![rrrr](http://image.nakkheeran.in/cdn/farfuture/TcESSTkIofjnEXGyAXlXHtCMrJ3sZY0d9j4P2hos5Ik/1604901278/sites/default/files/inline-images/800_24.jpg)
காய்ச்சல்- நீர்ச்சத்து குறைபாடு என்று சொல்லப்பட்டு சிகிச்சைக்குள்ளான ஜெயலலிதாவின் மரணத்தை போலவே கரோனாவால் பாதிக்கப்பட்டு மரணமடைந்த அமைச்சர் துரைக்கண்ணுவின் மரணமும் சர்ச்சைகளில் சிக்கி தவிக்கிறது என்கிறார்கள் அவரது சொந்த தொகுதியான பாபநாசம் தொகுதி மக்கள்.
அக்டோபர் 12ஆம் தேதி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தாயாரின் இறப்புக்கு ஆறுதல் சொல்ல பாபநாசத்தில் இருந்து சேலத்தை நோக்கி காரில் பயணித்துக் கொண்டிருந்த அமைச்சர் துரைக்கண்ணுவிற்கு நெஞ்சுவலி மற்றும் மூச்சுத்திணறல் ஏற்பட்டது. அவரை விழுப்புரம்- முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரியில் சேர்த்தனர். அங்கிருந்து சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
31ஆம் தேதி நள்ளிரவு 11.45 மணிக்கு அமைச்சர் மரணம் அடைந்ததாக அறிவிக்கப்பட்டது. ஆனால் 28ஆம் தேதியே தஞ்சை பகுதியைச் சேர்ந்தவர்களின் வாட்ஸ் ஆப்பில், அமைச்சர் மரணம் அடைந்துவிட்டார் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம் என கண்ணீர் அஞ்சலி போஸ்டர்கள் ஷேர் செய்யப்பட்டன. சென்னையில் உள்ள தங்களுக்கு வேண்டியவர்களிடம், அமைச்சரின் நிலை குறித்து தஞ்சை வாசிகள் விசாரித்தபடி இருந்தனர். அதனால்தான், அவருடைய அதிகாரப்பூர்வ மரண அறிவிப்பு வெளியானபோது, அமைச்சரின் மரணத்தில் மர்மம் இருக்கிறது அவர் மூன்று நாட்களுக்கு முன்பே மரணம் அடைந்துவிட்டார், அதைத் தாமதமாக அறிவிக்கிறார்கள் என சமூக வலைத்தளங்களில் பரபரப்பான செய்திகள் வெளியாகின.
![ddd](http://image.nakkheeran.in/cdn/farfuture/keAoxvYVhf5H5agnmIZjcXJ7fMOYLbj1hUU86ZD-u_Y/1604901431/sites/default/files/inline-images/331_1.jpg)
இந்த செய்திகள் குறித்து விளக்கம் அறிய நாம் அமைச்சரின் மகனான ஐயப்பன் என்கிற சண்முகப்பிரபுவை தொடர்பு கொண்டோம். அமைச்சர் இறப்பின் துக்கத்தால், இன்று வரை செல்போனில் யாருடனும் ஐயப்பன் பேசுவதில்லை என்கிற பதிலே நமக்கு கிடைத்தது. அமைச்சரின் பி.ஏ.வான நாகப்பன் என்பவரையும் தொடர்பு கொண்டோம். அவரும் செல்போனை எடுக்கவில்லை. அமைச்சரின் மூத்த மகனான வீரபாண்டியனை தொடர்பு கொண்டோம். வேளாண்மைத் துறையில் விதை ஆய்வு உதவி இயக்குநராக உள்ள அவரும் நமக்கு பதில் அளிக்கவில்லை. அமைச்சரின் மருமகனான கனகாதரனைத் தொடர்பு கொண்டபோதும் பதில் கிடைக்கவில்லை.
முயற்சியைக் கைவிடாமல், திருவிடைமருதூர் அ.தி.மு.க. நிர்வாகியான அசோக் என்பவர் மூலம் அமைச்சரின் மகன் ஐயப்பனிடம் பேச முயற்சித்தபோதும், தந்தை இறந்த சோகத்தில் இருப்பதால் அமைச்சரின் மகன் யாருடனும் பேசுவதில்லை என திருவிடைமருதூர் அசோக் மூலம் நமக்கு பதில் கிடைத்தது.
