விவசாய விளை நிலங்கள் வழியாக மின்கோபுரம் அமைப்பதை கைவிட வேண்டும் என்பதை வலியுறுத்தி ஈரோடு மாவட்டம் வெள்ளோடு அருகே உள்ள மைலாடி, நடுப்பாளையம் பகுதி பொதுமக்கள், கலெக்டர் பிரபாகரிடம் மனு கொடுத்தனர்.
தமிழ்நாடு மின்தொடர்பு கழகத்தால் வெள்ளோடு கிராமம், தண்ணீர்பந்தல் என்ற இடத்தில் புதிதாக துணை மின்நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த மின்நிலையத்திற்கு ஏற்கனவே உள்ள ஈங்கூர்- பொன்னாபுரம் 2 மின்பாதை கோபுரத்திலிருந்து மைலாடி, நடுப்பாளையம் ஊர்களில் உள்ள சிறுகுறு விவசாய விளை நிலங்கள் வழியாக சம்பந்தப்பட்ட விவசாயிகளின் அனுமதி இல்லாமல் உயர் அழுத்த மின்கோபுரங்கள் அமைக்கிறார்கள்.
ஏழை எளிய விவசாயிகளின் வாழ்வாதாரம் இதனால் கடுமையாக பாதிக்கப்படுகிறது. மேலும் இந்த மின்பாதை செல்லும் வழியில் உள்ள தென்னை, பனை, வாழை மரங்களை வெட்டி சாய்த்து வருகின்றனர். இதனால் அப்பகுதியில் உள்ள விவசாய நிலங்கள் கடுமையான பாதிப்புக்குள்ளாகின்றன.
புதிதாக அமையவுள்ள துணை மின்நிலையத்திற்கு மிக அருகாமையில் ஒரு கிமீ தொலைவில் மின் கோபுரம் உள்ளது. அதன் வழியாக சாலையோரம் கேபிள் அமைத்து இத்திட்டத்தை செயல்படுத்தலாம். அப்போது விவசாய நிலங்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. அதைவிட்டு விட்டு 4 கிமீ தூரம் அரசுக்கு அதிக செலவை ஏறபடுத்தும் வகையில், மின்பாதை அமைக்கின்றனர்.
மத்திய மாநில அரசின் கிராமப்புற வளர்ச்சி கொள்கைக்கு மாறாக, விவசாய நிலத்தை பாதிப்படையச் செய்யும் இத்திட்டத்தை தடுத்து நிறுத்தி, சாலையோரமாக கேபிள் அமைத்து விவசாயிகளின் நிலங்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். இவ்வாறு அந்த மனுவில் தெரிவித்துள்ளனர்.