Skip to main content

அதிசயபிறவி -4 வள்ளலார் ஏன் முக்காடு போட்டுக்கொண்டார்? துயரமா? ஞான ஒளியா?

Published on 08/11/2019 | Edited on 09/11/2019

 

v

 

சிறுவயதிலேயே அகத்துறவு மேற்கொண்டுவிட்டாலும் குடும்பத்தின் பாசவலையில் சிக்கி புறத்துறவு மேற்கொள்ளமுடியாமல் வாலிப வயதிலும் தவித்திருந்தார் வள்ளலார்.  அவர் துறவு கொள்ளாதிருக்க அனைத்து முயற்சிகளையும் எடுத்து வந்தனர் குடும்பத்தினர்.  இப்படியான பாசவலை எப்படி அறுந்தது?எப்போது புறத்துறவு மேற்கொண்டார் வள்ளலார்? புறத்துறவுக்கு பின்னர்தான் அவர் உடலை மறைத்து முக்காடிட்டுக்கொண்டாரா?

 

பாசவலை

 

தாய், இரு சகோதரர்கள், இரு சகோதரிகள், அண்ணிகள், சகோதரிகளின் குழந்தைகள், அண்ணனின் குழந்தை என்று வள்ளலாரை பின்னிப்பிணைந்திருந்தது பாசவலை.  இந்தப்பாசவலைகள் ஒவ்வொன்றாக அறுந்த பின்னரே புறத்துறவு மேற்கொண்டார் வள்ளலார்.  

 

சபாபதிப்பிள்ளை திருமணம் செய்துகொண்டு சென்னையில் சிறப்பாக வாழ்ந்தார்.  அவருக்கு அடுத்து பிறந்த பரசுராமப்பிள்ளைக்கும் திருமணம் நடந்து அவரும் சென்னையில் சிறப்புடன் வாழ்ந்தார்.  இதேபோல் கடைக்குட்டியான வள்ளலாருக்கும் திருமணம் செய்துவைத்துவிட வேண்டும் என்று குடும்பத்தனர் முடிவெடுத்தனர்.   எப்போதும் கோயில்,குளம் என்றே கதியாக கிடப்பதால் குடும்பத்தை வெறுத்து துறவியாகப்போய்விடுவார் என்று பயந்து, வள்ளலாருக்கு திருமணம் செய்துவைத்துவிட்டால் எல்லாம் சரியாகிவிடும் என்று குடும்பத்தினர் துடித்தார்கள்.  குடும்பத்திலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக விலக நினைத்திருந்த வேளையில் திருமண பந்தத்தில் சிக்கிக்கொண்டால் என்னாவது என்று மனம் வருந்தினார் வள்ளலார்.  

 

தாயார் சின்னம்மையாரும், மனைவி தனக்கோடியும் அடுத்தடுத்து நோய்வாய்ப்பட்டு காலமானபின்னர், புறத்துறவு மேற்கொள்ள ஆயத்தமானார்.  அண்ணன் சபாபதியின் குழந்தைகளின் ஒன்று வள்ளலாரிடம் மிக பிரியமாக இருந்தது.  அதனால் அக்குழந்தையை பிரியமனமில்லாமல் இருந்தார்.  சின்னம்மாவின் பிரிவினை தாங்கமுடியாமல் மனவேதனையில் இருந்த அக்குழந்தையும் இறந்ததால் மனம் வருந்தினார் வள்ளலார்.

 

தாயும், தாரமும், குழந்தையும் புறத்துறவுக்கு தடை என்று நினைத்துக் கொண்டிருக்கையில், மூவரும் உயிரிழந்தபின்னர் ஒரு தடையும் இல்லை.  இருந்தும் துறவறம் மேற்கொள்ளவில்லை. அது ஏன் என்று அவருக்கே தெரியவில்லை.  தடை சொல்லிச் சொல்லி   பழகியே போனதால், தடை இல்லாமல் போனபோதும் செய்ய நினைத்த வேலையை துவங்குவதில் காலதாமதம் ஆகிக்கொண்டே இருந்தது.  ஆகவே, நினைத்தது முடிய மாட்டேங்குது.. என்ன செய்வேன்.. என்ன செய்வேன்.. என்று புலம்புகிறார்.

