மாடலிங் செய்ய ஆசைப்பட்ட குழந்தையின் பெற்றோருக்கு கொடுத்த கவுன்சிலிங் பற்றி குழந்தை வளர்ப்பு ஆலோசகர் ஆஷா பாக்யராஜ் நம்மிடம் விவரிக்கிறார்.
வசதியான குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பெற்றோர். தங்களது 10ஆம் வகுப்பு படிக்கும் மகள் சில நாட்களுக்கு முன்பு பள்ளி சென்றபோது காணாமல் போனதாகவும். அதன் பிறகு அவர்களின் மகளைத் தேடிக் கண்டுபிடித்தோம் என்றனர். பின்பு வீட்டிற்கு அழைத்து வந்ததிலிருந்து தங்கள் மகள் மாடலிங் செய்யப்போவதாக அடம்பிடிப்பதாக கூறினர். அதன் பிறகு அந்த சிறுமியிடம் நான் பேசத் தொடங்கினேன். சிறுமியிடம் பேசியதில் சின்ன வயதிலிருந்து பெற்றோர் கேட்டதையெல்லாம் வாங்கி கொடுத்து செல்லம் கொடுத்து வளர்த்திருக்கின்றனர். சிறுமிக்கு மேக் அப் போடுவதில் ஆர்வமாக இருந்ததால் அது தொடர்பான அனைத்து பொருளையும் வாங்கி கொடுத்துப் பழக்கப்படுத்தியிருக்கின்றனர் என்பது தெரிய வந்தது.
தொடர்ந்து அந்த சிறுமியிடம் பேசுகையில், சிறுமி மாடலாகப் போவதாக பெற்றோர்களிடம் கூறியிருக்கிறாள். பெற்றோர்கள் அதற்கு மறுப்பு தெரிவித்திருக்கின்றனர். ஆனால் அந்த சிறுமி, இன்ஸ்டாகிராமில் மாடலிங் தொடர்பான குரூப்களில் பேசி பழகி வந்திருக்கிறாள். அப்போது எதிர்பாராதவிதமாக ஒரு பையனிடம் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. அந்த பையன் டெல்லியைச் சேர்ந்தவன். அந்த பையன் இந்த சிறுமியின் மாடலிங் ஆசையை நிறைவேற்றுவதாகக் கூறி டெல்லிக்கு வரச் சொல்லியிருக்கின்றான். அதனால் பள்ளியிலிருந்து டெல்லிக்குக் கிளம்பியதாக சிறுமி என்னிடம் கூறினாள்.
அதன் பிறகு பெற்றோர்களை அழைத்துப் பேசும்போது, குழந்தைகளுக்கு சிறு வயதிலிருந்து ஒரு எல்லையை உருவாக்குங்கள். கேட்பதையெல்லாம் வாங்கி கொடுத்துப் பழக்காதீர்கள். முடிந்த அளவிற்குப் படிப்பு தொடர்பான காரியங்களில் குழந்தையின் ஆர்வத்தை தூண்டுங்கள். குழந்தைகளின் கனவுகளுக்கு தடையாக இருக்க வேண்டாம். அதை எப்போது செய்ய வேண்டும் என்று பொறுமையாக எடுத்துச் சொல்லுங்கள் என்றேன். அதே போல் அந்த சிறுமியிடம், மாடலிங் செய்வதற்கான வயது வரும்போது உன்னுடைய விருப்பத்தை பெற்றோர்களிடம் சொல் அதுவரை படிப்பில் கவனம் செலுத்து என்று பொறுமையாக எடுத்துச் சொல்லி அனுப்பி வைத்தேன்.
பெற்றோர்களின் தோரணையில் சொல்லியிருந்தால் அந்த சிறுமி கேட்டிருக்காது. அவர்களுக்குப் புரியும் வகையில் எடுத்துச் சொல்ல வேண்டும். இப்போதுள்ள குழந்தைகள் யூடியூப் வாயிலாகவும் மற்ற சமூக வலைதளங்கள் வாயிலாகவும் பார்ப்பதற்கெல்லாம் ஆசைப்படுவார்கள். முடிந்தளவு அதற்கான எல்லைகளை உருவாக்குங்கள். குழந்தைப் பருவத்திற்கான ஆக்கப்பூர்வமான காரியங்களில் ஆர்வத்தைத் தூண்டுகள். இது போலச் செய்தால் குழந்தைகளின் நல்ல விதத்தில் தங்களின் செயல்பாடுகளைச் செய்வார்கள் என்றார்.