தமிழ்நாட்டிலுள்ள 18 சட்டமன்ற தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெற்றது. இன்னும் 4 தொகுதிகளுக்கு வரும் மே 19 அன்று தேர்தல் நடக்க இருக்கிறது. 2016 தேர்தல் முடிவுகள் வெளியானது முதல் தற்போதைய நிலை வரை முழு விவரங்கள்...
2016ம் ஆண்டு 232 தொகுதிகளில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. அதில் அதிமுக வெற்றி பெற்றது. அந்தத்தேர்தலில் அதிமுக கூட்டணி 134 இடங்களையும், திமுக கூட்டணி 98 இடங்களையும் பிடித்தது. இதில் கருணாஸ், தனியரசு, தமீமுன் அன்சாரி ஆகிய மூவரும் அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தில் வென்றவர்கள். வேறெந்த கட்சியும் வெற்றிபெறவில்லை. தஞ்சை மற்றும் அரவக்குறிச்சியில் பணப்பட்டுவாடா அதிகம் நடப்பதாகக் கூறி தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது, திருப்பரங்குன்றத்தில் வெற்றிபெற்ற எம்.எல்.ஏ. சீனிவேல் பதவி ஏற்கும் முன்பே இறந்தார். அதனால் அதிமுக எம்.எல்.ஏக்கள் எண்ணிக்கை 134ல் இருந்து 133 ஆக குறைந்தது. மூன்று காலியிடங்கள் இருந்தன.
காலியாக இருந்த மூன்று தொகுதிகளுக்கும் கிட்டத்தட்ட ஆறுமாத இடைவெளியில் இடைத்தேர்தல் வைக்கப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இந்த மூன்று தொகுதிகளிலும் அதிமுகவே வென்றது. இதனால் அதிமுக கூட்டணி எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை 136 ஆக உயர்ந்தது.
அதன்பின் 2016 டிசம்பர் 5 அப்போதைய முதல்வர் ஜெயலலிதா உடல்நலக்குறைவால் இறந்தார். இதனால் ஆர்.கே.நகர் தொகுதி காலியானது. அதிமுக கூட்டணி எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை 135 ஆக குறைந்தது. அதன்பின் 2017 டிசம்பரில் ஆர்.கே. நகர் தேர்தல் நடந்தது. இதில் அறுதிப்பெரும்பான்மையில் சுயேட்சை வேட்பாளர் டிடிவி தினகரன் வெற்றிபெற்றார். இதனால் அதிமுக கூட்டணி 135, திமுக கூட்டணி 98, சுயேட்சை 1 என எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை அமைந்தது. அதன்பின் ஓபிஎஸ் பதவியில் இருந்து இறக்கப்பட்டார். தர்மயுத்தம், சசிகலா சிறை, தர்மயுத்தம் முடிந்து ஈ.பி.எஸ்., ஓ.பி.எஸ். இணைந்தது இவையெல்லாம் முடிந்தபின்பு, டிடிவி தினகரனுக்கு எம்.எல்.ஏக்கள் ஆதரவு தெரிவித்தனர், தினகரன் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என புதுக்கட்சி தொடங்கியது என பல அதிரடி அரசியல் மாற்றங்கள் நிகழ்ந்தன.
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக அப்போது ஆளுநராக இருந்த வித்யாசாகர் ராவிடம் டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேர் புகார் கொடுத்தனர். இதையடுத்து புகார் கொடுத்த 18 எம்.எல்.ஏக்களை சட்டப்பேரவைத் தலைவர் தனபால் கடந்த பிப்ரவரி மாதம் தகுதி நீக்கம் செய்தார். உயர்நீதிமன்றத்திற்கு இவ்வழக்கு வந்து, விசாரணை நடைபெற்றுகொண்டிருந்தது, முதலில் விசாரித்த இரு நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பை வழங்கியதால், அவ்வழக்கு மூன்றாவது நீதிபதியிடம் சென்றது. மூன்றாவது நீதிபதி ஆகஸ்ட் 31 வரை இரு தரப்பினரையும் விசாரித்துவிட்டு தீர்ப்பை ஒத்திவைத்தார்.
இதற்கிடையில் திருப்பரங்குன்றம் எம்.எல்.ஏ-வான ஏ.கே.போஸ் காலமானார். அதைத்தொடர்ந்து திமுக தலைவர் கலைஞர் ஆகஸ்ட் 7ம் தேதி உடல்நலக்குறைவால் காலமானார். இதனால் திருப்பரங்குன்றம், திருவாரூர் தொகுதிகள் காலியானது. அப்போதுவரை அதிமுக கூட்டணி எம்.எல்.ஏக்கள் எண்ணிக்கை 134, திமுக கூட்டணி எம்.எல்.ஏக்கள் எண்ணிக்கை 97, சுயேட்சை 1, காலியிடங்கள் 2 என ஆனது.
இந்நிலையில்தான், அக்டோபர் 25 அன்று, 18 எம்.எல்.ஏக்களின் தகுதிநீக்கம் செல்லும் என மூன்றாவது நீதிபதி உத்தரவிட்டார். இதனால் அதிமுக 116, திமுக 97, சுயேட்சை 1(தினகரன்), என்பது எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கையாகவும், காலியிடங்கள் 20 ஆகவும் ஆனது.
1998ல் ஓசூர் அருகே பாகலூரில் கள்ளச்சாரய விற்பனையை கண்டித்து போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் ஈடுபட்டபோது பேருந்துகள் மீது கல்வீசியதாக பாலகிருஷ்ண ரெட்டி மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த எம்.பி., எம்.எல்.ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சென்னை சிறப்பு நீதிமன்றம், 2019 ஜனவரி மாதம், 7ம் தேதி அன்று அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டிக்கு தண்டனை வழங்கப்பட்டது. இதனால் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் எண்ணிக்கை 115, திமுக எம்.எல்.ஏ.க்கள் எண்ணிக்கை 97, சுயேட்சை 1 என்ற நிலையில், 21 இடங்கள் காலியாக இருந்தது.
மார்ச் 20ம் தேதி கோயம்புத்தூரிலுள்ள சூலூர் தொகுதி எம்.எல்.ஏ. கனகராஜ் மாரடைப்பால் காலமானார். இதைத்தொடர்ந்து அதிமுக 114, திமுக 97, சுயேட்சை 1 என்றானது. தற்போதுவரை 234 தொகுதிகளில், 212க்கு (114+97+1) எம்.எல்.ஏ.க்கள் இருக்கின்றனர். 22 தொகுதிகள் காலியாக இருக்கிறது. இந்த 22 தொகுதிகளில் 18க்கு தற்போது தேர்தல் நடந்து முடிந்திருக்கிறது. 4 தொகுதிகளுக்கு மே 19ம் தேதி தேர்தல் நடக்கிறது.