தாய்தடை என்றேன் பின்னர்த் 
          தாரமே தடைஎன் றேன்நான் 
     சேய்தடை என்றேன் இந்தச் 
          சிறுதடை எல்லாந் தீர்ந்தும் 
     தோய்தடைச் சிறியேன் இன்னுந் 
          துறந்திலேன் எனைத் தடுக்க 
     ஏய்தடை யாதோ எந்தாய் 
          என்செய்கேன் என்செய் கேனே.
 
- என்று இறைவனிடம் புலம்புகிறார்.

 

முக்காடு சாமி


எப்போதும் எளிமையாக இருப்பதையே விரும்பினார் வள்ளலார்.  சிறுவயது முதற்கொண்டே ஆடை மீது அக்கறை செலுத்தாமல் இருந்தார்.  தாயார் மறைவுக்கு பின்னர் அவர் ஈமக்காரியம் செய்துவிட்டு குளித்துவிட்டு கரையேறும்போது முக்காடு போட்டதாகவும், அதுவே நிரந்தமாகிவிட்டதாகவும் சொல்கிறார்கள்.    மனைவி இறந்த பின்னர்தான் அவர் முக்காடு போட்டுக்கொண்டார் என்றும் சொல்கிறார்கள். ஆண்கள் யாராவது தலையில் முக்காடு போட்டிருப்பதை  பார்த்தால், ‘’பெண்டாட்டியை பறிகொடுத்தவன் போல் தலையில் துண்டை போட்டிருக்கான்..’’என்று கூறும் வழக்கு இருக்கிறது.  அதுபோலவே, மனைவியை பறிகொடுத்த துக்கத்தில் முக்காடு போட்டவர், தன் வாழ்வின் இறுதிவரை முக்காடு போட்டுக்கொண்டார்.  அதுவே வள்ளலார் ராமலிங்க அடிகளின் அடையாளமாகிவிட்டது என்றும் சொல்கிறார்கள்.


 தாயாரின் மறைவிற்குப் பின்னர்தான் அவ்வாறு அவர் முக்காடிட்டுக் கொண்டார் என்பதற்கு அவர் பாடலே ஆதாரமாக இருக்கிறது.

’’அருளுருக் கொண்ட ஒரு வடிவு சிவயோகி
வடிவான நின்னரிய முடிமேல் அங்கே
வளர்ந்த சிகை மூன்று பிரிவுள்ளே நின்னரியதாய்
சின்னம்மைதான் அருள் சிவனடிச் சேர்ந்த பின்னர்
ஒரு சிகை கொண்டு அரிய வெண்துகில்
மேற்கொளிஈ அருட்பாதம் ஏற்கும்
நன்கிருபாதரட்சைதனை அங்ஙனமகற்றி ஆளும்
இருளறு வளாகாமது சித்தியெனும் ஓரிடத்து கற்பூர தீபம் ஏற்றி ஆராதித்து
ஆனந்த மேலிட்டு இனிய கூத்தாடி நின்று
பருவுடல் மறைத்து வெளியான அரசே வருக
வருக நல்லரிய
சித்திவண்மையருள் திருவருட்பிரகாச
வள்ளலே வருக என் மணி வருக வருகவே’’
-
என்ற பாடலின் மூலம் வள்ளலார் ஏன் முக்காடிட்டுக்கொண்டார் என்பதை அறியமுடிகிறது. வள்ளலார் எப்போதும் முக்காடு போட்டிருந்ததால் அவரை பலரும் முக்காடு சாமி என்றே அழைத்தனர். 

 

உச்சந்தலையில் ஞான ஒளி

 

வள்ளலாரின் தலையில் ஞான ஒளிக்கீற்று இருந்ததாகவும் அதை மூடி மறைப்பதற்காகத்தான் முக்காடு போட்டுக்கொண்டார் என்று கூறுகிறார்கள்.   அதற்கு உதாரணங்களாக சில நிகழ்வுகளையும் சொல்கிறார்கள்.  

