Skip to main content

ரெண்டு இட்லி 75 ரூபாய்... தொடங்கியது லைஃப் டைம் பயணம்! - இமயத்தின் இமயங்கள் #1

Published on 30/09/2018 | Edited on 30/09/2018
imayam 1 title



கார்கில்... சொன்னவுடன் சட்டென நினைவில் வருவது 1999ஆம் ஆண்டு நடந்த போர். கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் நடந்த போரில் இந்தியா பாகிஸ்தானை வென்று வெற்றிக் கொடியை நாட்டியது. இந்த வெற்றியை கொண்டாடும் வகையில், இந்திய இராணுவம் திராஸ் பகுதியிலுள்ள தோலோலிங் மலையடிவாரத்தில் போர் நினைவுச் சின்னம் ஒன்றை அமைத்துள்ளது.

நாம் இப்பொழுது இருக்கும் இடமும் அதுவே…!

 

kargil



இது போரில் உயிர்த் தியாகம் செய்த இந்திய ராணுவ வீரர்களின் நினைவாக அமைக்கப்பட்டதாகும். இங்கு, போரின் நிலையை   வெளியிட்ட  அன்றைய நாளிதழ் செய்திகள், புகைப்படங்கள், வீரமரணம் அடைந்த இந்திய ராணுவ   வீரர்களின் பெயர்கள், படங்கள், போர் குறித்த ஆவணங்கள், பதிவேடுகள், போரில் உபயோகிக்கப்பட்ட விமானங்கள், பீரங்கிகள் மற்றும் எதிரியிடமிருந்து கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள் மக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளன.1999ஆம் ஆண்டு இப்போருக்காக நாடு முழுவதும் மக்கள் நன்கொடைகளை தந்து தங்களாலான உதவியை செய்தனர். அவ்வாறு நன்கொடை கொடுத்த மக்களின் பெயர்கள் பக்கம் பக்கமாக நாளிதழ்களிலும், வார இதழ்களிலும் வந்தது இன்றும் என் நினைவில் உள்ளது. இதையெல்லாம் பார்க்கும் போதே, நமக்குள் ஒரு ராணுவ வீரன் வந்து மெய்சிலிர்க்கச் செய்கிறான்.

எதிரியிடம் கைப்பற்றப்பட்ட பொருட்களில் பாகிஸ்தான் நாட்டுக்கொடியும் ஒன்று. இதை பார்க்கும் போது, இந்தியா -பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியில் பிரபலமான பாகிஸ்தான் பெரியவர் அந்நாட்டுக் கொடியை உற்சாகத்துடன் அசைப்பதை பார்த்த நினைவுகள் வந்து போயின. இது எதிர் நாட்டு படையிடமிருந்து கைப்பற்றப்பட்டதால், தலைகீழாக வைக்கப்பட்டு இருந்தது. போரில் இறந்த எதிர் நாட்டவர்களையும், உரிய மரியாதையோடு அடக்கம் செய்த புகைப்படமும் வெகுவாகக் கவர்ந்தது. அக்கணமே இந்தப் பயணக்கதை கார்கிலில் இருந்து ஆரம்பிக்க வேண்டும் என எண்ணி மேலோட்டமாக வார்த்தைகளை கோர்த்து மனதில் நிறுத்தினேன். அதுதான் இதுவரை படித்ததும் கூட…!

 

imayam 2



நம்மை கவர்ந்த மற்றொன்று என்னவென்றால், இங்கிருந்து நம் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் அஞ்சல் அட்டை அனுப்பும் வசதி. அதன் பின்புறம் கார்கில் போர் நினைவிடத்தின் புகைப்படம் அழகான தரத்தில் பதியப்பெற்றது. இதன் விலை ரூபாய் 20. நாங்கள் வாங்கி அனுப்பலாம் என்று நினைத்து கேட்கும் போது மதிய உணவு இடைவேளைக்காக அங்காடி மூடப்பட்டிருந்தது.

