இரண்டு வருடங்களுக்கு முன்பு 'அமேசான் பென் டூ பப்ளிஷ்' என்றால் அமேசானில் விற்கப்படும் ஏதோ ஒரு பொருள் என்றுதான் பலரும் நினைத்திருப்பர். ஆனால் சென் பாலன் என்ற மருத்துவர் ஒருவர் தனது நூலை அதில் பதிவேற்றி, முதல் பரிசாக ஐந்து லட்ச ரூபாய் வென்ற பிறகுதான் தமிழ் இணைய உலகத்தின் கவனம் இந்தப் போட்டியின் மீது திரும்பியது.
பல தளங்களிலும் வலுவாக கால் பதித்து வரும் அமேசான், இ புக் அல்லது இணையவழி புத்தகங்கள் மீது வாசகர்களின் கவனத்தை ஈர்க்க உருவாக்கியது தான் இந்தப் போட்டி. முதல் வருடம் பெரிய போட்டியோ ஆரவாரமோ இன்றி நடந்து முடிந்தது பென் டூ பப்ளிஷ். ஆனால் அடுத்த வருடம் (2019) பொறி பறந்தது என்று சொன்னால் மிகையாகாது. இரண்டாவது வருடமே இப்படியொரு வரவேற்பு தமிழில் வரும் என்று அமேசானே எதிர்பார்த்திருக்காது. அந்தளவிற்கு எழுதிக் குவித்துவிட்டார்கள் இணையத் தமிழர்கள்.
முதலில் எப்படிப்பட்ட போட்டி இது என்று பார்த்துவிடுவோம். புத்தகங்கள் பதிப்பிக்கப்பட்டு வெளியாகும். மக்கள் வாங்கி படிப்பார்கள். அதை வைத்து சில போட்டிகள் நடக்கும். சிறந்த புத்தகங்களுக்கு விருதுகள் கொடுக்கப்படும். இந்த வழக்கத்தை நாம் பார்த்திருப்போம். இதை அப்படியே இன்டர்நெட் தளத்திற்கு எடுத்து வந்தது அமேசான். அதுதான் 'பென் டூ பப்ளிஷ்'. அதாவது நீங்கள் ஒரு புத்தகம் எழுத வேண்டும். அது பத்தாயிரம் வார்த்தைகளுக்கு மேற்பட்ட நீண்ட வடிவமாகவோ பத்தாயிரம் வார்த்தைகளுக்குட்பட்ட சிறிய வடிவமாகவோ இருக்கலாம். புத்தகம் புனைவு, கட்டுரைத் தொகுப்பு என எந்த வகையிலும் இருக்கலாம்.
இப்படி எழுதி முடிக்கப்பட்ட புத்தகத்தை, அமேசான் தளத்திலுள்ள கிண்டில் டைரக்ட் பப்ளிஷிங் என்ற சுட்டியில் சென்று நேரடியாக அமேசானில் பதிவேற்ற வேண்டும். இப்படி பதிவேற்றப்படும் புத்தகங்கள் அனைத்தும் அமேசான் கிண்டில் (இ புத்தகங்களுக்கான அமேசானின் தனிச்செயலியில் இதனைப் பிரபலப்படுத்தத் தான் இந்தப் போட்டியே) செயலியில் பதிவாகிவிடும்.
இப்படிப் பதிவேற்றப்பட்ட இ புத்தகங்கள் அனைத்தும், பதிவேற்றப்பட்ட நாளில் இருந்து முதல் சுற்றில் கலந்து கொள்ளும். இறுதி நாளாக அறிவிக்கப்பட்ட நாள் வரையில் இந்த முதல் சுற்று நடைபெறும். இந்தச் சுற்றில் புத்தகங்களுக்குக் கிடைக்கப்படும் விமர்சனங்கள், புத்தகங்களின் விற்பனை, ரேட்டிங் போன்ற விஷயங்களை வைத்து அடுத்த சுற்றுக்கு ஐந்து புத்தகங்கள் தேர்வாகும். அந்த ஐந்து புத்தகங்களில் இருந்து சிறந்து மூன்று புத்தகங்களை நடுவர்கள் தேர்ந்தெடுப்பர். இதுதான் அமேசானின் பென் டூ பப்ளிஷ் போட்டி.
