சொந்த வீட்டிலேயே திருடிய பெண் குறித்த வழக்கு பற்றி முதல் பெண் துப்பறிவாளர் மாலதி விவரிக்கிறார்
கூட்டுக்குடும்பமாக இருந்த ஒரு குடும்பத்திலிருந்து பெரியவர் ஒருவர் நம்மிடம் வந்தார். தங்களுடைய வீட்டில் கடந்த சில காலமாக பணம், நகைகள் காணாமல் போவதாக அவர் தெரிவித்தார். வீட்டில் யார் மீதும் அவரால் சந்தேகப்பட முடியவில்லை. இதை நாங்கள் கண்டுபிடித்துத் தர வேண்டும் என்று கூறினார். அவர்கள் வீட்டில் உள்ள அனைவரையும் நம்மிடம் அறிமுகப்படுத்தினார். 20 வயது நிரம்பிய இளையவர்கள் நிறைய பேர் இருந்தனர். அப்போதே எங்களுக்கு ஒருவர் மீது சந்தேகம் வந்தது. விசாரித்து ரிப்போர்ட்டை மட்டும் தம்மிடம் கொடுக்குமாறு அவர் கூறினார்.
எங்களுக்கு சந்தேகம் வந்த நபரின் செயல்களை நாங்கள் கவனிக்க ஆரம்பித்தோம். அவருக்கு ஒரு ஆண் நண்பரோடு தொடர்பு இருந்தது. வசதி குறைந்த குடும்பத்தைச் சேர்ந்தவர் அந்த நண்பர். அவர்கள் இருவரும் வெளியே செல்லும்போது இந்தப் பெண் தான் முழுக்க முழுக்க செலவு செய்தார். இவ்வளவு பணம் அவருக்கு எப்படி வருகிறது என்று யோசித்தோம். அந்தப் பையன் புதிதாக பைக் ஒன்றை வாங்கினான். அதற்கு அவனுக்கு பணம் எங்கிருந்து வந்தது என்பதை எங்களால் யூகிக்க முடிந்தது. அந்த நேரத்தில் வீட்டில் பணம் காணாமல் போனதும் தெரிந்தது.
இதுபற்றி அந்தப் பெரியவரிடம் தெரிவித்தபோது அவருக்கு அதிர்ச்சியாக இருந்தது. இதனால் குடும்பம் பிரியக்கூடாது என்று அவர் நினைத்தார். அவருடைய ஒப்புதலுடன் அந்தப் பெண்ணிடம் நாங்கள் பேசினோம். தான் எதையும் திருடவில்லை என்று முதலில் அந்தப் பெண் தெரிவித்தார். அதன்பிறகு கோபத்துடன் உண்மையை ஒப்புக்கொண்டார். தான் அந்தப் பையனை விரும்புவதாகவும், தங்களுடைய குடும்பத்தின் வசதிக்கு ஏற்ப அவனையும் உயர்த்துவதற்காகத் தான் இதைச் செய்ததாகவும் அவர் கூறினார். இது தவறானது என்பதை அவருக்கு நான் புரியவைத்தேன்.
அந்தப் பையன் அவராகவே உயர வேண்டும், அதற்காக திருடுவது தவறு என்று கூறினேன். இதுபற்றி மற்றவர்கள் யாரிடமும் சொல்ல வேண்டாம் என்று அந்தப் பெரியவர் எங்களைக் கேட்டுக்கொண்டார். இதுபோன்ற இன்னொரு வழக்கு போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்ற பிறகு எங்களிடம் வந்தது. காவல்துறையினர் வந்து பிள்ளைகளை மிரட்டுவதாகவும், காவல்துறையிடம் சென்றது தவறு என்றும் கூறி அந்தக் குடும்பத்தினர் எங்களிடம் வந்தனர். அனைவரின் பிரச்சனையையும் தீர்த்து வைக்கும் சக்திவாய்ந்த குடும்பம் அது. யார் தவறு செய்தது என்பதைக் கண்டுபிடித்த நாங்கள், அவரிடம் வழக்கை வாபஸ் வாங்கச் சொன்னோம். அவரும் வாபஸ் வாங்கினார். பிரச்சனை முடிந்தது.