நான்கு தொகுதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு தேர்தல் பிரச்சாரங்கள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அரவக்குறிச்சி இடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளரை ஆதரித்து கமல்ஹாசன் பேசியபோது, சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து, அவர் பெயர் நாதுராம் கோட்சே என்று கூறியிருந்தார். கமல்ஹாசனின் இந்தக் கருத்து பெரும் சர்ச்சையை கிளிப்பியுள்ள நிலையில், இதுகுறித்து பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தூத்துக்குடியில் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில்,
இந்துக்களை வம்பிழுக்கும் வேலையை செய்கிறார் அவர். இது யாரை திருப்திப்படுத்த? கமல்ஹாசன் ஐஎஸ் தீவிரவாதிகளிடம் பணம் வாங்கிகொண்டாரா? ஏன் இங்கு சண்டையை இழுத்துவிட பார்க்கிறார். இதுபற்றி மத்திய உளவுத்துறை விசாரிக்க வேண்டும்.
அவர் பின்னாடி நின்று அவரை இயக்குவது யார்? என்பதை பார்க்க வேண்டும். ஒருவேளை அவர் அதை உணர்ந்துவிட்டால் ஒரு வேகத்தில், அறியாமையில் அப்படி பேசிவிட்டேன் என்று அவர் மறுப்பு செய்தி கொடுத்தால் நாக்கை அறுத்துவிடுவேன் என நான் கூறிய கருத்தை நான் வாபஸ் பெறுகிறேன்.
இந்துக்களையும், இந்து கடவுள்களையும் வம்புக்கு இழுபத்தையே சிலர் வாடிக்கையாக வைத்துள்ளனர். திமுக தலைவர் ஸ்டாலின், வீரமணி, திமுகவின் சில பேச்சாளர்கள் இப்பொழுது கமலும் அவர்களுடன் சேர்ந்து கொண்டுள்ளார். கமலின் கருத்துக்கு ஆதரவு சொன்ன அழகிரி தமிழகத்தில் மட்டுமல்ல இந்தியாவிலேயே இருக்க தகுதி அற்றவர். அவர் இத்தாலி நாட்டுக்கு வேண்டுமானால் போகலாம் என்றார்.