Skip to main content

காதலியின் படங்களை நண்பர்களுடன் பகிர்ந்த காதலன் - ‘ஜெய் ஜென்’ பகிரும் மனங்களும் மனிதர்களும்: 02

Published on 12/07/2023 | Edited on 12/07/2023

 

Jay zen - Manangal vs Manithargal - 02

 

தான் கையாண்ட வித்தியாசமான கவுன்சிலிங் குறித்து ‘மனங்களும் மனிதர்களும்’ என்னும் தொடரின் வழியாக ஜெய் ஜென் விவரிக்கிறார். அந்த வகையில் இன்றைய கால ஆண்களின் சில வக்கிரமான நடவடிக்கைகள் பற்றியும் அதனால் பாதிக்கப்பட்ட பெண்ணைப் பற்றியும் விவரிக்கிறார்.

 

என்னுடைய கவுன்சிலிங் பணியை எந்த ஒரு விளம்பரமும் இல்லாமல் இத்தனை வருடங்களாக நான் தொடர்ந்து வருகிறேன். 80களில் பெரியவர்கள் நிற்கும் பொது இடங்களில் நிற்பதற்கே இளைஞர்கள் யோசிப்பார்கள். இன்று இளைஞர்கள் குறித்த பெருமிதம் பெற்றோருக்கு இருக்கிறது. அவர்களுக்கு அதிகமாக அட்வைஸ் தேவைப்படுவதில்லை. அடுத்த தலைமுறை இளைஞர்களின் பிரச்சனைகள் வேறு மாதிரியாக இருக்கின்றன. ஒருகாலத்தில் குடிப்பழக்கத்தில் இருந்த போதை இப்போது செல்போனில் இருக்கிறது.

 

மொபைல் ஃபோன் இல்லாமல் இன்றைய இளைஞர்களால் இருக்க முடியவில்லை. சில மணி நேரங்களாவது மொபைல் இல்லாமல் தங்களால் இருக்க முடியும் என்கிற நிலைக்கு இளைஞர்கள் வந்தால், அவர்கள் சரியாக இருக்கிறார்கள் என்று அர்த்தம். இன்று அனைவருக்கும் சுதந்திரம் இருக்கிறது. ஆனால் மொபைல் ஃபோன் விஷயத்தில் சில இளைஞர்கள் எல்லைமீறிச் செல்கின்றனர். அவர்கள் பல்வேறு சாதனைகளைச் செய்யாமலும் இல்லை. ஆனால் அவர்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளும் அதிகரித்து வருகின்றன.

 

எதற்காகவும் காத்திருக்க இன்றைய இளைஞர்கள் தயாராக இல்லை. ஒரு பையன் தன்னுடைய காதலியிடம் பேசிக்கொண்டிருக்கும்போது அவளை உடைகள் இல்லாமல் ரெக்கார்ட் செய்கிறான். அதை தன்னுடைய நண்பர்களிடம் பகிர்கிறான். அது குறித்த எந்த வருத்தமும் குற்றவுணர்ச்சியும் அவனிடம் இல்லை. அவனுடைய வக்கிரங்கள் அதன் பிறகு தான் அந்தப் பெண்ணுக்குப் புரிய ஆரம்பித்தன. அந்தப் பெண் தற்கொலைக்கு முயல்கிறாள். அந்த நேரத்தில்தான் என்னுடைய ஆலோசனை அவளுக்கு தேவைப்பட்டது. 

 

பிரைவசி என்கிற வார்த்தை இப்போது அதிகம் பயன்படுத்தப்படுகிறது. ஏதோ ஒரு தவறுக்கான அடிப்படைப் புள்ளியாக அது மாறுகிறது. இன்று இன்டர்நெட்டில் ஏதாவது பகிரப்பட்டால் அதை அழிக்கவே முடியாது என்பதுதான் உண்மை. கடந்த காலத்தை நம்மால் எதுவும் செய்ய முடியாது. மாற்ற முடியாத விஷயங்கள் குறித்து கவலைப்படுவதில் எந்தப் பிரயோஜனமும் இல்லை. இந்த உலகத்துக்கு நிறைய பிரச்சனைகள் இருக்கின்றன. நம்முடைய பிரச்சனைகள் மட்டுமே உலகத்தின் பிரச்சனைகள் அல்ல. காலம் தான் சிறந்த மருந்து. இன்று அந்த வீடியோ குறித்து பேசும்போது, இதற்காகவா தற்கொலை முடிவை எடுத்தோம் என்று அந்தப் பெண் சிரிக்கிறார்.