
கணவனை இம்சித்த மனைவி பற்றிய வழக்கு குறித்து குடும்ப நல வழக்கறிஞர் சாந்தகுமாரி விவரிக்கிறார்.
ஜெரால்ட் என்பவருடைய வழக்கு இது. பெற்றோரால் நிச்சயிக்கப்பட்ட திருமணம் அவருக்கு நடந்தது. அவருடைய வாழ்க்கை நிம்மதியாகவே சென்றுகொண்டிருந்தது. இரண்டு வருடங்கள் கழித்து அவர் என்னை சந்திக்க வந்தார். தன்னுடைய மனைவியை தான் அடித்து துன்புறுத்தியதாகவும், வரதட்சணை கேட்டதாகவும் தன் மீது மனைவி காவல் நிலையத்தில் புகார் தெரிவித்திருப்பதாக அவர் கூறினார். தன் தாய் மீதும் அந்தப் பெண் வரதட்சணை புகார் கூறியிருந்தார். ஆனால் அது எதுவுமே உண்மை இல்லை என்று அவர் கூறினார்.
எனவே பொய்யான குற்றச்சாட்டுகள் கூறியதாக அந்தப் பெண் மீது நாங்கள் வழக்கு தொடுத்தோம். கணவரோடு சேர்ந்து வாழ வேண்டும் என்று அந்தப் பெண் வழக்கு தொடுத்தார். இவ்வளவு குற்றச்சாட்டுகள் கூறிவிட்டு சேர்ந்து வாழ வேண்டும் என்று ஏன் கேட்கிறார் என்பது எங்களுக்குப் புரியவில்லை. விசாரணையில் பல உண்மைகள் வெளியே வந்தன. அந்தப் பெண்ணுக்கு குடிக்கும் பழக்கம் இருந்திருக்கிறது. திருமணமான பிறகு கணவனும் மனைவியும் சேர்ந்து வீட்டில் குடித்திருக்கின்றனர்.
முதல் முறை அவள் ஜெரால்டு மீது போலீசில் புகார் கொடுக்கும்போது அவருடைய தாய் பற்றி எதுவும் குறிப்பிடவில்லை. அதன்பிறகு கொடுத்த புகாரில் தான் தாய் வரதட்சணை கேட்டு துன்புறுத்தியதாக குறிப்பிட்டிருந்தாள். வேண்டுமென்றே அவர்களை சிக்க வைப்பதற்காக கொடுத்த புகார் அது. தினமும் என்ன மதுபானம் வாங்கிவர வேண்டும் என்பது குறித்து அவனுக்கு அவள் வாட்ஸ்அப்பில் மெசேஜ் அனுப்பி வந்தாள். இருவரும் சேர்ந்து தான் இதைச் செய்தனர். ஆனால் புகாரில் அவன் குடிகாரன் என்று அவள் சொல்லியிருந்தாள்.
தன்னுடைய நாத்தனாரிடம் கணவன் மற்றும் மாமியாரைப் புகழ்ந்து அவள் அனுப்பிய வாட்ஸ்அப் மெசேஜ்கள் கிடைத்தன. கணவனும் மனைவியும் இணைந்து பல நாடுகளுக்குச் சென்றுள்ளனர். ஒருநாள் அவனைக் கத்தியை எடுத்து அவள் குத்த வந்தபோது அவன் தடுத்த புகைப்படமும் கிடைத்தது. அவள் அந்த வீட்டில் சுதந்திரமாக இருந்ததற்கான பல்வேறு ஆதாரங்கள் கிடைத்தன. அந்த ஆதாரங்களை நாங்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தோம். அதன் பிறகு ஜெரால்டுக்கு விவாகரத்து வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்தது. பெண்களைப் போலவே ஆண்களும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.