தள்ளி வைக்கப்பட்டிருந்த வேலூர் நாடாளுமன்ற தொகுதிக்கான தேர்தல் கடந்த 5ம் தேதி நடைபெற்றது. இதற்கான வாக்குப்பதிவு நேற்று காலையில் தொடங்கியது. தொடக்கம் முதலே அதிமுக ஆதிக்கம் செலுத்தி வந்த நிலையில், 11 மணிக்கு மேல் வெற்றி திமுகவின் பக்கம் நகர்ந்தது. அது கடைசி ரவுண்ட் வரை தொடர்ந்தது. திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் 4,85,340 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் ஏசிஎஸ் 4,77,199 வாக்குகளும் பெற்றார்.வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில் சுமார் 8,141 வாக்குகள் அதிகம் பெற்று திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் வெற்றி பெற்றார். இந்நிலையில் இந்த தோல்வியை குறித்து அதிமுக அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், "ஏ.சி.சண்முகம் மொத்தம் 4,77,199 வாக்குகள் பெற்று, மிக மிக குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்திருக்கிறார். ஆனாலும் இது கழகத்தை பொறுத்தவரை வெற்றி தான் என்பதை யாரும் மறுக்கமுடியாது" என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இதுதொடர்பாக இன்று வண்டலூரில் பேட்டியளித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வேலூரில் வெற்றி பெற்றது அதிமுக தான் என்று ஒன்றை வரியில் கூறிவிட்டு சென்றுள்ளார். இதுதொடர்பான கருத்து மோதல்கள் இணையத்தில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இதுதொடர்பாக ஒரு தரப்பினர் பேசும்போது, "கடந்த 2014 நாடாளுமன்ற தேர்தலில் ஏசிஎஸ் அந்த தொகுதியில் போட்டியிட்ட போது அவர் வாங்கி வாக்குகள் வாக்குகள் 3,24,324. அப்போது அதிமுகவை தவிர ஏறக்குறைய இதே கூட்டணியில்தான் அவர் தேர்தலை சந்தித்தார். பாஜக, தேமுதிக, பாமக ஆகிய கட்சிகள் அந்த கூட்டணியில் இருந்தது, அதிமுக மட்டும் தனியாக தேர்தலை சந்தித்தது. இப்போது அவர் வாங்கியுள்ள ஓட்டுக்கள் 4,77,199. கடந்த தேர்தலில் அவர் வாங்கிய வாக்குகளை விட 1,52,875 வாக்குகள் அதிகம் பெற்றுள்ளார். அதிமுக 2014ல் வாங்கிய 3,84,719 வாக்குகளில் பாதி கூட தற்போது ஏசிஎஸ் தரப்புக்கு விழ வில்லை. ஆனால் இதுபற்றி யாரும் தொலைக்காட்சிகளில் விவாதித்ததாக தெரியவில்லை. அதையும் தாண்டி கடந்த தேர்தலில் திமுக கூட்டணி அந்த தொகுதியில் மூன்றாம் இடத்தை பெற்றது. தற்போது முதல் இடத்துக்கு வந்தது. இதை பற்றியும் யாரும் பேசவில்லை. பேசாவிட்டாலும் தவறில்லை. அரசியலில் வாக்குகள் என்பது அப்போதை சூழ்நிலையும், காரணிகளையும் பொருத்தே விழும்! ஆனால், தோல்வி அடைந்த அதிமுக தாங்கள் ஜெயித்தாக சொல்லும் போது, கடந்த முறை 2.5 லட்சம் வாக்குகள் வாங்கி திமுக, இந்த முறை 4.77 லட்சம் வாக்குகள் வாங்கி உள்ளார்களே, இதைப்பற்றி ஏன் யாரும் பேசவில்லை. அது யாருக்கான தோல்வி என்பதை அரசியல் அறிந்தவர்கள் எளிதில் அறியலாம். ஆனால் ஒரு மாநிலத்தில் முதல்வராக இருப்பவரே வேலூரில் நாங்கள் வெற்றி பெற்றோம் என்று கூறுவது அவர்களின் அதீத தோல்வி பயத்தை காட்டுவதாகவே தெரிகிறது" என கூறுகிறார்கள்.
இதற்கு எதிராக பேசும் மற்றொரு தரப்பினர், "திமுக தரப்பினரிடம் இது வெற்றியா என்று கேட்டுப்பாருங்கள், அவர்கள் உண்மையை கூறுவார்களேயானால் நிச்சயம் இல்லை என்றுதான் சொல்வார்கள். நாடாளுமன்ற தேர்தலில் 35க்கும் மேற்பட்ட தொகுதிகளில் லட்சக்கணக்கான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற திமுக வெறும் 8 ஆயிரம் வாக்குகள் அதிகம் பெற்றால் அது வெற்றியா? அதுவும் வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் உள்ள 6 சட்டப்பேரவை தொகுதியில் திமுகவை சேர்ந்தவர்கள் 4 தொகுதியில் சட்டமன்ற உறுப்பினர்களாக இருக்கிறார்கள். இருந்து என்ன பயன். குடியாத்தம் தொகுதியில் சில மாதங்களுக்கு முன் நடந்த இடைத்தேர்தலில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற திமுக, தற்போது அந்த தொகுதியை அதிமுகவிடம் இழந்துள்ளது என்றால் மக்கள் மாறி உள்ளார்கள் என்று தானே அர்த்தம். அதுவும் இல்லாமல் வேலூர் திமுகவுக்கு எப்போதும் சாதகமான தொகுதியாவே இருந்து வருகிறது. துரைமுருகன் மண்ணின் மைந்தன். இருந்தும் ஏசிஎஸ் திமுகவுக்கு அதிர்ச்சி அளித்தார் என்பதே உண்மை. எனவே முதல்வர் அதிமுக வெற்றிபெற்றதாக கூறுவது உண்மைதான்" என்று அடித்து கூறுகிறார்கள். நிலைமை இப்படி இருக்கு, தேர்தல் ஆணைய இணையதளத்தில் திமுக வேட்பாளர் வெற்றிபெற்றதாகவே இதுவரை இருக்கிறது.