அத்தியாயம்- 1
அடக்கமாய்ப் போர்த்திவரும் கே.ஆர். விஜயாவைப் போல, தார்ச்சாலைகள் மெல்லிய பனிப் புடவை போர்த்தியிருந்த அதிகாலை நேரம்.. ஆங்கிலப் படம் திரையிடப்பட்ட தியேட்டரில் அங்கொன்றும் இங்கொன்றுமாகத் தலைகள் தென்படுவது போல், வாகனங்கள் குறைவாக சென்றுகொண்டிருந்தன. அப்போது, ஷைலோ கார் ஒன்று, தொண்டையில் வழுக்கிக்கொண்டு இறங்கும் அல்வா வில்லலைப் போல, சாலையில் சரசரவென வழுக்கியபடியே விரைந்துகொண்டிருந்தது.
அதற்குள், கொரியன் ஜிமின்னின் பிடீஎஸ் பேண்டுக்கு, கவிநிலாவின் வீணை விரல்கள் ஸ்டியரிங்கில் தாளம் போட்டுக் கொண்டிருந்தன. ஷைலோவோ முன்னாடி சென்ற வாகனங்களை முத்தமிட முயன்று, பொது இடம் என்று வெட்கி விலகிச் சென்றது . கொஞ்ச தூரம் சென்றதும் ஷைலோ கார் ஓரங்கட்டி நிற்க, அதிலிருந்து இறங்கினாள், இந்தக் கதைக்குத் தன்னை பிரதான நாயகியாக்கிக் கொண்ட கவிநிலா.
பெயரே அவள் அழகின் ஜாதகத்தை முழுதாகச் சொன்னது. அவள், மாடர்னாக உடை அணிவதிலும் ஒரு செய்நேர்த்தி இருக்கும். ஜீன், டீ ஷர்ட் தவிர வேறு போடமாட்டாள். காம்பஸ் வைத்து வரைந்தது போல வட்டமுகம். பிறர் தன்முன் ஆட்டம் போடுவது அவளுக்குப் பிடிக்காது. அதனால் தலைமுடியைக் கூட லூஸ் ஹேராக விடாமல் இழுத்துப் பிடித்து போனிடெய்ல் போட்டிருப்பாள்.
காரிலிருந்து இறங்கிய கவி " மணி அண்ணா நீங்க காரை ஓட்டுங்க அடுத்த சிக்னலில் போலீஸ் இருப்பாங்க., லைசென்ஸ் கேட்பாங்க..." என்று காரைச் சுற்றி வந்து, டிரைவர் சீட்டுக்கு பக்கத்துச் சீட்டில் அமர்ந்துகொண்டு, சீட் பெல்ட்டுக்கு ஒரு அதிர்ஷ்ட வாய்ப்பைக் கொடுத்தாள்.
"என்னம்மா இது? நீங்கபோய் டிராஃபிக் போலீஸுக்கு பயப்படலாமா ..? அப்பா பேரைச் சொன்னா, எந்த போலீஸாக இருந்தாலும் உங்களுக்கு சல்யூட் கிடைக்குமே?” என்று விசுவாசத்தில் பிடில் வாசித்தார் தலை நரைத்த மணி.
"எந்த சூழ்நிலையிலும் அப்பாவின் பேருக்கும், புகழுக்கும் களங்கம் வரக்கூடாதுன்னு தான், லைசென்ஸ் இல்லாத நான் இறங்கிட்டேன்” என்று அப்பா மீதான பாசத்தை வெளிப்படுத்தினாள்.
"சீக்கிரம் லைசென்ஸ் வாங்கிடு மா" என்று அப்பாவியாய் சொன்னார் மணி.
" நான் வாங்க ரெடியாதான் இருக்கேன், ஆனா பாருங்க பதினெட்டு வயசு ஆகாம லைசென்ஸ் தரமாட்டேன்னு நம்ம ஊர் போக்குவரத்து விதி அடம் பிடிக்குது” என்று கிண்டலாக சொன்னாள்.
" அப்படிங்களாம்மா, உங்களுக்கு இன்னும் பதினெட்டு ஆகலைங்களா? " என்று ஐயத்துடன் கேட்டார்.
"மணி அண்ணா நான் +1 தானே படிக்கிறேன். இன்னும் இரண்டு வருடம் ஆகும் லைசென்ஸ் வாங்க"என்று அமைதியாகக் கூறினாள்.
" கேட்கனும்னு நினைச்சேன். எதுக்குமா டெல்லி போய் படிக்கறீங்க?" என்றார் ஆவலில்.
நீட் எக்ஸாமுக்கு தான் டெல்லில கோச்சிங் போறேன். நீட் தேர்வில் இந்தியாவிலேயே முதல் இடத்துல வரனுங்கறதுதான், என் லட்சியம், கனவு, ரத்தம், சதை, உயிர் இப்படி என்ன வேணாலும் சொல்லிக்கிட்டே போகலாம்" என்று கண்கள் விரிந்தாள்.
" கவி..மா நீங்க +1 தானே படிக்கறீங்க. ஆனா இங்க பள்ளிக்கூடம் போகாம, நீட்டுக்கு எப்படி டெல்லி போறீங்க? ஒரே குழப்பமாக இருக்கே ?’என்று குழம்பினார் மணி.
