சசிகலாவை நீக்கிவிட்டு அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளராகியிருக்கிறார் தினகரன். கட்சியையும் அவரது பொதுச்செயலாளர் பதவியையும் தலைமைத் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்வதற்கான கடிதம் தரப் பட்டுள்ளது. இந்த அதிரடி மாற்றத்தின் பின்னணிகள் பகீர் ரகம். அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளராக இருந்த சசிகலா, சிறைக்குச் செல்லும்முன் கட்சியின் துணைப் பொதுச்செயலாளராக தினகரனை நியமித் துச் சென்றார். ஒரு கட்டத்தில் கட்சியின் பொதுக் குழு, செயற்குழுவைக் கூட்டி சசிகலா, தினகரன் இருவரையும் நீக்கியதுடன் கட்சியை இ.பி.எஸ்.சும் ஓ.பி.எஸ்.சும் கைப்பற்றினர். இதனை எதிர்த்து தேர்தல் ஆணையத்திலும் நீதிமன்றத்திலும் சசிகலா தொடர்ந்த வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இதே காலகட்டத்தில் அ.ம.மு.க. எனும் பெயரில் தனி அமைப்பைத் தொடங்கிய தினகரன், அதன் பொதுச்செயலாளராக சசிகலாவையும், துணைப் பொதுச்செயலாளராக தன்னையும் நியமித்துக்கொண்டார். இந்த நிலையில்தான் நாடாளுமன்றத் தேர்தலும் இடைத்தேர்தலும் முடிந்த மறுநாள் (ஏப்ரல் 19) அ.ம.மு.க.வின் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தைக் கூட்டி, பொதுச்செயலாளர் பதவியிலிருந்து சசிகலாவை அகற்றிவிட்டு அப்பதவியில் தன்னை நியமித்துக் கொண்டார் தினகரன். இந்த முடிவு சசிகலாவை நம்பி தினகரனை ஏற்றுக்கொண்ட அக்கட்சி நிர்வாகிகளை கொந்தளிக்க வைத்திருக்கிறது.
இது குறித்து விசாரித்தபோது, "ஆலோசனைக் கூட்டத்தில், பொதுச்செயலாளராக தினகரன் தேர்வு செய்யப்பட்டிருப்பதற்கு ஒப்புதல் அளிக்கும் கடிதத்தில் மா.செ.க்களின் கையெழுத்து பெறப்பட்டது. இதற்காகத்தான் இந்தக் கூட்டம் என்பதை முன்கூட்டியே அறிந்த மா.செ.க்கள் மட்டும் உடனடியாக கையெழுத்திட்டனர். அவர்களிடம் உற்சாகம் இருந்தது. ஆனால், எதற்காக கூட்டம் கூட்டப்பட்டுள்ளது என்பதை அறிந்திராத மா.செ.க்கள் சிலர், "சின்னம்மாவை நீக்கிவிட்டோமா? இந்த மாற்றத்துக்கு அவரிடம் ஒப்புதல் பெறப் பட்டதா?' என்கிற சந்தேகத்தை எழுப்பினர். ஆனால், திருப்தி கரமான பதில் கொடுக்கப்பட வில்லை. அதேசமயம், அதிருப்தி குறித்து ஆளாளுக்கு பேசிக்கொண்டார்களே தவிர, பெரிதாக எவ்வித விவாதமும் நடக்கவில்லை''‘என்கின்றனர் இந்த மாற்றத்தை ஜீரணிக்க முடியாத மா.செ.க்கள்.
அ.ம.மு.க.வின் செய்தித் தொடர்பாளர் சி.ஆர்.சரஸ்வதியிடம் இது குறித்துப் பேசிய போது, "உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதல்படி சில சட்ட நடவடிக்கைகளை எடுப்பதற்கும், தேர்தல் ஆணையத்தில் கட்சியைப் பதிவு செய்வதற்கும்தான் இந்த மாற்றம் செய்யப்பட்டது. அ.தி.மு.க.வை உரிமை கோரும் போராட்டத்தை சசிகலா தொடரவேண்டியிருப்பதால் அவரது ஒப்புதலோடுதான் இந்த மாற்றத்தைச் செய்திருக்கிறார் தினகரன். அ.ம.மு.க.விலிருந்து சசிகலா நீக்கப்படவில்லை. கட்சியின் தலைவர் பதவி அவருக்காக காத்திருக்கிறது'' என்கிறார் அழுத்தமாக.
