Skip to main content

“பணத்துக்காக பெற்றோரை வதைக்கும் பிள்ளைகளுக்காக...” - 'உடன்பால்' விமர்சனம்

Published on 27/12/2022 | Edited on 27/12/2022

 

Udanpaal movie review

 

நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஒரு முதன்மை கதாபாத்திரத்தில் சார்லி நடித்து வெளியாகியிருக்கும் திரைப்படம். இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில் ஓடிடியில் வெளியாகும் ‘உடன் பால்’ திரைப்படம் மக்களிடம் வரவேற்பைப் பெற்றதா?

 

தகப்பனார் சார்லிக்கு லிங்கா, தீனா, காயத்ரி என மூன்று பிள்ளைகள். இதில் லிங்காவும், காயத்திரியும்  திருமணமாகி அவரவர் குடும்பத்தோடு பல்வேறு இன்னல்களுக்கு இடையே கடன் பிரச்சனையோடு வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் கடன் பிரச்சனை தீர தங்களுடைய பூர்வீக வீட்டை விற்க முடிவு செய்கின்றனர். ஆனால் தான் வாழும் வீட்டை விற்க விடமாட்டேன் என முரண்டு பிடிக்கிறார் சார்லி. இதனால் கோபம் அடையும் அவரது மகன் லிங்கா செய்வதறியாது தவிக்கிறார். அந்த சமயம் பக்கத்தில் இருக்கும் ஒரு காம்ப்ளக்ஸ்க்கு வேலைக்குச் செல்கிறார் சார்லி. போன இடத்தில் அந்த காம்ப்ளக்ஸ் இடிந்து விழுந்து அதில் இருக்கும் நபர்கள் இடிபாடுகளில் சிக்கி இறந்து விடுகின்றனர். அந்த ஈடுபாடுகளில் சிக்கி தன் தந்தை சார்லியும் இறந்து விட்டதாக எண்ணி விடுகின்றனர் லிங்காவும், காயத்ரியும். 

 

அந்த சமயம் இறந்தவர்களின் குடும்பத்திற்கு அரசு சார்பில் 20 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்குவதாக டிவியில் பிளாஷ் நியூஸ் வருகிறது. இதைப் பார்த்த சார்லியின் பிள்ளைகள் அதை தங்களுக்குள் பிரித்துக் கொள்ள முடிவெடுக்கின்றனர். அந்த நேரம் பார்த்து சார்லி உயிரோடு வீட்டிற்கு திரும்பி வர அனைவரின் முகமும் வாடி விடுகிறது. இதை அடுத்து எதிர்பாராத விதமாக சிறிது நேரத்திலேயே சார்லி மாரடைப்பால் இறந்து விடுகிறார். இதைத் தொடர்ந்து இறந்து போன சார்லியை யாருக்கும் தெரியாமல் இடிந்து விழுந்த காம்ப்ளக்ஸ் உள்ளே போட்டுவிட்டால் தங்களுக்கு இழப்பீடு கிடைக்கும் என நம்பும் சார்லியின் பிள்ளைகள் அதற்கான முயற்சியில் இறங்குகின்றனர். இதையடுத்து அவர்களின் முயற்சி வெற்றி பெற்றதா, இல்லையா? என்பதே இப்படத்தின் மீதி கதை.

 

ஒரு சிறிய வீட்டுக்குள் ஐந்தாறு நடிகர்களை வைத்துக்கொண்டு மிகவும் காம்பாக்டாக ஒரு திரைக்கதையை அமைத்து அதை சிறப்பாக கையாண்டு ஜனரஞ்சகமான படமாகக் கொடுத்து படத்தை கரை சேர்த்திருக்கிறார் இயக்குநர் கார்த்திக் சீனிவாசன். சின்ன சின்ன முக பாவனைகள் வசன உச்சரிப்புகள் மூலம் பார்ப்பவர்களை ரசிக்க வைத்தது மட்டுமல்லாமல் கடைசியில் ஒரு நல்ல மெசேஜை கொடுத்து படத்திலிருந்து சற்றும் நகராதபடி பார்த்துக் கொண்டு ஃபீல் குட் படமாகக் கொடுத்திருக்கிறார் இயக்குநர் கார்த்திக். முதல் பாதி படம் ஆரம்பித்து வேகமாகச் சென்று நிறைவான படமாக முடிந்து இரண்டாம் பாதி சற்றே ஆங்காங்கே அயர்ச்சி ஏற்பட்டு, சில இடங்களில் தொய்வும் காணப்பட்டு, கொஞ்சம் ஜவ்வாக இழுக்கப்பட்டு கடைசியில் ஒரு நல்ல மெசேஜோடு முடிகிறது. முதல் பாதியில் எடுத்துக்கொண்ட சிரத்தை சற்று இரண்டாம் பாதியிலும் காட்டி இருந்தால் இந்தப் படம் இன்னமும் சிறப்பான படமாக மாறி இருக்கும்.

