Skip to main content

விஜயகாந்தின் ஃபேவரிட்... திடீர் எம்.எல்.ஏ... லாங் ப்ரேக்குக்குப் பிறகு ஆன்ஸ்கிரீனில் அருண்பாண்டியன்...

Published on 05/08/2020 | Edited on 05/08/2020
arun pandiyan

 

 

ஒரு காலத்தில் தமிழ் சினிமாவின் ஆக்‌ஷன் ஹீரோக்களின் வரிசையில் முக்கியமான இடத்தை பிடித்திருந்தவர் அருண் பாண்டியன். 1985ஆம் ஆண்டு சிதம்பர ரகசியம் என்னும் படத்தில் மூலம் நடிகராக அறிமுகமானவர் அதனை தொடர்ந்து பல படங்களில் நடித்தார். ‘ஊமை விழிகள்’, ‘இணைந்த கைகள்’ போன்ற படங்களில் ஆக்‌ஷனில் அதிரடி காட்டி ஆக்‌ஷன் ஹீரோவாக அவதாரம் எடுத்தார். விஜயகாந்திற்கு மிகவும் நெருக்கமான நண்பராக இருந்தவர் சினிமாவிலும் அவருடைய பானியை பின்பற்றினார். இருவரும் இணைந்தும் நடித்துள்ளனர். இவர் இயக்கிய ‘தேவன்’ படத்தில் அருண் பாண்டியனுக்காக விஜயகாந்த் கௌரவ தோற்றத்தில் நடித்தார். 

 

2011ஆம் ஆண்டு தமிழக தேர்தலில் ஜெயலலிதாவுடன், விஜயகாந்த் கூட்டணி வைத்தபோது அவருடைய தேமுதிக கட்சியின் பேராவூரணி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.வானார். இவருடைய திடீர் அரசியல் அவதாரம் பலருக்கு ஆச்சரியத்தை அளித்தது. அதேபோல, 2016ஆம் ஆண்டு தனது பதவியை ராஜினாமா செய்து அதிமுகவில் இணைந்தார். இதுவும் பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

 

இதற்கு முன்பே தீவிர சினிமாவிலிருந்து ஒதுங்கிக்கொண்ட அருண் பாண்டியன் ஐங்கரன் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் முக்கிய அங்கமாக செயல்பட்டார். பல படங்களை வெளியிட்டும், உரிமையை வாங்கியும் சினிமாவை தன்னுடன் வைத்துகொண்டு வந்தார். பின்னர், ஏ&பி என்னும் தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கினார். பல வருடங்கள் கழித்து படம் முழுவதும் நடிகராக நடிக்க உள்ளார் அருண் பாண்டியன். 

 

மலையாள சினிமாவில் ஹிட் அடித்த ‘ஹெலன்’ படத்தின் தமிழ் ரீமேக்கை பெற்ற அருண் பாண்டியன், அந்த படத்தில் அவரும் அவரது மகள் கீர்த்தி பாண்டியனும் இணைந்து நடிக்க உள்ளனர். இந்த படத்தின் ஷூட்டிங் தொடங்கப்பட்டு, கரோனா அச்சுறுத்தலால் தடைப்பட்டுள்ளது. கரோனா பிரச்சனைகள் முடிவடைந்தவுடன் முழுவதுமாக ஷூட்டிங் முடிக்கப்பட்டு ரிலீஸாகிறது...

 

 

சார்ந்த செய்திகள்