அதேநேரத்தில், அ.ம.மு.க.விலுள்ள சசிகலா ஆதரவாளர்களை இந்த மாற்றம் கொந்தளிக்க வைத்திருக்கிறது. இது குறித்து விசாரித்தபோது நம்மிடம் பேசிய கட்சியின் முன்னாள் தலைமைக் கழகப் பேச்சாளர் வழக்கறிஞர் அக்னீஸ்வரன், "சசிகலா ஜெயிலுக்குப் போனபிறகு, அ.தி.மு.க.வை உடைத்து அதனைக் கைப்பற்ற திட்டமிட்டிருந்தார் தினகரன். இப்போது, குடும்பத்தினரின் வலியுறுத்தலில் இந்த மாற்றத்தை செய்திருக்கிறார். சின்னம்மாவுக்காக இவரை ஏற்றுக்கொண்ட தொண்டர்கள் இந்த மாற்றத்தை ஏற்கவில்லை.
"அ.தி.மு.க. பொதுச்செயலாளர் பதவியிலிருந்து தன்னை நீக்கியது செல்லாது' என சின்னம்மா போட்டிருக்கும் வழக்கையும் இரு கட்சிகளில் பதவியில் இருக்க முடியாது என்பதையும் சுட்டிக்காட்டித்தான் அ.ம.மு.க.விலிருந்து சசிகலா விடுவிக்கப்பட்டிருப்பதாக தினகரன் தரப்பில் சொல்கிறார்கள். அப்படியென்றால், தினகரனும் அ.தி.மு.க.வில் பதவியில் இருப்பதால் அதற்கும் சேர்த்துதான் வழக்கு. அதனால் அ.தி.மு.க. பதவியிலிருந்து இவர் விலகிவிட்டாரா? இவர் மட்டும் இரு கட்சியில் இரு பதவியில் எப்படி தொடரமுடியும்? ஆக, அ.ம.மு.க.வுக்கும் சின்னம்மாவுக்கும் எதிர்காலத்தில் எவ்வித சம்பந்தமும் இல்லை என்பதை நிலை நிறுத்தவே இந்த சதித்திட்டத்தை அமல்படுத்தியுள்ளார். அ.ம.மு.க.வில் ஒரு கோடி தொண்டர்கள் இருப்பதாகச் சொல்லும் தினகரன், அவர்களிடம் கருத்துக் கேட்டு அல்லது பொதுக்குழுவை கூட்டி ஒப்புதல் பெறவில்லை. இவரது நியமனத்தை எதிர்த்து வழக்குத் தொடர்வேன்'' என்கிறார் உறுதியாக.
தினகரனின் இத்தகைய முடிவுகள் குறித்து அ.ம.மு.க. மேலிட தொடர்பாளர்களிடம் விசாரித்தபோது, "தேர்தல் அறிவிக்கப்பட்டதற்குப் பிறகு சசிகலாவை சந்தித்த தினகரன், தேர்தலில் எடப்பாடி குரூப்பை ஒழித்து வெற்றிபெற மிகப்பெரிய தொகை தேவைப்படுகிறது. திவாகரனிடமும் விவேக்கிடமும் இருப்பதை என்னிடம் தருவதற்கு உத்தரவிடுங்கள் என கேட்டார். சசிகலா சம்மதிக்கவில்லை. மாறாக, அக்கா (ஜெயலலிதா) பாதுகாத்த கட்சி உன்னால் தோற்றுப்போனது என்கிற அவப்பெயர் வரக்கூடாது. அதனால் எடப்பாடியிடம் சமாதானமாகி "அ.தி.மு.க.வோடு இணைந்து தேர்தலை கவனி' என உத்தரவிட்டார் சசிகலா. இதனை தினகரன் ஏற்கவில்லை.
இதனையடுத்து, தனது மனைவி அனுராதாவுடன் அவர் ஆலோசிக்க, "தேர்தல் செலவுகளை நாமளே பார்த்துக்கொள்ளலாம். சசிகலாவை இனியும் நாம் நம்பக்கூடாது. தேர்தலுக்குப் பிறகு கட்சி பொறுப்பிலிருந்து அவரை நீக்கிவிட்டு கட்சியை முழுமையாக உங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வாருங்கள்' என தெரிவிக்கப் பட்ட யோசனையைத்தான் இப்போது நிறைவேற்றியுள்ளார் தினகரன். சசிகலாவுக்கு எடப்பாடி செய்த துரோகத்தை இப்போது தினகரனும் செய் திருக்கிறார்'' என சுட்டிக்காட்டி அதிர்ச்சியளிக்கின்றனர்.