சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி, காயத்ரி உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த 24ஆம் தேதி வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்ற மாமனிதன் திரைப்படம், ஆஹா ஓடிடி தளத்திலும் தற்போது வெளியாகியுள்ளது. சிறப்புக்காட்சியில் படம் பார்த்த நடிகர் தம்பி ராமையா, கண் கலங்கியபடி வந்து சீனு ராமசாமியை கட்டித்தழுவினார்.
அதன் பிறகு உருக்கமாகப் பேசிய தம்பி ராமையா, “இயக்குநர் சீனு ராமசாமி வெகுஜன மக்களை எளிதாக கனெக்ட் செய்யக்கூடிய ஒரு அற்புதமான படத்தை எடுத்திருக்கிறார். இந்தப் படத்தை திரையரங்கில் பார்க்காததற்கு அவரிடம் மன்னிப்பு கேட்கிறேன். இந்த படத்தை மக்கள் அனைவரும் பார்க்க வேண்டும் என இயக்குநர் மிஷ்கின் திரும்பதிரும்ப சொல்லிக்கொண்டு இருந்தார். மிஷ்கினின் பாராட்டைத்தான் அளவுகோலாக வைத்து படம் பார்க்க வந்தேன். ஒவ்வொரு வசனத்தையும் மனதில் இருந்து சீனு ராமசாமி எழுதியிருக்கிறார். கமர்ஷியல் படம் எடுத்து பணம் சம்பாதித்தோம், கட்டிய மனைவி, குழந்தைகளை சந்தோஷப்படுத்தினோம் என்ற சிற்றின்ப வளையத்திற்குள் தன்னை உட்படுத்திக்கொள்ளாமல் பேரின்பம் என்று சொல்லக்கூடிய அளவிற்கு ஒரு படைப்பை படைத்திருக்கிறார் சீனு ராமசாமி. அவர்தான் உண்மையான மாமனிதன்.
பல இடங்களில் என்னுடைய அப்பாவை விஜய் சேதுபதி நினைவுபடுத்திவிட்டார். தந்தை தோற்ற இடத்தில் பிள்ளை ஜெயிப்பது ரொம்ப கஷ்டம் என்ற வசனம் என் உயிரையே உலுக்கிவிட்டது. என்னைவிட சின்னவராக இருக்கிறார், இல்லையென்றால் சீனு ராமசாமியின் காலைத் தொட்டு கும்பிட்டிருப்பேன். இவ்வளவு சின்ன வயதில் காயத்ரி ஏற்று நடித்த இந்தப் பாத்திரம் என்பது நடிப்பு சரித்திரத்தில் அற்புதமான விஷயம். வயதான காலத்தை அடைந்த பிறகு என் வாழ்க்கையில் நான் என்ன சாதித்தேன் என்று காயத்ரி யோசித்து பார்த்தால் மாமனிதன் படத்தில் நடித்ததை அவர் பெருமையோடு நினைவுகூரலாம். அனைவரும் குடும்பத்தோடு முகம் சுழிக்காமல் வீட்டில் இருந்தே மாமனிதன் படத்தைப் பாருங்கள். நிச்சயம் உங்களுக்குள் தன்னம்பிக்கையை ஏற்படுத்தி மகிழ்ச்சிக்கடலில் உங்களை ஆழ்த்தும்” எனத் தெரிவித்தார்.