"என்ன அண்ணா, எங்கப்பாவைப் பற்றித் தெரியாத மாதிரியே கேட்கறீங்க , நான் குழந்தையா இருந்ததில் இருந்து இங்க டிரைவரா இருக்கீங்க, கவிநிலா சி.பி.எஸ்.சி. பள்ளி, கவிநிலா மெட்ரிக் பள்ளின்னு சென்னையிலேயே 4 இடங்களில் பள்ளிக்கூடம் வைத்து "கல்வி வள்ளல்" ன்னு கொடிகட்டி பறக்கற எங்கப்பா நினைச்சா, நான் இங்க +1 படிச்சிகிட்டே டெல்லியில் நீட் கோச் பண்ண முடியாதா?".என்று பெருமையில் சொற்களை இசைத்தாள்.
" ஆமாம் மா , ஐயா நினைத்தால் நீங்க நிலாவிலேயே படிக்கமுடியும்"என்று பியானோ வாசித்தார் அப்பாவியான குரலில்.
" படிக்காம எப்படி மா பரீட்சை எழுத முடியும் " என்று மீண்டும் அப்பாவியாய்க் கேட்டார்.
" அண்ணா, ஆளே இல்லாம பரீட்சை எழுதுற காலம் இது. அப்படி இருக்க, படிக்காம எழுதறதா கஷ்டம்? நான் +2 வில் சென்டம் எடுத்துக்காட்றேன் பாருங்க, தப்பைத் தப்பில்லாமல் செய்தால் எதுவும் தப்பில்லை. ஆனால் எதுக்காக செய்றோம்கறதுதான் முக்கியம்" என்று கவி சொன்னதைக் கேட்டதும், மணி தலையில் இருந்த நாலு முடியும் அவர் கையில் வராத குறைதான்.
இவர்கள் பேசிக்கொண்டிருக்கும் போதே கார் எஸ்.கே.எஸ் கோட்டைக்குள் நுழைந்தது. கோட்டை வாசலில் துப்பாக்கி ஏந்திய காவலர்கள் இரண்டு பேர். பீரங்கி இல்லை அவ்வளவு தான். மற்றபடி கோட்டை மாதிரி மதில் சுவர்கள்.
வீட்டின் பக்கத்தில் டென்னிஸ் கோர்ட்டில் விளையாடிக்கொண்டிருந்தார் எஸ்.கே.எஸ்.
"டாடி ” என குரல் கொடுத்தாள் கவி.
பழைய ஆர்.எஸ் மனோகரை நினைவுபடுத்தும் தோற்றத்தில் இருந்த எஸ்.கே.எஸ் , "கவிச் செல்லம் " என்று அழைத்துக்கொண்டே கவியை நோக்கி வந்தார். சினிமாவாக இருந்திருந்தால் இந்த இடத்தில் பசுவையும் கன்றையும் ஓடவிட்டு ஒரு ஷாட் வச்சிருப்பாங்க. பாசம் பிய்சிக்கிச்சு.
" என்னடா கவி திடீர்னு கிளம்பி வந்திருக்க? காலைல கார் அனுப்புங்கன்னு சொன்னதும் ஷாக்காயிட்டேன், என்னாச்சு எனி பிராப்ளம்"
" நத்திங் டாடி, இரண்டு நாளாகவே உங்க நினைவாகவே இருந்தது. படிப்பில் கவனம் போகலை, சோ சொய்ய்ங்னு கிளம்பி வந்துட்டேன்" என்று டாடியை அணைத்தபடி பேசினாள் கவி.
"ஒகே ..டா... நீ ரெஸ்ட் எடு, எனக்குக் கொஞ்சம் வேலை இருக்கு. நான் கிளம்பறேன். ஈவினிங் மீட் பண்ணுவோம்”ன்னு கவியின் தலையை செல்லமாய் வருடிவிட்டு நகர்ந்தார். அதற்குள் கவியின் அம்மா திலகா, வெளியே வர...
"மம்மி" என்று அம்மாவிடமும் கொஞ்சிவிட்டு, தன் அறைக்குள் வந்தாள் கவி.
கவி ஃப்ரஷ் ஆவக நேரத்தில் அவளுக்கு ஒரு போன் வந்தது.
எதிர் முனையில் யார் பேசினார்கள் என்று தெரியவில்லை.
"தர்ட்டி மினிட்ஸில் அங்க இருப்பேன். வெயிட் பண்ணு " என்று அவசர கதியில் சொல்லி இணைப்பைத் துண்டித்தாள்.
"அம்மா , நான் வெளியே போய்ட்டு வரேன்" என்று சொல்லி விட்டு பதிலுக்காகக் காத்திருக்காமல் டியோ சாவியை எடுத்துக்கொண்டு வாசலுக்கு வந்தாள்.
"டிபன் சாப்டுக் கிளம்புடி" என்ற அம்மாவின் குரல் தூரத்தில் கேட்டது.
வேளச்சேரியில் உள்ள அந்த ஷாப்பிங் மால் வாசலில் நின்றிருந்த ஷாலுவை பிக் அப் பண்ணிக் கொண்டு, கே.டி.எம். பைக்குக்கு இணையாக பறந்தது டியோ.
டியோ பிரேக் அடித்து நின்ற இடம், தியா வீட்டு காம்ப்பவுண்டுக்குள். ஷாலுவும், கவியும் வேகமாக வீட்டிற்குள் சென்றனர். இவர்களை வரவேற்ற தியா வீட்டினர், அவர்களை தியா அறைக்கு அழைத்துச் சென்றனர்.
அங்கே, தியாவைப் பார்த்ததும் ஷாலுவும் கவியும் அதிர்ந்தனர்.
( திக் திக் தொடரும் )