Skip to main content

போராளிக் குழந்தை! - ஆதனூர் சோழன் எழுதும் மக்கள் தலைவன் மாவோ #1

Published on 21/09/2019 | Edited on 28/09/2019


சீனாவின் இதயம் போன்றது ஹூனான் மாகாணம்.

இந்த மாகாணத்தின் சிறிய கிராமம் சவ்ஷேன்.

சில நாட்களுக்கு முன்புதான் சீனாவின் பாம்பு வருடம் முடிவதை ஒட்டி நடைபெறும் திருவிழா முடிந்திருந்தது.

திருவிழாவைக் கொண்டாடிய களைப்பில் இருந்தனர் விவசாயிகள். நல்ல குளிர்காலம். சில்லென்று வீசும் காற்றில் பனித்துளிகள் கலந்து வந்தது. கண்களுக்குள் தூசுபோல பனித்துளிகள் சுருக்சுருக்கென்று தைத்தன. ஏற்கெனவே, சீனர்களின் கண்கள் லேசான கீறல் போலத்தான் இருக்கும். இப்போது மேலும் அது சுருங்கியிருந்தது. கிராமத்து ஜனங்கள் குளிரைச் சமாளிக்க மெத்தைபோல் தைக்கப்பட்ட உடைகளை அணிந்திருந்தனர். அங்கு மொத்தமே முன்னூறு குடும்பங்கள்தான் வசித்தன. இவர்களில் பெரும்பாலோர் மாவோ என்ற பெயரையே கொண்டிருந்தனர். அதாவது அந்தக் கிராமத்தில் மாவோ என்ற இனக் குழுதான் பெரியது. எல்லோருமே ஒரே வழித் தோன்றலாக இருந்தனர்.

இந்தக் குடும்பங்களில் மாவோ ரென்ஷெங் குடும்பம் ஓரளவு வசதியானது. இருந்தாலும், கடன் சுமையால் அவருடைய குடும்பத்திற்கு சொந்தமான இரண்டரை ஏக்கர் நிலமும் அடமானத்தில் இருந்தது. இதையடுத்து, ரென் ஷெங் தனது 16 வயதில் ஹூனான் மாகாணத்தில் ராணுவப் பணியில் சேர்ந்தவர். 6 வருடங்கள் ராணுவத்தில் வேலை செய்து சிறிதளவு பணம் சேர்த்தார். அதைக்கொண்டு தனது நிலத்தை மீட்டார். ஹூனான் மாநிலம் செழிப்பான பிரதேசம். இந்த மாநிலத்தில் இவ்வளவு நிலம் வைத்திருப்பவர் முக்கியமான நபராக மதிக்கப்படுவார். நெல் விளையும் இந்த நிலம் ரென்ஷெங்கையும் கிராமத்தில் முக்கியஸ்தராக மாற்றியிருந்தது.

ரென்ஷெங் மிகவும் சிக்கனமானவர். அவருடைய நிலத்தில் இரண்டு பேர் வேலை செய்தார்கள். அவர்களுக்கு தினக்கூலியாக சிறிதளவு அரிசியை மட்டும் கொடுப்பார். மாதத்துக்கு ஒருமுறை அவர்களுக்கு முட்டையுடன் சமைக்கப்பட்ட அரிசி உணவை வழங்குவார். ஆனால், எப்போதுமே அவர்களுக்கு இறைச்சி உணவு கொடுத்ததில்லை. ரென்ஷெங்கிற்கு இரண்டரை ஏக்கர் நிலத்துடன் பெரிய வீடும் இருந்தது. அது ஒரு பண்னை வீடு. பெரிய வீடு. வீட்டுக்கு பின்னால் உயரமான பைன் மரங்கள் இருந்தன. வீட்டின் முன்புறம் தாமரைக் குளம் ஒன்று இருந்தது. நிலம், வீடு தவிர அந்த நேரத்திலேயே மூவாயிரம் சீன வெள்ளி டாலர்களை சேமித்து வைத்திருந்தார். அந்தக் காலத்தில் இது மிகப்பெரிய தொகை.

