சிறிய கதாபாத்திரம் மூலம் தனது சினிமா கரியரை தொடங்கி தற்போது சிறப்பான நடிகர் என்ற பெயரை பெற்றுள்ளார் விஜய் சேதுபதி. 50 படங்களுக்கு மேல் நடித்து தனது தனித்துவமான நடிப்பின் மூலம் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கும் இவர் விமர்சன ரீதியாக கொண்டாடப்படும் நாயகனாகவும் கமர்ஷியல் ரீதியாக கொண்டாடப்படும் நாயகனாகவும் வலம் வருகிறார்.
இந்த நிலையில் இன்று ஜனவரி 16ஆம் தேதி அவர் பிறந்தநாள் காண்கிறார். இதையொட்டி அவருக்கு திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் வாழ்த்துகக்ள் கூறி வருகின்றனர். அந்த வகையில் அவர் தற்போது நடித்து முடித்துள்ள ‘ஏஸ்’ படக்குழு தற்போது விஜய் சேதுபதிக்கு வாழ்த்து தெரிவித்து படத்தின் கிளிம்ஸ் வெளியிட்டுள்ளது. அதில் வெளிநாடு செல்லும் விஜய் சேதுபதி அங்கு சென்று ஜாலியாக குத்தாட்டம் போடும் காட்சி இடம்பெறுகிறது. இறுதியில் போல்டு கண்ணன் என்ற கதாபாத்திரத்தில் அவர் நடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்படத்தை ஆறுமுகக்குமார் தயாரித்து இயக்குகிறார். இவர் ஏற்கனவே விஜய் சேதுபதியை வைத்து ‘ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’ படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தில் ருக்மணி வசந்த், திவ்யா பிள்ளை, யோகி பாபு, பப்லு பிருத்வீராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ள இப்படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு மலேசியாவில் நடைபெற்றது. இப்படத்தின் டைட்டில் டீசர் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த ஆண்டு வெளியிடப்பட்டது. இந்த நிலையில் தற்போது சிறிய முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. விரைவில் அடுத்தடுத்த அப்டேட்டுகள் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.