சேலம் அருகே உடையாப்பட்டியில் சேலம் கிழக்கு வட்டார போக்குவரத்து அலுவலகம் (ஆர்டிஓ) செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தில் வாகனங்களை பதிவு செய்தல், பர்மிட் வழங்குதல், மீள்பதிவு செய்தல், தகுதிச்சான்று வழங்குதல் ஆகிய சேவைகளுக்காக லஞ்சம் கரைபுரண்டு ஓடுவதாக சேலம் மண்டல லஞ்ச ஒழிப்புப் பிரிவுக்கு புகார்கள் வந்தன.
இதுகுறித்து இன்று காலை (ஆகஸ்ட் 2, 2018) வழக்குப்பதிவு செய்த போலீசார், கிழக்கு ஆர்டிஓ அலுவலகத்தில் மாலை 5 மணியளவில் திடீர் சோதனையிலும் ஈடுபட்டனர். டிஎஸ்பி சந்திரமவுலி தலைமையில் மூன்று இன்ஸ்பெக்டர்கள் உள்ளிட்ட பத்து பேர், இந்த சோதனையில் ஈடுபட்டனர்.
குறிப்பாக, ஆர்டிஓ அதிகாரி கதிரவன் மீது அடுக்கடுக்கான புகார்கள் வந்திருந்ததால் அவரை தனி அறைக்கு அழைத்துச்சென்று போலீசார் விசாரணை நடத்தினர். பிரேக் இன்ஸ்பெக்டர்கள் குலோத்துங்கன், பதுமைநாதன் ஆகியோரிடமும் விசாரணை நடந்தது.
லஞ்ச ஒழிப்புப்போலீசார் சோதனைக்கு உள்ளே நுழைந்ததை அறிந்ததும் புரோக்கர்கள் சிலர் அந்த வளாகத்தை விட்டு ஓட்டம் பிடித்தனர். அவர்களை துரத்திப் பிடித்த போலீசார், விசாரணை முடியும் வரை வெளியே செல்ல அனுமதிக்கவில்லை. அதேபோல் வெளியில் இருந்தும் யாரையும் ஆர்டிஓ அலுவலகத்துக்குள் நுழைய முடியாதபடிக்கு எல்லா வாயில்களையும் போலீசார் பூட்டு போட்டு பூட்டினர்.
இந்த சோதனையில் கணக்கில் வராத 2 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. என்றாலும் சோதனை இன்னும் முடியவில்லை. லஞ்சப் பணத்தை அதிகாரிகள் நேரடியாக வாங்காமல் டிரைவிங் பயிற்சிப்பள்ளி ஆட்களை புரோக்கர்களாக நியமித்து அவர்கள் மூலம் வசூலித்து இருப்பது தெரிய வந்துள்ளது.
ஆர்டிஓ அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புப் போலீசார் சோதனையும், அதிகாரிகளிடம் விசாரணையும் நள்ளிரவு 1.15 மணிக்கு மேலாகியும் நடந்தது.