
குடும்ப நல வழக்குகள் பலவற்றை கையாண்டது குறித்த அனுபவங்களை ‘வழக்கு எண்’ என்ற தொடரின் வழியே தொடர்ச்சியாக வழக்கறிஞர் சாந்தகுமாரி நம்மிடம் பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் அவர் பெங்களூரு ஐ.டி. ஊழியர் அதுல் சுபாஷ் தற்கொலை வழக்கு குறித்து தனது கருத்துகளை பகிர்ந்துள்ளார்.
அதுல் சுபாஷ் மற்றும் அவரது மனைவி நிகிதா தொடர்ந்த வழக்கு குடும்பநல வழக்குதான். தற்கொலை செய்துகொண்ட நபர் பாதிக்கப்பட்டதாகப் பலர் ஆதரவு தெரிவிப்பதால் அனைவரது கவனத்திற்கும் வந்துள்ளது. அதுல் சுபாஷ் இறப்பதற்கு முன்பு பேசிய காணொளியில், தன் மனைவி ஜீவனாம்சம் கேட்டதாகக் கூறுகிறார். அந்த தொகை அதிகமாக இருந்தால் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து மாற்றியிருக்கலாம். எல்லா நீதிபதிகளும் வருமானம் என்ன ஸ்டெட்டஸ் என்ன என்பதைப் பார்த்துதான் ஜீவனாம்சம் தரக் கோரி உத்தரவிடுகின்றனர். எனவே அதைக்கேட்டு மேல்முறையீடு செய்திருக்கலாம். இறந்தவரை பற்றி பகுப்பாய்வு செய்ய விரும்பவில்லை. அதே நேரத்தில் அவர் இறந்திருக்கக் கூடாது என்பதுதான் என்னுடைய விருப்பம்.
நீதிமன்றத்தில் தனக்கெதிராக ஊழல் நடக்கிறது என்றும் மனைவி தன் மீது 9 பிரிவுகளில் பொய் வழக்குகள் போடப்பட்டுள்ளது என்றும் இறப்பதற்கு முன்பு அதுல் சுபாஷ் கூறியுள்ளார். அதோடு தான் இறந்த பிறகு மனைவியின் குடும்பத்தாரை தன்னுடைய உடலுக்கு அருகில் நெருங்கவிடக்கூடாது என்றும் அவர் சொல்லியிருப்பது அவரின் மன வேதனையின் வெளிப்பாடுதான். பொதுவாகப் பெண்கள் சேர்ந்து வாழ வேண்டும் என்று கூறி ஜீவனாம்சம் கேட்டு பெற முடியும். நீதிபதிகள் ஒருவேளை லஞ்சம் கேட்டிருந்தால் அதற்கான அமைப்பில் புகார் அளித்திருக்கலாம் தலைமை நீதிபதியிடம் தெரிவித்திருக்கலாம். எல்லா நீதிபதிகளும் லஞ்சம் வாங்குகிறவர்கள் அல்ல. சமூகத்தில் நல்லவர்கள் கெட்டவர்கள் என இருக்கத்தான் செய்வார்கள். தவறு செய்பவர்கள் மீது கண்டிப்பாக நீதித்துறை நடவடிக்கை மேற்கொள்ளும்.
இந்த விவகாரத்தில் பலர் ஆண்கள் பாவம் என்றும் ஆண்களுக்கான சட்டங்கள் வரவேண்டும் என்று குரல் கொடுத்து வருகின்றனர். முன்பு பாராளுமன்றத்தில் குடும்ப வன்முறை சட்டத்திற்கான மசோதாவை நிறைவேற்ற முன்வராமல் இருந்தனர். காரணம் ஆம்பளையாக இருந்தால் மனைவியை இரண்டு தட்டு தட்டத்தான் செய்வான் என்ற மனநிலையுடன் இருந்தனர். அதன் பின்புதான் இந்த சட்டத்திற்கான மசோதா நிறைவேற்றப்பட்டது. அதுவரையிலும் பெண்கள் வரதட்சணை என்ற பெயரில் அடிவாங்கத்தான் செய்தார்கள். இப்படி பெண்கள் கஷ்டப்படும் நேரத்தில் ஆண்கள் ஏன் தங்களுக்கான சட்டங்கள் வேண்டும் என்று போராடவில்லை. ஏனென்றால் ஆண்கள் அடிக்கும் இடத்திலும் பெண்கள் அடிவாங்கும் இடத்தில் இருந்துள்ளார்கள். இதிலிருந்து பெண்களை பாதுகாக்கத்தான் குடும்ப வன்முறை சட்டம் இயற்றப்பட்டது.
சில வருடங்களுக்கு முன்பு உச்சநீதிமன்றத்தில் சந்திர மெளலிஸ்வரர் என்ற நீதிபதி கொடுத்த தீர்ப்பு விவாதங்களை எழுப்பியது. அந்த தீர்ப்பில் பெண்கள் வரதட்சணை கொடுமை என்று தொடரும் வழக்குகளில் 40% வழக்குகள் போலியானது என்று சொல்லியிருந்தார். அதோடு வரதட்சணை என்று புகார் கொடுத்தால் உடனடியாக ஆண்களைக் கைது செய்யக்கூடாது என்று கூறியிருந்தார். அவர் சொன்னது போல் அப்படிப்பட்ட வழக்குகளும் இருந்தது. இதையடுத்துதான் டெளரி ப்ரோஹிபிஷன் அதிகாரிகளை நியமித்தார்கள். இந்த அதிகாரிகள் வழக்குகளின் உண்மைத் தன்மையை ஆராய்ந்து கொடுக்கும் ரிப்போர்ட்ர்டை வைத்து முடிவுகள் எடுக்கப்பட்டது.
பெண்களுக்கு குடும்ப வன்முறை சட்டம், பணியிடத்தில் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் துன்புறுத்தல்களுக்கு எதிராக பாதுகாப்பை வழங்குவதற்கான சட்டம், தமிழ்நாடு பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் இதுபோன்ற 33க்கும் மேற்பட்ட சட்டங்கள் இருக்கிறது. இந்த சட்டங்கள் அனைத்தும் பெண்களுக்காக போராடி பெற்ற உரிமைகள். இந்த உரிமையை பெண்கள் நியாயமான முறையில் வழக்கு தொடர்ந்து காப்பாற்ற வேண்டும். பெண்கள் சட்டத்தை தவறாக பயன்படுத்தினால் பூமராங் போல் பாதிப்பு அவர்களுக்கு வரும். ஆண்களுக்கு எதிராக பெண்கள் சொல்வது அத்தனையும் உண்மை என்றும் சொல்லிவிடமாட்டேன். ஏனென்றால் சில இடங்களில் பெண்கள் தரப்பு வழக்கறிஞர்கள், சில பாயிண்ட் இருந்தால்தான் கேஸ் ஸ்ட்ராங் ஆகும் என புகார் கொடுக்கும்போது எழுத சொல்வார்கள். சில நேரம் அது நல்ல எண்ணத்தில் கூட செய்திருக்கலாம். எனவே பெண்கள் நேர்மையான முறையில் புகார் அளிக்க வேண்டும். கிடைத்த ஆயுதத்தை தவறாக பயன்படுத்த கூடாது. அதே போல் தற்கொலை எதற்கும் தீர்வல்ல அது கோழைத்தனம் என்றார்.