![ddd](http://image.nakkheeran.in/cdn/farfuture/gVosWlz7726eHuD2RyPq5mya5sDP4JGfI0fjSO26BUA/1604901442/sites/default/files/inline-images/332_5.jpg)
அமைச்சர் துரைக்கண்ணு பாபநாசம் தொகுதி மக்களிடம் நற்பெயரை பெற்றவர். அதனால்தான் தொடர்ந்து மூன்று முறை அந்தத் தொகுதி எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டார். 2016ல் அவரை ஜெயலலிதா அமைச்சராக்கினார். அவருக்கு நான்கு பெண் பிள்ளைகள், இரண்டு ஆண் பிள்ளைகள். அதில் துபாய் மற்றும் சிங்கப்பூரில் பணியாற்றிவிட்டு தமிழகம் வந்த ஐயப்பன் மீது மட்டும் அமைச்சரின் துறை சார்ந்த புகார்கள் கிளம்பின. வெளிநாட்டு தொடர்புகள், லோக்கல் ரவுடிசம் என மேலும் புகார்களில் சிக்கிய ஐயப்பனுக்கும் அ.தி.மு.க.வின் சீனியர் தலைவரான வைத்திலிங்கத்துக்கும் இடையே மோதல் இருந்தது. ஆனால் துரைக்கண்ணு எடப்பாடியின் நம்பிக்கைக்கு உரியவராக திகழ்ந்தார்.
டெல்டா பகுதியில் சீனியரான வைத்திலிங்கம், உணவு அமைச்சர் காமராஜ் ஆகியோரைவிட வேளாண் அமைச்சராக இருந்த துரைக்கண்ணுவைத்தான் எடப்பாடி அதிகம் நம்பினார் என துரைக்கண்ணுவின் ஆளுமையைப் பற்றியும் அவரது குடும்பத்தைப் பற்றியும் நம்மிடம் சொல்கிறார்கள் பாபநாசம் தொகுதி மக்கள்.
![ddd](http://image.nakkheeran.in/cdn/farfuture/nLb8X4ZQo1ivraeRSokQWhKhAw2Q1aSGt3N7b-aWDxo/1604901458/sites/default/files/inline-images/333_10.jpg)
அதற்கு பிறகு என்ன நடந்தது? ஏன் துரைக்கண்ணுவின் மரணத்தில் ஒரு மர்மம் உலா வந்தது? என அ.தி.மு.க.வின் தலைமைக் கழக நிர்வாகிகளிடம் விசாரித்தோம். எடப்பாடி முதல்வரான பிறகு, அமைச்சர்கள் அவரவர் துறை சார்ந்து வளம் கொழித்தனர். கட்டுப்பாடோ, நெருக்கடியோ இல்லாவிட்டாலும் மேலிடத்துக்கும் கட்சி நிதியாகவும் மாமூல் பாய்ந்தது. வேளாண்துறையில் நடை முறைப்படுத்தப்பட்ட திட்டங்களால் கிடைத்த பர்சேன்டேஜ்களைக் கொண்டு கட்சிக்கு அளித்த நிதியையும், டெல்டா மாவட்டங்களில் வருகிற சட்டமன்றத் தேர்தலை அ.தி.மு.க. எதிர்கொள்வதற்கு தேவைப்படும் வெயிட்டான அமவுண்ட்டையும் கண்டெய்னர் மூலமாக துரைக்கண்ணுவிற்கு அ.தி.மு.க. தலைமை அனுப்பி வைத்தது.
மிக மிக ரகசியமாக வைக்கப்பட்ட இந்த பணம் பற்றிய தகவல் துரைக்கண்ணுவிற்கும் அதனை அவரிடம் கொடுத்த அ.தி.மு.க. தலைமைக்கும்தான் தெரியும். இந்நிலையில்தான், திடீர் மூச்சிரைப்பு ஏற்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட துரைக்கண்ணு சுயநினைவை இழந்தார். சுயநினைவு வந்தவுடன், அவரிடம் ஏற்கனவே தரப்பட்டதை எங்கே வைத்திருக்கிறார் என்கிற தகவலைப் பெற ஒரு டீம் காவேரி மருத்துவமனையிலேயே தங்க வைக்கப்பட்டிருந்தது.
அதுதவிர துரைக்கண்ணுவின் குடும்பத்தினரிடமும் இதுகுறித்து தீவிரமாக விசாரிக்கப்பட்டது. துரைக்கண்ணுவின் அதிகாரப்பூர்வ மான இல்லத்தில் நடைபெற்ற இந்த விசாரணை வெளியே தெரிந்துவிடக்கூடாது என்பதற்காக துரைக்கண்ணுவின் குடும்பத்தினர் அனைவருக்கும் கொரோனா என்றும், அதனால் அவர்கள் தனிமைப்படுத்தப் பட்டுள்ளனர் என்கிற செய்தி வெளியே பரப்பப் பட்டது. ஆனால், அவர்களிடம் ரெய்டு பாணியில் மிரட்டல் விசாரணை நடத்திக்கொண்டிருந்தது அ.தி.மு.க மேலிடம்.