 

லிங்கா, விவேக் பிரசன்னா, தீனா, காயத்ரி, அபர்ணதி, அவர்களுடன் இருக்கும் குழந்தைகள், மயில்சாமி, சார்லியின் அக்கா மற்றும் சார்லி ஆகியோர் படத்தை முழுவதுமாக தாங்கி தங்களுக்கான படமாக மாற்றி பார்ப்பவர்களையும் ரசிக்க வைத்து மகிழ்வித்துள்ளனர். இதில் இருக்கும் ஒவ்வொருவரும் அவரவருக்கான ஸ்பேசில் மிகச் சிறப்பாக நடித்து ஒவ்வொரு காட்சியையும் மிக இயல்பான முறையில் கடந்து செல்லும்படி நடித்து பார்ப்பவர்களிடம் கைத்தட்டல் பெற்றுள்ளனர். எந்தெந்த இடத்தில் எந்தெந்த உணர்ச்சிகள் தேவையோ அதை சிறப்பாக வெளிப்படுத்தி எந்த இடத்திலும் தொய்வு ஏற்படாதபடி பயிற்சி இல்லாத நடிப்பை இப்படத்திற்கு கொடுத்து மிகப்பெரிய ப்ளஸ் ஆக மாற்றி இருக்கின்றனர். இதில் நடித்த அனைவருமே ஒரு தேர்ந்த நடிகர்களைப் போல் நடித்து அந்தந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கின்றனர். 

 

ஒரு சின்ன வீட்டுக்குள் எந்தெந்த இடத்தில் பிரேம்களை வைத்தால் சிறப்பாக இருக்கும் என எண்ணி அதை சிறப்பான முறையில் கையாண்டு காட்சிகளுக்கு வலு சேர்ப்பதுபோல் ஒளிப்பதிவு அமைத்திருக்கிறார் மதன் கிறிஸ்டோபர். இவரது நேர்த்தியான ஒளிப்பதிவு வீட்டிற்குள் இருக்கும் காட்சிகளை சிறப்பாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. அதேபோல் சக்தி பாலாஜியின் பின்னணி இசை ஒரு ஜனரஞ்சகமான படமாக இப்படத்தை மாற்றியுள்ளது. சில டிராஜெடியான காட்சிகளைக் கூட இவரது பின்னணி இசை கலகலப்பு ஊட்டியுள்ளது. ஒரு சிறிய வீட்டுக்குள் சின்ன சின்ன விஷயங்களைக் கூட சிறப்பாக கையாண்டு மிகவும் ரியலிஸ்டிக்கான ஒரு அனுபவத்தை கொடுத்திருக்கிறார் கலை இயக்குநர்

 

இன்றைய காலகட்டத்தில் பணத்துக்காக சில பெற்ற பிள்ளைகளே அவர்களது பெற்றோரை என்னவெல்லாம் செய்வார்கள் என்ற நிதர்சனமான  உண்மையை வெட்ட வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது இத்திரைப்படம். குறிப்பாக 'நீ எதை விதைக்கிறாயோ அதையே அறுவடை செய்வாய்' என்ற மிகப்பெரிய மெசேஜை இப்படம் வலியுறுத்தி இது போன்ற எண்ணம் உடைய பிள்ளைகள் பலருக்கு செருப்படி கொடுப்பதுபோல் இப்படம் அமைந்துள்ளது. அதுவே இப்படத்திற்கு மிகப்பெரிய ப்ளஸ் ஆக மாறி படத்தை கரை சேர்த்திருக்கிறது.

 

உடன் பால் - பாடம்!

 

 

சார்ந்த செய்திகள்