Skip to main content

“ரூ.1 கோடி” - சைஃப் அலி கான் விவகாரத்தில் வெளிவந்த பகீர் பின்னணி

Published on 16/01/2025 | Edited on 16/01/2025
saif ali khan casr update

பாலிவுட்டின் முன்னணி நடிகரான சைஃப் அலி கான் மும்பை பாந்த்ரா பகுதியில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்த சூழலில் அவரை மர்ம நபர் ஒருவர் கத்தியால் குத்தியுள்ளார். அவரது இல்லத்தில் இன்று நள்ளிரவு 2.30 மணியளவில் மர்ம நபர் ஒருவர் புகுந்துள்ளார். அவர் திருட சென்றுள்ளதாக கூறப்படுகிறது. அவரை பார்த்ததும் சைஃப் அலி கான் அவருடன் சண்டையிட, அதில் அந்த மர்ம நபர்  சைஃப் அலி கானை கத்தியால் குத்திவிட்டு சென்றுள்ளார். 

பின்பு படுகாயமடைந்த சைஃப் அலி கான் அருகில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் இருந்தார். அவருக்கு ஆறு இடங்களில் கத்தி குத்தப்பட்டுள்ளதாகவும் அதில் இரண்டு இடங்களில் ஆழமாக கத்திகுத்து இறங்கியுள்ளதாகவும் மருத்துவனமை நிர்வாகம் தெரிவித்தது. மேலும் அந்த இரண்டு இடங்களில் முதுகு தண்டுவடத்தின் அருகே ஒன்று இருப்பதாகவும் அதற்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. 

இந்த சம்பவம் தொடர்பாக சைஃப் அலிகான் உதவியாளர் காவல் துறையில் புகார் கொடுத்தார். இந்த சம்பவம் தொடர்பாக காவல் துறை தரப்பில் 10 குழுக்கள் அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் போலீஸ் தரப்பில் இந்த சம்பவம் குறித்து தெரிவிக்கப்பட்டதாவது, “12வது மாரியில் இருக்கும் சைஃப் அலி கானின் வீட்டில் ஒரு பணிப்பெண் குளியலறையின் அருகே ஒரு நிழல் போவதை கண்டுள்ளார். ஆரம்பத்தில் அது கரீனா கபூர் என நினைத்த அவர், பின்பு அருகில் சென்று பார்த்த போது 35 முதல் 40 வயது இருக்கும் ஒரு மர்ம நபர் இருந்துள்ளார். பணிப்பெண்ணை பார்த்ததும், அவரை தாக்கி கூர்மையான ஆயுதத்தைக் காட்டி அமைதியாக இருக்குமாறு மிரட்டியுள்ளார். அப்போது அருகில் இருந்த இரண்டாவது வீட்டுப் பணிப்பெண் அங்கு வந்த போது, அவரிடம் என்ன வேண்டும் என்று கேட்க உடனே அந்த மர்ம நபர் ரூ.1 கோடி என்று கூறியுள்ளார். 

இந்த சத்தத்தை கேட்ட சைஃப் அலி கான் தனது அறையிலிருந்து இறங்கி அங்கே சென்றுள்ளார். அப்போது இவருக்கும் அந்த மர்ம நபருக்கும் வாக்குவாதம் ஏற்பட பின்பு கைகலப்பாகி அது கத்தி குத்து வரை சென்றுள்ளது. காயம் பட்ட சைஃப் அலி கானை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல முயன்றுள்ளனர். அப்போது ட்ரைவர் இல்லாததால் 8வது மாடியில் வசிக்கும் அவரது குடும்பத்தினர் அழைத்துள்ளனர். ஆனால் அவர்களுக்கு ஆட்டோமெட்டிக் கார் ஓட்டத் தெரியாததால் ஒரு ஆட்டோ ரிக்ஷாவில் சைஃப் அலி கானை தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

சார்ந்த செய்திகள்