தனது இரண்டரை ஏக்கர் நிலத்தை வைத்துக்கொண்டு அடுத்தவர்களின் நிலத்தையும் அடமானமாக வாங்கி  விவசாயம் செய்தார். கிட்டத்தட்ட அவர் ஒரு நிலப்பிரபுவாக மாறி வந்தார். தனது கிராமத்திலிருந்து பக்கத்தில் உள்ள சியாங்டேன் என்னும் நகரத்துக்கு தானிய வியாபாரம் செய்வதற்காக சென்று வருவார். ஹூனான் மாகாணத்திலேயே இந்த நகரத்தில்தான் படகுப் போக்குவரத்து இருந்தது. இந்த நகரத்தில் நல்ல குடியிருப்புகளில் வசித்த சில லட்சம் பேர் இருந்தனர். அவர்களிடம் வியாபாரம் செய்வதற்காகவே தனது கிராமத்தில் உள்ள ஏழை விவசாயிகள் உற்பத்தி செய்யும் தானியங்களை குறைந்த விலைக்கு மொத்தமாக வாங்குவார். கட்டை வண்டிகளில் ஏற்றி சியாங்டேன் நகருக்குச் சென்று கூடுதல் விலைக்கு விற்று வருவார்.

1893 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 26 ம் தேதி ரென்ஷெங்கின் பண்ணை வீட்டில் 13 ஆம் அறையில் ஒரு குழந்தையின் அழுகுரல் கேட்டது. ரென்ஷெங்கின் மனைவி வென் சிமேய் ஒரு ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தார்.

 

xh



நடுக்கும் குளிர்காலத்தில் பிறந்த அந்த குழந்தைதான், குடும்பத்திற்கு மூத்த குழந்தை. ஹூனான் மாகாண வழக்கபடி குடும்பத்தில் பிறக்கும் முதல் ஆண் குழந்தையை நான்கு நாட்கள் வரை குளிப்பாட்டக் கூடாது.

பின்னர் அந்த குழந்தைக்கு ஜாதகம் எழுதினார்கள்.

"இவன் பிறந்த நேரம் உங்கள் குடும்பத்தில் தண்ணீர் பற்றாக்குறையை ஏற்படுத்தும்"

ஜாதகத்தை நம்பிய ரென்ஷெங் தனது குழந்தைக்கு சேதுங் என்று பெயர் சூட்டினார். இந்தப் பெயர் ஜாதகத்தில் உள்ள குறைபாட்டை சரிசெய்யும் என்று அவர் நினைத்தார்.

நான்கு வாரங்கள் கழித்து அந்த குழந்தையின் தலையை மொட்டை அடித்தார்கள். ஆனால், உச்சந்தலையில் சிறிதளவு முடியை விட்டுவைத்தர்கள். இது அந்த குழந்தையை வாழ்க்கையோடு பிணைத்து வைத்திருக்க உதவும் என்ற நம்பிக்கை இருந்தது.

அதுபோலவே சில செப்பு காசுகளை கயிற்றில் கோர்த்து கழுத்தில் அணிவித்தனர். குழந்தையின் தலையில் மழிக்கப்பட்ட தலைமுடியில் சிறிதளவை எடுத்து நாயின் மயிரோடு கலந்து குழந்தை அணியும் உடையில் தைத்தனர்.

தீய ஆவிகள் அந்த குழந்தையை பார்த்தால் நாய் என்று நினைத்து விலகிவிடும் என்ற நம்பிக்கையில் இதைச் செய்தார்கள். சில குடும்பங்களில் ஆண் குழந்தைகளுக்கு காதணிகளை அணிவிப்பார்கள். தீய ஆவிகள் அந்த குழந்தையை பெண் குழந்தை என்று நினைத்து விலகிப்போய்விடும் என்ற நம்பிக்கை சீனாவில் நிலவியது.

 

 

hjl



சேதுங்கிற்கு இரண்டரை வயது ஆனபோது அவருடைய தாய், செமின் என்ற இரண்டாவது மகனை பெற்றெடுத்தார். அதன்பிறகு இரண்டு ஆண் குழந்தைகளும் இரண்டு பெண் குழந்தைகளும் பிறந்தவுடன் இறந்துவிட்டார்கள். 1903 ஆம் ஆண்டு ஷெடான் என்ற ஒரு ஆண் குழந்தை உயிர்பிழைத்தது.

