Skip to main content

வழுவழுப்பா, வழவழப்பா ? - கவிஞர் மகுடேசுவரன் எழுதும் சொல்லேர் உழவு பகுதி 31

Published on 24/01/2019 | Edited on 08/02/2019
soller uzhavu


பேசும்போதும் எழுதும்போதும் ஒரு சொல்லை மிகச் சரியாகவே எடுத்தாண்டபோதும் அந்த வாக்கியத்திற்குப் பொருந்தாத அமைப்பில் வெளிப்பட்டுவிடுவதும் உண்டு. பேச்சு என்னும் தன்னியல்பான செயலில் அவ்வகை இயற்கை அமையலாம்தான். ஆனால், அச்சொல்லை அப்படியே எழுதினால் பிழையாகிவிடும்.

 

பேசும்போது “அம்மா சொல்லுச்சு…” என்று சொல்கிறோம். ஆனால், எழுதும்போது “அம்மா சொல்லிற்று” என்று எழுதுவது சரியாக இருக்காது. பெயரும் வினையுமான அச்சொல்லில் வினைச்சொல் உணர்த்தும் திணை தவறாக இருக்கிறது. என்ன பிழை ? அம்மா சொன்னாள் என்பதே சரி.  

 

வழுநிலை, வழாநிலை என்று கூறுவார்கள். குளிப்பதற்குச் சோப்பு என்னும் வழலைக்கட்டிகளை எடுக்கிறீர்கள். ஈரமாக இருக்கும் அப்பொருளை நன்கு இறுக்கிப் பிடிக்காவிட்டால் உங்கள் கைப்பிடியிலிருந்து நழுவிவிடும். வழுக்கிச் சென்றுவிடும். நெடுநாள் நீர் தேங்கிநிற்கும் குளத்தில் இறங்கினால் காலடியில் பாசித்தரையை உணரலாம். பாசித் தரையில் ஊன்றி உறுதியாக நிற்க முடியாது. எப்போது வழுக்கிவிடுமோ என்ற அச்சத்துடனே நிற்க வேண்டியிருக்கும். வழுக்கி விழாமல் நிற்பதே பெரும்பாடு. இந்த வழுக்கும் தன்மையால்தான் வழலைக்கட்டிகள், எண்ணெய்கள் ஆகியவற்றின் இயல்புகளை வழுவழுப்பு என்கிறோம். சிலர் அதனையும் வழவழப்பு என்று தவறாகக் கூறுவார்கள். வழுநிலையைக் கொண்டு தோன்றுகிற சொல் என்பதால் அதனை வழுவழுப்பு என்றே கூறவும் எழுதவும் வேண்டும்.

 

இவ்வாறு வழுக்கும் நிலை மொழியிலும் ஏற்படுவதுண்டு. ஒரு சொல்லினை அதற்குரிய இயற்கையில் கூறுவதற்கு விருப்பம்தான். ஆனால், அங்கே ஏதோ ஒரு கூறு வழுக்க வைக்கிறது. அந்த வழுக்கலோடு அதனைப் பயன்படுத்திவிடுகிறோம். நடுவுநிலையில் நிற்பது நடுவுநிலை வழாஅ நிலை. நடுவுநிலை பிறழ்ந்தால் அது நடுவுநிலை வழூஉ நிலை.

 

ஒரு சொல்லைத் தவறாகப் பயன்படுத்தினால் அது வழு. வழு என்பதனை வழூஉ என்று நீட்டிச் சொல்லலாம். வழாத என்பதன் ஈறுகெடுத்து வழா என்றும் சொல்லலாம். வழாஅ என்றும் நீட்டலாம்.

