Skip to main content

பாஜகவை அதிர வைத்த காங்கிரஸ்... தேர்தல் முடிவு சொல்லும் அதிர்ச்சி ரிப்போர்ட்!

Published on 29/10/2019 | Edited on 29/10/2019

அதிக இடங்களில் வெற்றி பெற்றிருந்தாலும் மத்திய ஆளுங்கட்சியான பா.ஜ.க.வுக்கு இரண்டு மாநில சட்டமன்றத் தேர்தல் என்பது பரிதவிப்பையே ஏற்படுத்தியிருக்கிறது. ஹரியானா, மகாராஷ்டிரா இரு மாநில சட்டமன்றத் தேர்தலுடன், பீகார், குஜராத், அஸ்ஸாம், ஹிமாச்சலப் பிரதேசம், பஞ்சாப், கேரளா, சிக்கிம், ராஜஸ்தான், அருணாச்சலப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், ஒரிஸா என பல மாநில சட்டமன்ற இடைத்தேர்தல்களும், இவற்றுடன் இரண்டு பாராளுமன்றத் தொகுதிகளுக்கும் சேர்த்தே தேர்தல் நடந்தது. இதன் முடிவுகள்தான் பா.ஜ.க.வை அதிர வைத்தது. அதிலும் குறிப்பாக, ஹரியானா.
 

bjp



2014-ஆம் ஆண்டுக்கு முன் அந்த மாநிலத்தில் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை வெறும் நான்கே நான்கு. அதன்பின், 47 சீட்டுகள் வரை வென்று ஆச்சரியப்படுத்தியது. காங்கிரஸ் 25 சீட்டுகள், ஓம்பிரகாஷ் சவுதாலாவின் லோக்தளம் கட்சி 12 சீட்டுகள் பெற்றது. ஹரியானாவில் பெரும்பான்மை சாதியான ஜாட் சாதியைச் சேராதவரான, குஜ்ஜார் பிரிவைச் சேர்ந்த ஆர்.எஸ்.எஸ். தலைவர் மனோகர்லால் கட்டார் முதல்வரானார். அவர் பதவியேற்றவுடன் சோனியாவின் மருமகன் ராபர்ட் வதேரா, ஹரியானா மாநில முன்னாள் முதல்வர் (காங்கிரஸ்) பூபிந்தர்சிங் ஹுடா ஆகியோர் மீது நிலமோசடி வழக்கைத் தொடர்ந்தார். நெருக்கடிகளால் காங்கிரஸ் ரொம்பவே திணறியது.

 

election



டெல்லிக்குப் பக்கத்தில் உள்ள அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த மாநிலமான ஹரியானாவில் கடந்த 21-ந் தேதி நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், கடந்த முறை 47 சீட்டை பெற்றிருந்த பா.ஜ.க., மெஜாரிட்டியைப் பெற முடியாமல் 40 சீட்டுகளைப் பிடிப்பதற்கே பெரும்பாடுபட்டது. கடந்த முறை 25 சீட்டுகள் பெற்றிருந்த காங்கிரஸ், இம்முறை 30 என்ற எண்ணிக்கையை நெருங்கியது. இம்முறை ஓம்பிரகாஷ் சவுதாலாவின் மகன் துஷ்யந்த் சவுதாலாவின் ஜே.ஜே.பி. என்கிற கட்சி 12 இடங்களிலும், சுயேட்சைகள் 7 தொகுதிகளிலும் வெற்றி பெற்றனர்.

 

result



காங்கிரசும் மற்றவர்களும் வெற்றி பெற்ற தொகுதிகள் அனைத்தும் குர்கான், பரிதாபாத், சோனா மற்றும் பஞ்சாப் மாகாண எல்லைப்புற பகுதிகளில் அமைந்துள்ளன. இவையெல்லாம் மாருதி உட்பட பல பெரிய தொழிற்சாலைகள் அமைந்துள்ள பகுதி. ஒரு சமயத்தில் குர்கான் பகுதியில் உள்ள தொழிற்சாலைகளில் இருந்து 6 லட்சம் பேர் வெளியே வருவார்கள். தற்போது, இந்தப் பகுதி முழுவதும் மோடி அரசின் பொருளாதார கொள்கையால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. மாருதி தொழிற்சாலை உற்பத்தியை குறைத்ததோடு பல உபரி தொழிற்சாலைகள் மூடப்பட்டு வருவது இந்தப் பகுதியை மிகக் கடுமையாகப் பாதித்தது.

