முதல் பெண் துப்பறிவாளர் மாலதி, தான் துப்பறிந்த வழக்குகளில் உள்ள சுவாரசியமான விஷயங்களை நம்மோடு பகிர்ந்து கொண்டு வருகிறார். அந்த வகையில், ஒரு சம்பவத்தைப் பற்றியும், அதில் நடந்தவற்றையும் விவரிக்கிறார்.
கணவனை இழந்த ஒரு பெண் கால் செய்து வீட்டில் சில பிரச்சனைகள் நடக்கிறது. அதை நேரில்தான் சொல்லுவேனென்று என்னை வந்து சந்தித்தார். அப்போது அந்த பெண், தன் பையனுக்கு 29 வயது ஆகிறது. ஆனாலும் சில நேரங்களில் சாப்பாடு ஊட்டிவிடுவதாகக் கூறினார். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அதன் பிறகு தான் அந்த பையன் வெள்ளந்தியான பையன் என்ற விவரத்தைக் கூறினார். மேலும் தனது பையன் ஒரு பெண்ணை விரும்புவதாகவும். அந்த பெண் தனது பையனைவிட மூத்தவள் என்றார்.
தொடர்ந்து அந்த பையனின் அம்மாவிடம் பேசும்போது, மகன் காதலித்த பெண் மூத்தவளாக இருப்பதால் திருமணத்திற்கு மறுப்பு தெரிவிக்காமல் முதலில் ஒப்புக்கொண்டிருக்கிறார். அதன் பிறகு இந்த விஷயத்தை அந்த பையனின் தாய் மாமாவிடம் தெரிவித்திருக்கின்றனர். அவர் தன் மருமகன் காதலித்து வந்த பெண்ணின் குடும்பத்தைப் பற்றி விரிவாகச் சொல்லியிருக்கிறார். அதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அந்த அம்மா தனது மகன் காதலித்த பெண் வீட்டில் திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்திருக்கிறார்.
ஆனால் அந்த அம்மாவின் மகன் காதலித்தபோது, தனது காதலியுடன் மிகவும் நெருக்கமாக வாட்ஸ்அப்பில் பேசியிருக்கிறான். அதை வைத்துக்கொண்டு காவல்நிலையத்தில் புகார் தெரிவித்துவிடுவோம் என்று அந்த காதலியும் அவள் குடும்பமும் மிரட்டல் விடுத்துள்ளது. அதோடு மட்டுமில்லாமல் ஒரு பெரிய தொகையைக் கொடுக்கச் சொல்லிக் கேட்டிருக்கின்றனர். ஆனால், அந்த தொகையைத் தரப் பையனின் அம்மா மறுத்திருக்கிறார். இதையெல்லாம் கேட்ட பின்பு அந்த குடும்பத்தின் பின்னணி பற்றிய முழு விவரத்தை விசாரிக்கச் சொல்லி சிலரை அனுப்பினோம்.
விசாரணையில் அந்த குடும்பமே ஏமாற்றிப் பிழைப்பவர்கள் என்று தெரியவந்தது. அதை முழு ரிப்போட்டாக அந்த அம்மாவிடம் கொடுத்தோம். நாங்கள் கொடுத்த அந்த குடும்பத்தைப் பற்றிய முழு விபரம் அவர்களிடம் இருப்பதால் இப்போது அந்த குடும்பம் காவல்நிலையத்தில் புகார் தெரிவிக்கப் போகிறோம் என்று மிரட்ட முடியாது. அந்தளவிற்கு அந்த குடும்பத்தைப் பற்றிய மொத்த குற்றப் பின்னணியும் இப்போது அந்த அம்மாவிடம் இருக்கிறது. அதனால் இப்போது நிம்மதியாக இருக்கின்றனர்.