"இமயத்தின் இமயங்கள்" பயண ஆசை என்னுள் கடந்த நான்காண்டுகளுக்கு முன்பு அக்டோபர் மாதத்தில் மணாலி சென்றபோது தோன்றியது. அதென்ன இமயத்தின் இமயங்கள்? அப்போது அங்கு பனிமலைகள் இல்லை. ஆனால் தூரத்தில் தெரிந்த பனிமலைகள் என்னை வெகுவாகக் கவர்ந்தது. இமயம் ஒன்றுதான், ஆனால் ஒவ்வொருவருக்கும் ஒரு இமயம் உண்டு. அங்கு நாம் அனுபவிப்பதை ஒவ்வொன்றும் அந்த ஒரு இமயத்துக்கு இணையான இமயங்கள்தான். அப்படி பனி மலைகளுக்குக்கிடையே பயணம் செய்ய வேண்டுமானால், நாம் மணாலியிலிருந்து "லே" (ஊர் பெயர்) சென்றால் போதும்.

 

imayam 3



அவ்வாறு தோன்றிய ஆசை, நான்காண்டு கனவாக இருந்து, கடந்த ஓராண்டாக திட்டம் போடப்பட்டு, இவ்வாண்டு (2018) மார்ச் மாதம் இறுதி வடிவம் எடுத்தது. ஒன்பது நாள் பயணமாக, சென்னையிலிருந்து விமானத்தில் ஸ்ரீநகர் சென்று அங்கிருந்து லே, நுப்ரா பள்ளத்தாக்கு, பாங்காங் ஏரி, மணாலி, டெல்லி வழியாக மீண்டும் சென்னையை அடைவது இறுதி திட்டமாக வடிவெடுத்தது.

எங்களை பற்றிய  சில தகவல்களை நான்  இங்கே கூறிக்கொள்ள விரும்புகிறேன். நாங்க ஆறு பேர், ஒரே நிறுவனத்தில் பணிபுரியும் நண்பர்கள்... பழனிசாமி, அரவிந்த், சிவலிங்கம், சிவகுமார், ஆதித்யன் மற்றும் கிரிதரன். அண்ணன் பழனிசாமி சுற்றுலாக்களுக்காக திட்டமிடுவதில் எக்ஸ்பர்ட். பல்வேறு இணையதளங்களை ஆராய்ந்து மிகவும் குறைந்த செலவில் நிறைந்த அனுபவங்களோடு சென்று வருவது, எங்களதுஒவ்வொரு பயணங்களிலும் சிறப்பு. அதுபோலவே இந்தப் பயணத்திற்கும் நூறு நாட்களுக்கு முன்னதாக விமானப்பயணத்திற்கான முன்பதிவுகளை செய்துவிட்டு, ஒவ்வொரு நாட்களாக எண்ணிக் கொண்டிருந்தோம்.

 

imayam 4



நாட்கள் நகர்வது கடினமாகவே இருந்தது. இறுதியாக மாதங்கள் வாரங்களாகவும், வாரங்கள் நாட்களாகவும் மாறி வந்தது 'இமயத்தின் இமயங்கள்' பயணத்தின் முதல் நாள். அது கூடவே, எனக்கு வந்தது ஆட்காட்டி விரலின் பின் பகுதியில் வீக்கமும் தீராத வலியும். காரணம், சில நாட்களுக்கு முன்னர் இவ்விரலில் சிறியதாய் அடிபட்டு உட்காயமாகவே மாறியிருந்தது. பொதுவாக புகைப்படம் எடுக்க இந்த விரலே பட்டனை  அழுத்துவதற்கு பயன்படும். அதனால் எனக்கு கவலை பற்றிக்கொண்டது. இங்கு செல்வதே பிரமாண்டமான மலைகளின் அழகையும், பள்ளத்தாக்கு, சமவெளி மற்றும் மாசற்ற வான்வெளியையும் பார்த்து ரசிக்கவும், ரசித்ததை புகைப்படம் எடுக்கவும் மட்டுமே என்பது என்னுடைய எண்ணமாக இருந்தது. எங்கே இந்த ஆசைகள் எல்லாம் நிறைவேறாமல் போய்விடுமோ என்ற ஏக்கமும் இருந்தது.