இதன் முக்கிய சிறப்பம்சம் என்னவென்றால் உலகின் எந்த மூலையில் இருந்தும் இந்தப் போட்டியில் நீங்கள் கலந்து கொள்ள முடியும். அதே சமயம், இத்தகைய பரபரப்பான போட்டி உலகளவில் மூன்றே மூன்று மொழிகளில் தான் நடக்கிறது. ஆங்கிலம், இந்தி மற்றும் தமிழ். வெற்றி பெறுபவர்களுக்கு ரொக்கப் பரிசு, இதர பரிசுகள் என பல கௌரவங்களை வழங்குகிறது அமேசான்.
இதன் இந்த வருடப் போட்டியில் தான் பொறி பறந்தது. அந்தளவிற்குப் புத்தக எண்ணிக்கையிலும், விற்பனையிலும், விமர்சனங்களிலும் மற்ற மொழிகளை விட தமிழ் நின்று விளையாடியது. உலகின் பல மூலைகளில் இருந்தும் எண்ணற்றோர் கலந்து கொண்டனர். சில நாட்களுக்கு முன்பு வெளியான இந்தப் போட்டி முடிவுகளில்தான் தமிழில், பத்தாயிரம் வார்த்தைகளுக்குட்பட்ட புத்தகப் பிரிவில் முதல் பரிசை வென்றுள்ளார் 'நக்கீரன்' பொறுப்பாசிரியர் திரு. கோவி. லெனின். இதற்கு அவர் எழுதிய புத்தகம் ‘2 கே கிட் – திருவள்ளுவர் ஆண்டு’.
இந்த தலைமுறைக்கு பெரிதும் பரிச்சயப்படாத ஆனால் தெரிந்து கொண்டாக வேண்டிய வரலாற்றை இயல்பான ஒரு புனைவாகச் சொல்கிறது இந்தப் புத்தகம். மொத்த குறுநாவலுமே தமிழ்நாட்டில் இருக்கும் ஒரு தெருவைப் பற்றியதுதான். ஒரு தெரு. தமிழகத்தில் எங்கு வேண்டுமாலும் இருக்கக் கூடிய ஒரே தெரு. வருடங்கள் உருண்டோட உருண்டோட, எத்தகைய மாறுதல்களைச் சந்திக்கிறது. அதன் மனிதர்களுக்கு என்னென்ன முன்னேற்றங்கள் ஏற்படுகின்றன என்பதுதான் இந்தக் கதை.
ஒரு தெருவை வைத்து என்ன பெரிதாகச் சொல்லிவிட முடியும் என்று தோன்றலாம். ஆனால் இந்தப் புத்தகம் தனித்து நிற்பதற்கான காரணமே இதுதான். அந்த ஒரு தெருவின் கதை மூலமாக ஒட்டுமொத்த தமிழ் நாட்டின் சமூக, பொருளாதார மாற்றங்களும் முன்னேற்றங்களும் தெளிவாகப் பேசப்பட்டிருக்கிறது. குறிப்பாக திராவிடக் கட்சிகளின் வரவிற்குப் பிறகு சமூகத்தின் பலவேறுபட்ட பிரிவினரும் எப்படிச் சமத்துவ ஏணியின் அடுத்தடுத்த படிகளுக்கு ஏறினர், எப்படிப் பழைய பஞ்சாங்கங்கள் மாற்றி எழுதப்பட்டன, சமூக பொருளாதார மாற்றங்கள் எப்படிச் சம வாய்ப்பையும் முன்னேற்றத்தையும் வழங்கின என்பதற்கான ஒரு ஆதாரமாக நிற்கிறது இந்தப் புத்தகம்.
ஆனால் இது எதுவும் பிரச்சார நேரங்களில் சொல்லப்படும் சாதனைகளைப் போல ஒன்று, இரண்டு என பாயிண்ட் பை பாயிண்ட்டாகச் சொல்லப்படவில்லை. சமூக ஏற்றத்தாழ்வுகள் நிறைந்த ஒரு தெரு. அதன் மனிதர்கள். ஆண்டுகள் கடக்க கடக்க, அந்தத் தெருவிற்கும் அதன் மனிதர்களுக்கும் நிகழும் மாற்றங்கள். அதன் வழியாகக் களையப்படும் ஏற்றத்தாழ்வுகள். நிமிர்ந்தெழும் சமத்துவம். இதன் வழியாகவே திராவிடக் கட்சிகள் தமிழ்ச் சமூகத்தில் கொண்டு வந்த முன்னேற்றங்களைச் சொல்கிறது 2 கே கிட்.