 

ஒன்றை வழுவாகப் பயன்படுத்தியது தெரிந்தும் அதனை மாற்றாமல் தொடர்ந்தால் அதற்கு வழுவமைதி என்று பெயர். வழுவாய் அமைந்தது வழுவமைதி. செய்யுள்களில் பல்வேறு நோக்கங்களுக்காக ஒரு சொல்லினை வழுவமைதியாக இடுவது புலவர் தொழில். உரைநடையில் முடிந்தவரை அதனைத் தவிர்ப்பது நலம். வழுவமைதி என்பது தவறாக எழுதுவதற்குரிய இசைவு ஆகாது. தவறாக அமைந்துவிட்டது என்று அறிவிப்பதாகும்.

 

அம்மா வந்தாள் என்று உயர்திணையாய் அமைய வேண்டிய வினைமுற்று “அம்மா வந்துச்சு” என்று அஃறிணைக்குரியதாய் அமைந்தால் அங்கே திணை வழு ஏற்படும்.

 

“நாளை நடக்கின்ற கூட்டத்தில் ஒரு முடிவு எட்டப்படும்” என்ற வாக்கியத்தைப் பாருங்கள். கூட்டம் நாளைக்குத்தான் நடக்கும். ஆனால், நடக்கின்ற என்னும் நிகழ்காலம் காட்டும் பெயரெச்சவினை இடம்பெற்றுவிட்டது. இது கால வழு. அங்கே எதிர்காலம் காட்டும் பெயரெச்சம் வரவேண்டும். “நாளை நடக்கும் கூட்டத்தில் ஒரு முடிவு எட்டப்படும்” என்பதுதான் சரியாக இருக்கும்.

 

சிலர் “பறவைகள் பறந்தது’ என்று எழுதுவார்கள். ஒரு வினைச்சொல் எழுவாய்க்குரிய ஒருமை பன்மையக் காட்ட வேண்டும். பறவை பறந்தது என்பது ஒருமைக்குரிய அமைப்பு. ‘பறவைகள் பறந்தன’ என்பது பன்மைக்குரிய அமைப்பு. செய்யுளில் இசையமைதி கருதி இவ்வாறு வழுவாக எழுதிவிடுவார்கள். இவை ஒருமை பன்மை வகையில் பிழையாகத் தோன்றிய வழுக்கள்.

 

வழுவமைதி கட்டாயம் தோன்ற வேண்டிய இடங்களும் இருக்கின்றன. தன்மை முன்னிலை படர்க்கை ஆகிய மூன்று இடங்களுக்குமுரிய பெயர்ச்சொற்கள் அமைந்துவிட்டால் அங்கே எவ்விடத்திற்குரிய வினைச்சொல்லை அமைப்பது ?

 

நான் பேசினேன்  

நீ பேசினாய்

அவன் பேசினான்

 

இவை தனித்தனிப் பெயர்களாக வருகையில் எல்லாம் சரியாக இருக்கின்றன. எழுவாய்க்கேற்ற வினைமுற்றுகள் தன்மை முன்னிலை படர்க்கை என இடங்காட்டுகின்றன. “நானும் நீயும் அவனும்” என்று மூன்று பெயர்களும் ஒரே வாக்கியத்தில் வந்தால் என்ன செய்வது ? அங்கேதான் இடவழுவமைதி ஏற்கப்படும் நிலை தோன்றும். “நானும் நீயும் அவனும் பேசினோம்” என்பதுதான் சரியாக இருக்கும். நான் என்ற தன்மை, நீ என்ற முன்னிலை இருப்பினும் நாம் என்ற தன்மைக்குரிய வினைமுற்று அங்கே ஏற்கப்படுகிறது. ஒரு வழுவமைதி இவ்வாறு வேறு வழியற்ற நிலையில் பொருத்தமாகத் தோன்ற வேண்டும்.

 

முந்தைய பகுதி:

வாழ்க வளமுடன் என்பது பிழையா ? சொல்லேர் உழவு - பகுதி 30

 

அடுத்த பகுதி:

கடலைக் குறிக்கும் சொற்கள் இத்தனையா ? - கவிஞர் மகுடேசுவரன் எழுதும் சொல்லேர் உழவு பகுதி 32