ஆக, சேதுங்கிற்கு இரண்டு இளைய சகோதரர்கள் இருந்தனர். அவர்களுடன் செஜியான் என்ற பெண் குழந்தையை சேதுங்கின் பெற்றோர் தத்தெடுத்தனர். அந்த குழந்தை சேதுங்கின் சித்தப்பா ஒருவரின் மகள்.

இப்போது சேதுங்கின் குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை ஆறு ஆகிவிட்டது. இவர்களுடன் நிலத்தில் வேலை செய்த ஒருவருக்கும் உணவு அளிக்க வேண்டிய நிலையில் சேதுங்கின் தந்தை இருந்தார்.

 

 

hj



சேதுங்கை இனி மாவோ என்றே அழைக்கலாம்.

ஆறு வயது நிரம்பியவுடன் கிராமத்தில் மற்ற சிறுவர்கள் போல வயல்களில் சிறுசிறு வேலைகளை செய்தான். கால்நடைகளை மேய்ப்பது, வாத்துகளை கவனித்துக்கொள்வது என்று மாவோவுக்கு வேலைகள் ஒதுக்கப்பட்டன. இரண்டு ஆண்டுகள் இப்படி கழிந்த பிறகு கிராமத்தில் உள்ள பள்ளியில் சேர்க்கப்பட்டான். பள்ளி என்றவுடன் பெரிதாக யோசிக்க வேண்டியது இல்லை. ஒரேஒரு பழங்கால சுவருடன் கூடிய அறை மட்டுமே உள்ளது அந்தப் பள்ளி. சீனாவில் 19ம் நூற்றாண்டில் வசதியான குடும்பங்கள் மட்டுமே கல்வியைப்பற்றி யோசிக்கும் நிலை இருந்தது. ஏனென்றால் ஆரம்பக் கல்விக்காக ஆண்டுக்கு நான்கு அல்லது ஐந்து வெள்ளி டாலர்கள் செலவாகும். விவசாய கூலி ஒருவர் ஆறு மாதம் உழைத்தால் மட்டுமே இந்த தொகை கிடைக்கும். ஏழைகள் யாரும் கல்வியைப் பற்றி நினைத்துக்கூட பார்க்க முடியாது.

கல்வியின் முக்கியத்துவம் என்ன தெரியுமா? கன்ஃபூஷியஸ் எழுதிய இலக்கிய நூல்களை படித்து, பேரரசின் தேர்வுகளில் கௌரவமான மதிப்பெண்களை பெற்று அரசாங்கப் பதவியை அடைய முடியும். இதுதான் அன்றைய சீனாவில் கல்விக்கு இருந்த முக்கியத்துவம். ஆனால், இந்த கனவுகூட ஒருசிலருக்கு மட்டுமே நனவாகும் வாய்ப்பு இருந்தது. அரசாங்க பதவி கிடைத்தால் ஏராளமாக பணம் சம்பாதிக்கலாம் என்ற ஆசை எல்லோருக்கும் இருந்தது. அதேசமயம் எழுதப்படிக்க கற்றுக்கொள்ளக் கூட முடியாத நிலையில் பெரும்பாலான மக்கள் வறுமையில் வாடினார்கள்.

கருமியாக இருந்தாலும் மாவோவின் தந்தை தனது மகனைப் படிக்க வைக்க வேண்டும் என்று நினைத்ததற்கு ஒரு காரணம் இருந்தது. அவர் இரண்டு ஆண்டுகள் மட்டுமே கல்வி கற்றிருந்தார். எனவேதான், மற்ற விவசாயிகளைப் போல இல்லாமல், அவர் வியாபாரம் செய்தார். அவருக்கு கணிசமான வருமானம் வந்தது. அந்தக் வரவு செலவுக் கணக்கு விவரங்களை கவனிக்க மாவோ படிக்க வேண்டும் என்று அவர் விரும்பினார்.

