எம்.கே. பாலன் கொலை வழக்கின் இறுதியில் என்ன நடந்தது என்பது குறித்து விவரிக்கிறார் தமிழ்நாடு காவல்துறையின் முதல் பெண் இயக்குநர், ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி திலகவதி அவர்கள்...
செந்தில்குமார் என்கிற எம்.பி.ஏ பட்டதாரி படிக்கும் காலத்திலேயே பேராசிரியர் ஒருவருக்கு டிரான்ஸ்பர் வாங்கித் தருவதாகச் சொல்லி அவரிடம் பணம் வாங்கி ஏமாற்றியவன். பாலன் கொலை வழக்கில் குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்த சாமிக்கண்ணு என்பவர் செந்தில்குமாருக்கு ஏற்கனவே அறிமுகமானவர். ஜெயக்குமார் என்பவரைக் கடத்தி பணம் கேட்குமாறு சாமிக்கண்ணுவுக்கு ஆலோசனை வழங்குகிறான் செந்தில்குமார். அதுபோலவே கடத்தி, பணம் பெற்ற பிறகும் ஜெயக்குமார் கொலை செய்யப்பட்டார்.
காரியத்தை முடித்த பிறகு சாமிக்கண்ணு பணம் கேட்டபோது செந்தில்குமார் பணம் கொடுக்க மறுத்தான். பொதுவாகவே பெரிய ஆட்களோடு தனக்குத் தொடர்பு இருப்பது போல் காட்டி ஊரை ஏமாற்றுபவன் செந்தில்குமார். மோகன் பாபு என்பவர் பாலனின் செகரட்ரியாக இருந்தார். அவரை இதுபோல் பொய் கூறி ஏமாற்றினான் செந்தில்குமார். இதில் பாலனும் ஏமாந்தார். மூன்று கோடி கொடுத்தால் ராஜ்யசபா எம்.பி சீட் வாங்கித் தருவதாக செந்தில்குமார் கூறினான். ஆனால் பாலன் நேரடியாகப் பணம் தர மறுத்தார். பிறகு செந்தில்குமாரையே கடத்தினான் சாமிக்கண்ணு. ஆனால் தூங்கா நகர் மாணிக்கம் மூலம் தப்பித்தான் செந்தில்குமார்.
ஒரு பெண் மூலம் ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்ட நபர்களின் குரலில் பேசி ஆடியோ அனுப்பி, சிலரிடம் பணம் வசூல் செய்து தர வேண்டும் என்று பூங்கா நகர் மாணிக்கத்தை ஏமாற்றினான் செந்தில்குமார். அந்தப் பட்டியலில் பாலனின் பெயரும் இருந்தது. அதன்படி பாலனைக் கடத்தி பணம் கேட்டபோது, தானே கடனில் இருப்பதாகவும் தன்னால் இவ்வளவு பெரிய தொகையைத் தர இயலாது என்றும் பாலன் கூறினார். பணம் தராததால் சசிகலாவே அவரைக் கொல்லச் சொன்னது போல் ஆடியோ ஒன்றை உருவாக்கினர். பிறகு பாலனைக் கொடூரமாகக் கொன்றனர்.
அவருடைய உடலை யாருக்கும் தெரியாமல் எரித்தனர். பல்வேறு முயற்சிகள் எடுத்து அனைத்தையும் வெளியே தெரியாமல் மறைத்தனர். காவல்துறையினர் ஒவ்வொன்றாகக் கண்டறிந்தனர். பாலன் போட்டிருந்த ஷூவைப் பல்வேறு முயற்சிகளுக்குப் பிறகு கண்டுபிடித்தனர். குரலை மாற்றி ஆடியோவில் பேசிய ரோமிடா மேரி என்கிற பெண்ணிடம் அவர் பேசியதற்கான ஸ்கிரிப்டுகளை போலீசார் கைப்பற்றினர். அவருக்கு கிரிமினல் நோக்கம் இல்லாததால் விடுவிக்கப்பட்டார். மற்ற குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. தங்களை ஏமாற்றிய செந்தில்குமார் மற்றும் ஹரிஹரனை சிறையில் மற்ற குற்றவாளிகள் கடுமையாகத் தாக்கினர். அதன் பிறகு அவர்கள் வேறு செல்லுக்கு மாற்றப்பட்டனர்.
உயர்நீதிமன்றத்திலும் தீர்ப்பு உறுதி செய்யப்பட்டது. உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்குவதில் இரு நீதிபதிகளுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அதனால் தீர்ப்பு நிறுத்தி வைக்கப்பட்டது. அந்த நேரத்தில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா வந்ததால், அதன் காரணமாக விடுவிக்கப்பட்ட குற்றவாளிகளில் இவர்கள் அனைவரும் வெளியே வந்தனர்.