முதல் நாள் சென்னை விமான நிலையத்தை அடைந்து அங்கிருந்து டெல்லி சென்று பின்னர் காஷ்மீர் செல்வதாகத் திட்டம். அவ்வாறே சென்னை விமான நிலையம் காலை 7 மணிக்கே சென்றதால் பசி கிள்ளியது. அன்று ஞாயிறு என்பதால் வெளியிலும் கடைகள் திறக்கப்படாமலிருந்தது. 2 இட்லி 75 ரூபாய்க்கு சாப்பிட்டுவிட்டு, நண்பர்கள் 6 பேரும் பயணத்தை தொடங்கினோம். இப்பயணத்தில் வரும் மிக உயர்ந்த இமய மலைச்சிகரங்களில்  கூட தேநீரின் விலை 20~30 மட்டுமே. ஆனால் விமான நிலையங்களில் குறைந்தபட்ச விலை ரூபாய் 80. 

 

imayam 5



விமானத்தில் டெல்லி செல்ல சென்னையிலிருந்து பயணம் ஆரம்பித்தது. விமானம் மேலே எழும்பியபோது , சென்னை மாநகரத்தின் வான்வெளி காட்சி என்னை வெகுவாகக் கவர்ந்தது. குறிப்பாக, கத்திப்பாரா பாலமானது வண்ணத்துப்பூச்சியின்சிறகை போல் விரிந்து, அதில் செல்லும் வாகனங்கள், சிறியதாக ஊர்ந்து செல்லும் அழகு... அவ்வப்போது எனது விரல் எதிலாவது இடித்துக்கொண்டு வலியை அதிகப்படுத்தியது. ஒரு கட்டத்தில் விமானப் பணிப்பெண்ணிடம் முதலுதவி கேட்க, அழகிய ஏர் ஹோஸ்டஸ் ஒருவர் சிறிது நேரத்தில், களிம்பு தடவி பெருவிரலோடு கட்டு போட்டுவிட்டனர். இருந்தாலும் வலி நின்ற பாடில்லை. களிம்பு தடவிய தருணம் மட்டுமே இனிமையாய் இருந்தது.

அருகிலிருந்த அண்ணன் பழனி, “என்னடா..! எப்படி இருந்தது கட்டு?" என்று கேட்க, வலி கலந்த சந்தோஷத்தில், "ஜில்லுனு இருந்துச்சு அண்ணே" என்றேன். பின்னர் டெல்லி சென்று அங்கு 3 மணிநேரம் இடைவெளியில் காஷ்மீர் விமானம் முன்பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்த இடைவெளியில் மதிய உணவிற்காக பீசா வாங்கி பசியை தற்காலிகமாக அடக்கிக் கொண்டோம். அதன் பிறகு காஷ்மீர் பயணம் ஆரம்பித்தது. காஷ்மீர் விமானத்தில் சாளர இருக்கையில் அமர, சென்னையிலே கேட்டு பெற்றதால், பனி மலைகளின் அழகைக் காண ஆவலுடன் காத்திருந்தேன்.
 

imayam 6



வெகு நேரமாகியும் நிலப்பரப்பை மட்டுமே காண முடிந்தது. இறங்குவதற்கு 15 நிமிடம் முன்பு, தூரத்தில் பனி மலைகள் தென்பட ஆரம்பித்தது. இருப்பினும் காற்றின் வேகமும், மேகக்கூட்டமும் அதிகமானதால் விமானம் மேலும் கீழும் அதன் பறக்கும் உயரத்தில் மாற்றம் கண்டுகொண்டிருந்தது. விமானம் பறக்கும் உயரத்திலிருந்து திடீரென்று கீழே இறங்கும் பொது, வயிற்றில் ஏற்படும் ஒருவித உணர்வு நன்றாகத்தான் இருந்தது.