துரைக்கண்ணு குடும்பத்தினரில் அ.தி.மு.க. தலைமைக்கு, ஐயப்பன் மீதான சந்தேகம் அதிகமாகவே இருந்தது. முதல்வர் வரை நெருக்கமாக பழகும் வாய்ப்பை பெற்ற ஐயப்பன் மாவட்ட அ.தி.மு.க.வின் இளைஞர்கள் இளம் பெண்கள் பாசறையின் செயலாளராக இருந்தார். அப்பா விடம் கொடுத்து வைத்தவற்றைப் பற்றி விசாரித்த போது, அவர் தனக்கு எதுவும் தெரியாது என கையை விரித்துவிட்டார். ஷாக் ஆன அ.தி.மு.க தலைமை, எங்கே இருக்கிறது எனக் கண்டுபிடிக்கும் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த நம்பிக்கைக்குரிய மாண்புமிகுவிடம் ஒப்படைத்தது. கரோனா என தனிமைப்படுத்தப்பட்டு விசாரிக்கப்பட்ட குடும்பத்தாரை கவனிக்கும் பொறுப்பு, தஞ்சைக்கு பக்கத்து மாவட்ட மந்திரியிடம் தரப்பட்டது. துரைக்கண்ணுவின் தனிப்பட்ட பாதுகாவல ரான போலீசை கையில் எடுத்தனர். துரைக்கண்ணு எங்கெல்லாம் செல்வார்? யாரிட மெல்லாம் பேசுவார்? என அவரது தொலைபேசி விவரங்களும் எடுக்கப்பட்டன. சுயநினைவை இழந்து, எக்மோ மற்றும் செயற்கை சுவாச கருவிகளால் உயிர் பிழைத்திருந்த துரைக்கண்ணு வின் உடல்நிலை மிக மிக மோசம் அடைந்தது.
சசிகலாவின் தம்பி மகன் ஜெய் ஆனந்த், எடப்பாடி வீட்டுக்கு சென்று அவரது தாயார் மறைவுகுறித்து துக்கம் விசாரித்தபோது, துரைக் கண்ணுவின் மனைவி எடப்பாடி லைனில் வந்து, துரைக்கண்ணு மிக மிக மோசமான நிலையில் இருக்கிறார் எனக் கதறலுடன் தெரிவித்தார். அவசரமாக எடப்பாடி புறப்பட்டார். எந்த நேரமும் மரண அறிவிப்பு வரும் என்ற எதிர்பார்ப்பு கட்சியினரிடம் இருந்தது. அமைச்சர் சுயநினைவின்றி படுத்திருக்க, அவர் நல்ல நினைவில் இருந்தபோது கொடுத்தவை எங்கே உள்ளன என்கிற தேடுதல் தொடர்ந்தது.
![ddd](http://image.nakkheeran.in/cdn/farfuture/7BCSBuNDywPzvty6nUcgDexiV7rxhcnmrYtzyKCn16Q/1604901515/sites/default/files/inline-images/334_4.jpg)
31ஆம் தேதி மாலையில் பக்கத்து மாவட்ட அமைச்சர், நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டிருந்தார். அவருக்கு சென்னையில் இருந்து ஒரு செய்தி வாட்ஸ் அப்பில் பகிரப்பட்டது. உடனே அவர் மதுரைக்கு வந்து அங்கிருந்து விமானம் மூலம் சென்னைக்கு வந்தார். தேடியது கிடைத்துவிட்டது என்கிற மெசேஜ்தான் அவரது அவசரப் பயணத்திற்கு காரணம். அவர் சென்னை வந்ததும், துரைக்கண்ணுவின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடம் என மருத்துவமனை யின் அறிவிப்பு வெளியானது. நள்ளிரவு நெருங்கும்போது, துரைக்கண்ணுவின் மரணம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அவரிடம் ரகசியமாக தரப்பட்டவை எங்கே எனக் கண்டறிந்து மீட்ட பிறகுதான், அரசு மரியாதையுடன் சொந்த ஊரில் அடக்கம் செய்யப்பட்டார் துரைக்கண்ணு என்கிறது அ.தி.மு.க. வட்டாரம்.
பாபநாசம் தொகுதியில் சாதாரண மக்கள் பேசிக்கொள்ளும் செய்திகள் பற்றிய துரைக்கண்ணுவின் குடும்பத்தாரின் கருத்துகளை அறிய மறுபடியும் அவர்களை தொடர்பு கொண்டோம். அவர்களில் யாரும் தற்போது பேசத் தயாராக இல்லை. கருத்துகளைத் தெரிவித்தால் வெளியிடத் தயாராக இருக்கிறோம்.
சொந்த தொகுதியில் செல்வாக்கு பெற்றிருந்த அமைச்சரின் மரண அறிவிப்பின் தாமதம் குறித்து உள்ளூர் மக்களுக்கே தெரியக்கூடிய அளவிற்கு, ஆளுந்தரப்பின் நடவடிக்கைகள் இருந்துள்ளன. மீட்கப்பட்டது எவ்வளவு இருக்கும் என விசாரிக்கையில், பாபநாசம் தொகுதி மக்கள் 150சி என்கிறார்கள், 300சிக்கு குறையாது என்கிறார்கள் அ.தி.மு.க தலைமைக் கழக நிர்வாகிகள்.
-தாமோதரன் பிரகாஷ், துரை.மகேஷ், செல்வக்குமார்