                                                                                                           

வடலூர் சத்திய தருமசாலையில் தினமும் வள்ளலாரின் அருளுரையை கேட்டு வந்த ஒருவருக்கு, வள்ளலார் ஏன் முக்காடு போட்டிருக்கிறார் என்ற கேள்வி எழுந்தது.   வள்ளலாரிடத்தில் நேரிடையாக கேட்க தயங்கிய அவர், ஒரு நாள் கூட்டம் முடிந்ததும் தன் மகனைவிட்டு கேட்கலாம் என்று காத்திருந்தார்.   அதன்படியே கூட்டம் முடிந்ததும் தயங்கித்தயங்கி நின்ற அவரை அழைத்த வள்ளலார், ’’நான் ஏன் முக்காடு போட்டிருக்கிறேன் என்றுதானே கேட்க நினைக்கிறாய்?’’என்று கேட்டார்.    தான் மனதில் நினைத்திருந்ததை அப்படியேச்சொன்னதும், வாயடைத்துப்போனார்.

 

அடுத்து, ‘’உன் கேள்விக்கு இதோ பதில்’’என்று தன் முக்காட்டை வள்ளலார் நீக்கியதும், ஒரே ஒளி வெள்ளம். அதைக்காண முடியாமல் மயங்கி விழுந்துவிட்டார் அன்பர்.  அவரை எழுப்பிய வள்ளலார்,  இதைப்பற்றி யாரிடமும் சொல்லாதே’’என்று கேட்டுக்கொண்டதாக சொல்கிறார்கள்.  மேலும், ஒருநாள் தருமச்சாலைக்கு வெளியே வெய்யிலில் உட்கார்ந்திருந்தார் வள்ளலார்.  அப்போது வள்ளலாரின் தலையின் உச்சியில் இருந்து ஆகாயத்திலிருந்த சூரியன் வரைக்கும் அக்னிக் கம்பம் நீண்டிருந்ததைக்கண்டு மெய் சிலிர்த்துப்போனார்கள் என்று சொல்ப்படுகிறது.

வள்ளலாரின் தலையில் ஒளிக்கீற்று இருந்தது உண்மைதான் என்பதை வாரியாரின் சுயசரிதை மூலம் புரிந்துகொள்ள முடியும்.

 

வாரியாரின் விளக்கம்

 கிருபானந்த வாரியார் தனது சுய சரிதத்தில், ’வள்ளலார் ஏன் முக்காடு போட்டிருக்கிறார்?’ என்பதற்கு விளக்கமளித்துள்ளார். சுயசரிதையில் அவர், ”வடலூரில் சத்திய ஞானசபை திருப்பணித் துவக்கத்தில் ஒருநாள், சத்திய ஞானசபையின் அர்ச்சகர் சிவாச்சார்யரின் இல்லத்துக்கு உணவு அருந்தச் சென்றிருந்தேன். பாலசுப்ரமணிய சிவாச்சார்யர் நேர்மையானவர். வள்ளலாரின் சீடரான சபாபதி சிவாச்சார்யரின் பேரன்.  அவரின் தாயார் நடையில் அமர்ந்திருந்தார். நான் அவரை வணங்கி, அவருக்கு அருகில் அமர்ந்தேன்.

 

 ‘பெரியம்மா, வணக்கம்! தாங்கள் ராமலிங்க அடிகளாரைப் பார்த்திருக்கிறீர்களா?’ என்று ஆவலுடன் கேட்டேன். அவர் சிரித்த முகத்துடன், ‘அப்போது எனக்கு ஐந்தரை வயது. எங்கள் தாத்தா ஆடூர் சபாபதி சிவாச்சார்யரைக் காண சந்நிதானம் (வள்ளலார்) வருவார். என் தோள்களைப் பிடித்து, ‘குட்டிப் பெண்ணே… குட்டிப்பெண்ணே’ என்று கூப்பிட்டுக் கொஞ்சி விளையாடுவார். அப்போது அவரது திருமேனியில் இருந்து பச்சைக் கற்பூர வாசனை வீசும். அவருடைய சிரத்தில் உள்ள முக்காடு விலகும்போது, மின்னலைப் போன்ற ஞானஒளி வீசும். அப்போது சந்நிதானம், தலையில் உள்ள முக்காட்டுத் துணியை இழுத்து மறைத்துக்கொள்வார்’’என்று சொன்னதாக  எழுதியுள்ளார்.

- கதிரவன்

முந்தைய பகுதி:

அதிசயப்பிறவி -3 காவியை ஏன் நிராகரித்தார் வள்ளலார்?