்து உடனே எனக்கு தொலைப்பேசி வாயிலாக அழைத்தார். நான், அறுவை சிகிச்சை முடிந்த கலைஞரிடம் நலம் விசாரித்தேன். அப்போது நான் பேட்டியில் விஜயகாந்தை பற்றி பேசியதை குறித்து என்ன நடந்தது என்று கேட்டார். நான் நேரில் வந்து சொல்கிறேன் என்று கூறிவிட்டேன். மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆன அடுத்த நாள் என்னை நேரில் அழைத்து என்ன நடந்தது விவரித்து சொல்லுங்கள் என்று கலைஞர் என்னிடம் கேட்டார்.
அப்போது நான் கலைஞரிடம், ‘சத்யராஜ் மகனான சிபிராஜ் திருமணத்திற்கு சென்றிருந்தேன். அப்போது எனக்கு எதிரில் வந்த விஜயகாந்தை சந்தித்து பேசினேன். அப்போது நக்கீரன் பத்திரிகை படிச்சீங்களா? என்று விஜயகாந்திடம் கேட்டேன். அதற்கு அவர் பத்திரிகை படிக்கும் பழக்கம் எனக்கு கிடையாது எனக் கூறிவிட்டார். நான், ‘5 முறை முதல்வராக இருக்கும் கலைஞர் காலையில் 4 மணிக்கு பத்திரிகை படித்து விடுகிறார். நீங்கள் அடுத்த முதல்வராக வேண்டும் என்று சொல்லிவிட்டு பத்திரிகை படிக்காமல் இருக்கீங்களே? குறைந்தபட்சம் இன்றைக்கு உங்கள் கட்சியை பற்றி வந்த செய்தியாவது நக்கீரன் பத்திரிகையில் படியுங்கள் என்று கூறினேன். விஜயகாந்தும் படிக்கிறேன் என்று சொன்னார்’ என்பதை கலைஞரிடம் விவரித்து சொன்னேன்.
தொலைக்காட்சியின் மூலம் நான் பேசியதை பார்த்த கலைஞர், படுக்கையில் இருந்த அந்த வலியிலும் தன்னை பற்றி வந்த செய்தியை தொலைப்பேசி மூலம் சம்பந்தப்பட்டவர்களை தொடர்பு கொண்டு கேட்கிறார் என்பது என்னை மிகவும் ஆச்சரியப்படுத்துகிறது.” எனப் பேசினார்.