பின்னர் காஷ்மீர் விமான நிலையத்தில் தரையிறங்கியதும், உடமைகளை எடுத்துக்கொண்டு வெளிவரும் போது யூகலிப்டஸ் வாசனை மூக்கை துளைத்தது. விமானநிலையத்தில் இப்படி ஒரு வாசனையை, அதுவும் சளிக்கு உகந்த வாசனை. பின்னர் காரில் ஏறி தால் ஏரிக்கு புறப்பட்டுச் சென்றோம். யூகலிப்டஸ் வாசனை எங்களை பின்தொடர்ந்தது. என்னவென்று யோசித்தோம். அனைவரின் உடமைகளை ஆராயும் போது, நண்பரின் பையிலிருந்த யூகலிப்டஸ் குப்பிஉடைந்திருந்தது. செல்லும் வழியெங்கும் ராணுவ வீரர்கள். எங்களுக்கோ இனம் புரியாத பயம்! அது அனைவருக்கும் பீதியை உண்டாக்கியது. எதற்காக இவ்வளவு ராணுவ வீரர்கள் என்று கார் ஓட்டுனரிடம் கேட்டோம்...

 

 

Next Story

தேர்தல் விடுமுறை; நெரிசலால் உயிரைப் பணயம் வைக்கும் பயணிகள்!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
election holiday; Passengers risking their lives due to congestion

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தத் தேர்தலை முன்னிட்டு நாளை பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து சனி, ஞாயிறு விடுமுறை என்பதால் மொத்தம் மூன்று நாட்கள் விடுமுறை வருகிறது. இதன் காரணமாக சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு தேர்தல் விடுமுறைக்காக செல்வோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்நிலையில் சென்னை, தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து தென் மாவட்டங்களுக்கு படையெடுக்கும் மக்கள், முன்பதிவு இல்லாத ரயில் பெட்டியில் அதிகப்படியாக பயணம் செய்து வருகின்றனர். சில ரயில்களில் ஆபத்தான வகையில் தொங்கியபடி பயணம் செய்யும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Next Story

பறக்கும் முத்தத்தால் பந்தாடிய மனைவி!

Published on 22/03/2024 | Edited on 22/03/2024
The husband who flew because of the flying kiss

நாகையில், மனைவிக்கு பறக்கும் முத்தம் (flying kiss) கொடுத்த கணவரை மனைவியே அடியாட்களை வைத்து அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

நாகை தேவூர் பகுதியைச் சேர்ந்த ஆயுர்வேத மருத்துவர் செந்தமிழ் செல்வன். அவருடைய மனைவி சுதா. அவரும் சித்த மருத்துவராக உள்ளார். செந்தமிழ் செல்வன் - சுதா இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 10 ஆண்டுகளாகப் பிரிந்து வாழ்வதாகக் கூறப்படுகிறது. இருவரும் முறையாக விவாகரத்து பெற்றுள்ள நிலையில், நீதிமன்ற உத்தரவுப்படி தன்னுடைய 13 வயது மகனைப் பார்ப்பதற்காக செந்தமிழ் செல்வன் சென்றுள்ளார். ஆனால் அவரது மனைவியான சுதா மகனை சந்திப்பதற்குத் தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வந்துள்ளார்.

இந்தநிலையில், அடிக்கடி சுதா பணியாற்றும் மருத்துவமனைக்கு வரும் செந்தமிழ் செல்வன், பறக்கும் முத்தம் (flying kiss) கொடுப்பதைப் போல் செய்வதால், தொல்லை தாங்க முடியாத சுதா அடியாட்களை வைத்து செந்தமிழ் செல்வனை தாக்கியுள்ளார். இதில் காயமடைந்த செந்தமிழ் செல்வன் மருத்துவமனையில் தலையில் கட்டுடன் சிகிச்சை பெற்று வருகிறார்.