அமெரிக்காவில் பிசினஸ் மேனேஜ் மென்ட் படித்துவிட்டு அரசியலுக்கு வந்த துஷ்யந்த் சவுதாலா, மென்பொருள் கம்பெனிகள் நிறைந்த இந்தப் பகுதியில் தொழிலாளர்களைத் திரட்டினார். அவருடைய பேரணிக்கு பத்து லட்சம் பேர் திரண்டனர். இந்தியாவே ஆச்சரியத்துடன் அவரை திரும்பிப் பார்த்தது. துஷ்யந்தும் ஹரியானாவில் பெரும்பான்மை சாதியான ஜாட் சாதியைச் சேர்ந்த காங்கிரசுடன் சேர்ந்து ஏற்கனவே தொழிற்சாலை மூடல், வேலையின்மையால் வெந்து வெதும்பிய ஹரியானா மக்களை பா.ஜ.க.விற்கு எதிராக திருப்பிவிட்டதுதான் இந்த தேர்தல் முடிவுக்கு காரணம். இது அருகிலுள்ள மாநிலங்களின் சட்ட மன்றத் தேர்தல்களிலும் பா.ஜ.க. வுக்கு சவாலாகும் என்கிறார் டெல்லி பத்திரிகையாளரும் தெஹல்காவின் முன்னாள் ஆசிரியருமான மேத்யூ சாமுவேல்.


கவர்னரைப் பயன்படுத்தி சுயேட்சைகளை விலைக்கு வாங்கி குதிரைபேரம் நடத்திதான் ஹரியானாவில் பா.ஜ.க. ஆட்சி அமைக்க முடியும். அப்படி ஏதாவது செய்தால் அது அடுத்த ஆண்டு நடக்கும் டெல்லி, பீகார் மாநிலங்களின் தேர்தலில் எதிரொலிக்கும் என்கிறார்கள் டெல்லி பத்திரிகையாளர்கள். பீகார் மாநிலத்தில் இப்போது 5 சட்டமன்றங்களுக்கு இடைத்தேர்தல் நடந்தது. அதில் பாராளுமன்றத்தில் நரேந்திர மோடியை கடுமையாக எதிர்க்கும் இசுலாமிய கட்சியின் அசாதுதின் ஓவைசியின் வேட்பாளரான கம்ரய் ஹுடா, பா.ஜ.க.வின் ஸ்வீட்டியை கிஷன்கஞ்ச் என்கிற கிருஷ்ணர் பெயரில் அமைந்த தொகுதியின் இடைத்தேர்தலில் தோற்கடித்துள்ளார். அதேபோல் லாலு பிரசாத்தின் ராஷ்ட்ரிய ஜனதாதள் மற்ற தொகுதிகளில் வெற்றிபெற்றுள்ளது.


பஞ்சாபில் தேர்தல் நடைபெற்ற மூன்றில், காங்கிரஸ் இரண்டில் வெற்றி பெற்றுள்ளது. ராஜஸ்தானிலும், சத்தீஸ்கரிலும் இடைத் தேர்தல்களில் காங்கிரஸ் வெற்றிபெற்றுள்ளது. கேரளாவில் 3 தொகுதிகளில் கம்யூனிஸ்ட்டுகளும் 2 தொகுதிகளில் காங்கிரசும் வெற்றி பெற்றுள்ளது. ஒரிசாவில் பிஜு ஜனதாதளம், தெலுங்கானாவில் தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி வெற்றிபெற்றுள்ளது. எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையின்மை இன்னமும் நீடிப்பதால் உத்திரப்பிரதேசத்தில் பா.ஜ.க. வெற்றிபெற்றுள்ளது என்றாலும் உ.பி.யில் முலாயமின் சமாஜ்வாதி கட்சியும், மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி யும் கடும் போட்டியை பா.ஜ.க.விற்கு கொடுத்துள்ளது. அசாம், ஹிமாச்சலப் பிரதேசம், மகாராஷ்டிரா ஆகிய மூன்று மாநிலங்களிலும் பா.ஜ.க. வெற்றிபெற்றுள்ளது.

மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலில் காங்கிரசில் கோஷ்டிச்சண்டை மிகக்கடுமையாக இருந்தது. அங்கு பிரிதிவிராஜ் சவுகான், அசோக் சவான் உட்பட நான்குபேர் முதல்வர் வேட்பாளர்களாக விரும்பினர். தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரை, முதல்வர் வேட்பாளர் என காங்கிரஸ் முன்னிறுத்தியிருந்தால் காங்கிரஸ் வெற்றிபெற்றிருக்கும். பா.ஜ.க பட்னாவிஸ் அரசு மீண்டும் அமைந்தாலும், கடந்த சட்டமன்றத்தில் 217 ஆக இருந்த பா.ஜ.க.-சிவசேனா கூட்டணியின் பலம் 56 சீட்டுகள் குறைந்து 161 ஆக சுருங்கியுள்ளது. கடந்தமுறை 56 ஆக இருந்த காங்கிரஸின் கூட்டணிப் பலம் 102 ஆக உயர்ந்துள்ளது. ஹரியானா, மகாராஷ்டிரா ஆகிய 2 மாநிலங்கள் தவிர மொத்தம் 51 சட்ட மன்றத்திலும் 2 எம்.பி. தொகுதிகளுக்கும் நடைபெற்ற இடைத்தேர்தலில் அதிக இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. காங்கிரசுக்கு தலைமை (தல) இல்லாத நிலையிலும், பா.ஜ.க.வைப் பதற வைக்கும் வகையில், மக்களின் தீர்ப்பு அமைந்துள்ளது.