Skip to main content

தான் செய்த தவறுகளை மறக்க முடியாமல் தவிக்கும் பாதிரியார் - ‘ஜெய் ஜென்’ பகிரும் மனங்களும் மனிதர்களும்: 36

Published on 30/07/2024 | Edited on 30/07/2024
jay zen manangal vs manithargal 36

சிறு வயதில் தான் செய்த தவறுகளை மறக்க முடியாமல் குற்ற உணர்ச்சியோடு தவித்த பாதிரியார் ஒருவருக்கு கொடுத்த கவுன்சிலிங் பற்றி ‘மனங்களும் மனிதர்களும்’ தொடரின் வழியாக ஜெய் ஜென் நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்

பாதிரியார் ஒருவர் என்னிடம் கவுன்சிலங்கிற்கு வந்தார்.  இவர் தனக்கு ஏற்பட்டிருக்கும் ஒரு பிரச்சனையைப் பற்றி பேச வந்திருந்தார். தன்னை நோக்கி பாவ மன்னிப்பு கேட்க வந்தவர்கள் நான் இந்த தப்பு செய்துவிட்டேன் என்று நிறைய பேர் பேச வருபவர்கள் உண்டு. இவருக்கு என்ன பிரச்சனை என்றால் ஒரு பத்து பிரச்சனைகள் தன்னிடம் வந்து சொல்லும்போது அதில் மூன்று அல்லது நான்கு விஷயங்களை நாமும் இதை செய்திருக்கிறோமே என்று அவர் நினைக்கிறார். நாம் எல்லாரிடமும் மதத்தின் அடிப்படையில் எல்லாம் சரியாகிவிடும் என்று அவர்களிடம் சொல்வது சரியா என்ற ஒரு குழப்பம் வருகிறது. 

இது 2010 இல் நடந்த விஷயம். அப்பொழுது தன்னிடம் வந்து பிரச்சனையை பகிரும்போது இந்த தவறை தான் நாம் கடந்த காலத்தில் செய்தோமே. ஆனால் நாம் வந்து பாதிரியார் போன்ற உயரிய இடத்திலிருந்து மற்றவர்களை மன்னிக்கிறோமே என்று மனது உறுத்தி இருக்கிறது. அவரிடம் முதல் கேள்வியை கேட்டேன். நீங்கள் மற்றவர்களை மன்னிப்பதாக சொன்னீர்களே. மன்னிப்பது உண்மையில் யார் என்றேன். அது நான் தான் என்றார், பின்னர் கர்த்தர் தான் என்று ஒரு மாதிரி குழப்பமாக சொன்னார். 

நல்லது என்ற நம்பிக்கையை தான் நாம் உருவம் பிடித்து கொண்டு கொண்டிருக்கிறோம். அந்த நம்பிக்கை தான் ஒரு மனிதனை மன்னிக்கிறது. நீங்கள் செய்த தவறுகளை அந்த நம்பிக்கைதான் மன்னிக்கிறது. நீங்கள் மன்னிக்கவில்லை என்றதும்  அவர் கொஞ்சம் தெளிவு பெற்றார். அடுத்ததாக சரி ஏற்கனவே அந்த கடந்த காலத்தில் நடந்ததை  நீங்கள் மறந்து விட்டீர்கள். ஆனால் யாரோ ஒருவர் சொல்லும்போது ஞாபகம் வருகிறது என்றால் அது உங்களிடம் குற்ற உணர்வாக இல்லை. ஏனென்றால் குற்ற உணர்வாக இருந்திருந்தால் அது உங்களுக்கு மறந்திருக்காது. 

வேறு யாரேனும் சொல்லும்போது ஞாபகப்படுத்தும் போதுதான் அந்த வலி வருகிறது. அப்படி இருக்கும்போது ஏன் வருகிறது என்றால் இப்பொழுது நீங்கள் இருந்திருக்கும் ஒரு நிலையோடு பழைய விஷயத்தை கம்பேர் செய்கிறீர்கள். இப்போது இருப்பது போல நீங்கள் கடந்த காலத்தில் இருந்திருந்தீர்கள் என்றால்  இந்த தவறை செய்திருக்க மாட்டீர்கள். கடந்த காலத்தில் எப்படி இருக்க வேண்டுமோ அப்படி இருந்தீர்கள் அது மாறிவிட்டது. ஆனால், இந்த நிலையில் அந்த தவறை செய்யப்போவதில்லை. எனவே அந்த வயதில் நீங்கள் செய்த தவறை போலவே ஒருவர் வந்து உங்களிடம் மன்னிப்பு கேட்கும் போது நாம் எப்படி மன்னிக்க முடியும் என்று நினைத்தீர்கள் என்றால் அது சரியாக இருக்காது என்றேன். 

கொஞ்சம் தெளிவு வந்துவிட்டது அவருக்கு கடைசியாக இந்த குற்ற உணர்வு வந்துவிட்டது இதை எவ்வளவு காலம் சுமப்பதாக இருக்கிறீர்கள் என்று கேட்டேன். இல்ல சார் இது வைத்துக்கொள்ளக்கூடாது என்று தான் உங்களிடம் வந்திருக்கிறேன் என்றார். வைத்துக்கொள்ள விடாது என்றால் விட்டுவிட வேண்டியது தானே என்றேன். பொதுவாக மனிதனுக்கு காமன் சென்ஸ், அன்காமன் சென்ஸ் என இரண்டு இருக்கிறது. ஒருவரை நம்மை திட்டிவிட்டால் அதை மறந்துவிட காமன் சென்ஸ் நினைக்கிறது. ஆனால், அன்காமன் சென்ஸ் அதை மறக்காமல் நினைவூட்டி நம்மை இன்னும் பாதிப்படைய செய்கிறது. கவுன்சிலிங்கில் காமன் சென்ஸ் தான் திருப்பி நினைவூட்டப்படுகிறது. மன்னிக்கும் முறைகள்,  நம்பிக்கை எல்லாமே அவருக்கு ஏற்கனவே அவருடைய மதத்தில் போதிக்கப்பட்டிருக்கும். ஆனால் அது வருட கணக்காக மற்றவர்களுக்கு சொல்லி சொல்லி அது பழக்கமாக இருக்குமே தவிர அதை உணர்வு பூர்வமாக இவர் உணரவில்லை. இதன் அடிப்படையில் தான் அவர் கவுன்சிலிங்கில் மீண்டும் நினைவூட்டப்பட்டது. அவர் கடைசியாக உணர்ந்து கொண்டு இவ்வளவு காலம் ரொம்ப ஃபார்மாலிட்டியாக எல்லாம் செய்து இருக்கிறேன் என்று இப்போதுதான் புரிகிறது. கர்த்தரின் பெயராலே என்றுதான் நாங்கள் சொல்லி வருகிறோம். எனவே நான் அங்கு இல்லவே இல்லை. என் மூலமாகவே கர்த்தர் மன்னிக்கிறார் என்று தான் அர்த்தம். அது இவ்வளவு காலம் உணரவே இல்லை. இப்பொழுது தான் எனக்கு புரிகிறது என்று நிம்மதியுடன் விடைபெற்றார்.