மாவோவின் தாய்க்கு அவருடைய பெற்றோர் வைத்த பெயர் வென் சிமேய். இதற்கு ஏழாவது சகோதரி என்று அர்த்தம். ஹூனான் விவசாயிகள் தங்களுக்குப் பிறக்கும் பெண்குழந்தைகளுக்கு பெயர் சூட்டுவதில்லை. அதற்கு பதிலாக அவர்கள் பிறந்த வரிசைப்படி எண்களையே பெயராக அழைத்தார்கள். அந்தவகையில் அமைந்ததுதான் வென் சிமேய். மாவோவின் தந்தையைவிட தாய் மூன்று வயது மூத்தவர். அவர் தனது மகனைப் பற்றி நிறைய கனவுகளை தனக்குள் தேக்கியிருந்தார். புத்த மதத்தின் மீது மிகுந்த நம்பிக்கை வைத்திருந்தார். பல்வேறு மதச் சடங்குகளில் அவர் தனது மகனை ஈடுபடுத்தினார்.
 

h



மிக மோசமான சூழலில்தான் மாவோவின் பள்ளி இருந்தது. குறைந்தபட்சம் ஏழு, எட்டு வயதுடைய சிறுவர்களும், அதிகபட்சமாக 18 வயது வரையான பையன்களும் அந்தப் பள்ளியில் படித்தார்கள். எல்லோருமே ஒரேமாதிரியான தொளதொளப்பான உடைகளை அணிந்திருந்தனர். மாவோவின் ஆசிரியர் அவர்களுக்கு கல்வி கற்பித்த விதம் வினோதமானது. அவர் சொல்லிக் கொடுத்த பாடங்களோ மிகவும் கடினமானவை. பொருள் சொல்லித் தராமல் வெறுமனே மனப்பாடம் செய்யும் வகையில்தான் அவர் பாடம் நடத்தினார். சீனாவில் அதற்குமுன் இரண்டாயிரம் ஆண்டுகளாக பின்பற்றப்பட்ட நடைமுறைப்படியே மாவோ கல்வி கற்றார். கல்வி பெறுவதை கடினமாக்கி, மேட்டுக் குடியினர் மட்டுமே கல்வி கற்க உரிமை பெற்றவர்களாக இருக்க வேண்டும் என்பதற்காகவே இந்த நடைமுறை.

இளம் பருவத்தினருக்கு சீன அறிஞரான கன்பூஷியஸ் 11 ஆம் நூற்றாண்டில் எழுதிய இலக்கியத்தை மாவோ கற்க வேண்டியிருந்தது.

அந்த இலக்கியம்,

"மனிதர்கள் பிறக்கும்போது நல்லவர்களாகத்தான் பிறக்கிறார்கள். இதில் எந்த பேதமும் இல்லை. ஆனால், நடைமுறையில் இவர்கள் மிகவும் வேறுபடுகிறார்கள்" என்று தொடங்குகிறது.

சீன சித்திர எழுத்துக்களால் ஆன அந்த இலக்கியத்தில் 356 வரிகள் இருந்தன.

ஆசிரியர் முதலில் ஒரு மாணவனை அழைப்பார். அவனிடம் சில வரிகளைச் சொல்வார். அந்த வரிகளை மாணவன் திரும்பத் திரும்பச் சொல்லி மனப்பாடம் செய்ய வேண்டும். பிறகு அடுத்த மாணவனை அழைத்து அதே வரிகளைச் சொல்வார். மனப்பாடம் ஆகும்வரை மாணவர்கள் அந்த வரிகளை சொல்லிக் கொண்டேயிருக்க வேண்டும். தனது பத்துவயதுவரை படித்த விஷயங்கள் எவை தெரியுமா? "கடின உழைப்பே மதிப்பு மிக்கது. விளையாடுவதால் எந்தப் பயனும் இல்லை"

இப்படிப்பட்ட ஒழுக்கவாத சொற்றொடர்கள்தான். மனப்பாடம் செய்வதும், புத்தகத்திலிருந்து எழுத்துக்களை படியெடுப்பதும், மனப்பாடம் செய்த வரிகளை ஒப்பிப்பதிலும்தான் மாவோவின் பெரும்பாலான நாட்கள் கழிந்தன. மாணவர்களுக்கு ஆசிரியர்களின் தரும் தண்டனை கடுமையாக இருந்தது.

தொடரும்...