மூன்றாவது முறையாக ஹெச்.வினோத் இயக்கத்தில் 'துணிவு' படத்தில் நடித்து வருகிறார் அஜித். இப்படத்தில் கதாநாயகியாக மஞ்சு வாரியர் நடிக்க சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். போனிகபூர் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, விசாகப்பட்டினம், பாங்காக் உள்ளிட்ட நகரங்களில் நடைபெற்று வந்தது.
மேலும், இப்படத்தின் போஸ்ட் ப்ரொடக்சன் பணிகள் முழுவீச்சுடன் நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் உதயநிதியின் 'ரெட் ஜெயண்ட் மூவிஸ்' நிறுவனம் வெளியிடுகிறது. இப்படத்தில் அனிருத் 'சில்லா சில்லா' என்ற பாடலையும் மஞ்சுவாரியர் ஒரு பாடலையும் பாடியுள்ளனர்.
இந்நிலையில் 'துணிவு' படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் 'சில்லா சில்லா' பாடலின் லிரிக் வீடியோ வெளியாகி நல்ல வரவேற்ப்பை பெற்று வருகிறது. இப்பாடல் அனிருத் பாட வைசாக் என்பவர் வரிகள் எழுதியுள்ளார். துள்ளல் பாடலாக அமைந்துள்ள இப்பாடல் யூ-ட்யூபில் இதுவரை 7.8 மில்லியன் பார்வையாளர்களை கடந்து ட்ரெண்டிங்கில் முதல் இடத்தில உள்ளது. இப்படம் ஜிப்ரானின் 50வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படம் வருகிற பொங்கல் திருநாளை முன்னிட்டு திரைக்கு வரவுள்ளதாக அறிவிப்பு வெளியான நிலையில், ரிலீஸுக்கு இன்னும் சில வாரங்களே உள்ளதால் படத்தின் டீசர், ட்ரைலர் உள்ளிட்ட அப்டேட்டுகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.