
பிரபல பாடகியும் இளையராஜாவின் மகளுமான பவதாரிணி கடந்த ஆண்டு ஜனவரி 25ஆம் தேதி புற்றுநோய் பாதிப்பால் உயிரிழந்தார். இவர் மறைந்து ஓராண்டு கடந்த நிலையில் அவரின் நினைவு அஞ்சலி கூட்டம் நேற்று(12.02.2025) நடைபெற்றது. இதில் இளையராஜா, கங்கை அமரன், வெங்கட் பிரபு, கார்த்திக் ராஜா உள்ளிட்ட இசைக்கலைஞர்கள் பலர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வில் பவதாரிணி பாடிய பாடல்கள் பாடப்பட்டது. பின்பு அவரை பற்றிய நினைவுகளை இளையராஜா, கார்த்திக் ராஜா, கங்கை அமரன் உள்ளிட்ட பலர் எமோஷ்னலாக பகிர்ந்து கொண்டனர். பின்பு பவதாரிணி பெயரில் பெண்கள் மட்டும் இருக்கும் ஆர்கெஸ்ட்ரா குழு உருவாக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அதே சமயம் அவர் இசையமைத்த கடைசி படமான ‘புயலில் ஒரு தோணி’ படத்தின் இசை தட்டு இளையராஜாவால் வெளியிடப்பட்டது.
நிகழ்ச்சி முடிந்து செய்தியாளர்களிடம் பேசிய வெங்கட் பிரபு, “பவதாரிணியை ரொம்ப மிஸ் பன்றோம். அவள் பாடிய பாடல்களை பாடினார்கள். பெரியப்பா(இளையராஜா) இசையில் மட்டும் இல்லாமல் மற்ற மியூசிக் டைரக்டர்களிடம் பவதாரிணி பாடிய பாடல்களையும் பாடினார்கள். அதை பெரியப்பா முன்னாடி பாடினது ரொம்ப சந்தோஷமாக இருந்தது. முதல் முறையாக இது நடந்துள்ளது. இதை பார்க்கும் போது மியூசிக் என்பது எல்லாத்தையும் தாண்டிய ஒன்று என்பது தெரிந்தது.
போன ஜனவரியில் நான் பவதா எல்லாம் ஒன்றாக இருந்தோம். நான் பவதாவிடம் கோட் படத்தில் ஒரு பாடல் இருக்கு, நீ பாட வேண்டும் என்று சொன்னேன். அவளும் ஓ.கே. சொன்னால். ஆனால் அடுத்து ஒரு மாதத்திற்குள் தவறிவிட்டாள். அவளுக்கு கொடுத்த சத்தியத்தை நான் கடைப்பிடிக்க வேண்டும் என யுவனிடம் பேசி ஏ.ஐ. மூலம் பாட வைத்தோம். யுவனுடன் பவதா ரொம்ப நெருக்கம். யுவனை மியூசிக் டைரக்டராக உருவாக்க வேண்டும் என பவதாதான் ஊக்குவிப்பார். யுவனும் பவதாதான் என்னுடைய குரு எனச் சொல்வார். யுவன் இந்தியாவில் இல்லை. ஆனாலும் அவருடைய நினைவு எல்லாம் இங்கு தான் இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை” என்றார்.