ஆசிரியர் கோவி. லெனின் இதற்காகப் பயன்படுத்தியிருக்கும் கதாப்பாத்திரங்களும், குறிப்பிட்டு சொல்லியிருக்கும் நிகழ்வுகளும் சுவாரசியமானவை மட்டுமல்ல ஆழமானவையும் கூட. இரண்டடுக்கு வீடு, கழிவறை கூட இல்லாத வீடு, பூசாரி, நடுத்தர வர்க்கத்து மனிதர்கள் என தமிழ்நாட்டில் கடந்த நாற்பதாண்டுகளில் வாழ்ந்த எவருக்கும் எளிதில் அந்நியோன்யமாகி விடக்கூடிய ஒரு தெருவையும் கதாப்பாத்திரங்களையும் கொண்டே இந்தக் கதையைக் கட்டமைத்துள்ளார்.
சாலைகள், கழிவு கொட்டகைகள், பின் கழிவறை எனத் தெருவில் நடக்கும் மாற்றங்களும், இட ஒதுக்கீட்டில் படிப்பு, வெளிநாட்டு வேலை என மனிதர்களின் வாழ்வில் நடக்கும் மாற்றங்களும் திணிக்கப்படாமல் தன்னியல்பாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஒரு புனைவிற்கேயுரிய சுவாரசியம் குறையாமலும் சொல்லவேண்டிய கருப்பொருளின் ஆழம் அகலாமலும் எழுதப்பட்டுள்ளது "2 கே கிட் – திருவள்ளுவர் ஆண்டு". புத்தகம் முழுக்க இழையோடியபடி வரும் நகைச்சுவை இதன் மற்றோர் சிறப்பம்சம்.
இப்படி ஆரம்பத்தில் இருந்து சிரித்து ரசித்து படிக்க வைக்கும் புத்தகம், அதன் கடைசிப் பக்கத்தில் மிகப்பெரும் உணர்வலைகளை நெஞ்சில் ஏற்படுத்துகிறது. தமிழ்ச் சமூகத்தின் சமகால அவலங்களில் ஒன்றை எடுத்துக் கொண்டு அதை இந்தக் கதையில் போக்கோடு இயல்பாகச் சேர்த்ததோடு மட்டுமல்லாமல், இறுதி வரியின் மூலம் மறதி தட்டிப்போன நம் மனக்குளத்தில் பெரும் கல்லைப் போட்டு சஞ்சலத்தை ஏற்படுத்துவதென்பது ஒரு புனைவாசிரியரின் கைவண்ணம் மட்டுமல்ல, ஒரு சமூக ஆசிரியரின் அக்கறையும் கூட. இரண்டையும் செழுமையமாக நிறைவேற்றியிருக்கிறார் ஆசிரியர் கோவி. லெனின்.
நாம் பார்த்த, நாம் நடந்த, நாம் வளர்ந்த, நாம் வாழ்ந்த ஒரு தெருவின் கதையைப் படிப்பதே மிக நெகிழ்வான ஒரு வாசிப்பனுபவம். அப்படிப்பட்ட ஒரு தெருவின் கதைக்கு உலகளாவிய அங்கீகாரம் கிடைத்திருப்பதென்பது மகிழ்ச்சி மட்டுமல்ல, பெருமையும் கூட. இதனைச் சாத்தியப்படுத்திய 'நக்கீரன்' பொறுப்பாசிரியர் கோவி. லெனின் அவர்களுக்கு 'நக்கீரன்' சார்பில் எண்ணற்ற வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம். நமது திராவிடத் தெருக்களின் கதையை உலகின் பலகோடி தெருக்களுக்கு கொண்டு சென்று மகுடம் சூட்டியதற்கு அந்தத் தெருக்களின் வாழ்த்துகளும் கோவி.லெனினுக்கு உரித்தாகும்.