உலகக் கோப்பை கிரிக்கெட் 2023ன், 12வது லீக் ஆட்டம் நேற்று(14ம் தேதி) குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. இந்தியா - பாகிஸ்தான் அணிகள் இதுவரை இரு அணிகளும் உலகக் கோப்பை போட்டியில் எட்டு முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இந்த எட்டு போட்டியிலும் இந்திய அணியே வெற்றி பெற்றுள்ளது.
இதில், டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பீல்டிங்கை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் தொடக்கத்தில் ஓரளவு சிறப்பாக விளையாடினாலும், அந்த அணியின் மிடில் ஆர்டரை இந்திய அணியின் பந்துவீச்சு நிலைகுலையச் செய்தது. ஒரு கட்டத்தில் 155-2 என்று வலுவாக இருந்த பாகிஸ்தான் அணி, பும்ரா மற்றும் குல்தீப்பின் பந்து வீச்சில் தடுமாறத் தொடங்கியது. அரை சதம் அடித்து நன்றாக ஆடிய பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாமை குல்தீப் அவுட் ஆக்க, மறுபுறம் சிறப்பாக ஆடிக் கொண்டிருந்த ரிஸ்வானை பும்ரா கிளீன் போல்டு ஆக்கினார். அடுத்து வந்தவர்கள் சொற்ப ரன்களில் இந்திய அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த பாகிஸ்தான் அணி 191 ரன்கள் எடுத்தது. பாகிஸ்தான் அணியில் அதிகபட்சமாக கேப்டன் பாபர் அஸாம் 50 ரன்களையும், முகமது ரிஸ்வான் 49 ரன்களையும், இமாம் உல் ஹக் 36 ரன்களும் எடுத்தனர். இதன் மூலம் இந்திய அணிக்கு, பாகிஸ்தான் அணி 192 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. இந்திய அணியின் பும்ரா, சிராஜ், ஹர்திக், குல்தீப், ஜடேஜா என அனைவரும் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
அதன் பின்னர் 192 ரன்கள் இலக்காகக் கொண்டு களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோஹித் மற்றும் கில் களமிறங்கினர். கில் 4 பவுண்டரிகளுடன் 16 ரன்கள் அடித்து சஹீன் அப்ரிடி பந்தில் அவுட் ஆனார். ஆரம்பத்தில் இருந்தே அதிரடி காட்டிய கேப்டன் ரோஹித், பாகிஸ்தான் பந்துவீச்சை மைதானத்தின் நாலாபுறமும் சிதறடித்தார். கோலி பொறுமை காட்ட, ரோஹித் 36 பந்துகளில் அரை சதம் கடந்து அசத்தினார். கோலி 16 ரன்களுக்கு ஆட்டம் இழக்க, அடுத்து வந்த ஸ்ரேயாஸ் உடன் இணைந்த ரோஹித், மேலும் தனது அதிரடியைக் காட்டினார். அவருடன் இணைந்து ஸ்ரேயாசும் சிக்ஸர் பவுண்டரி என வெளுத்து வாங்க, ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ரோஹித் 86 ரன்களில் ஆட்டம் இழந்தார். ஸ்ரேயாசுடன் இணைந்த ராகுல் இறுதிவரை களத்தில் நின்றார். ஸ்ரேயாஸ் 53 ரன்களும், ராகுல் 19 ரன்களும் எடுக்க இந்திய அணி 192 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் எட்டாவது முறையாக உலகக் கோப்பைகளில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
பாகிஸ்தான் அணி தரப்பில் சகின் அப்ரிடி இரண்டு விக்கெட்டுகளும், ஹசன் அலி ஒரு விக்கெட்டும் எடுத்தனர். இருக்கை நுனியில் அமரும் சிறப்பான தருணங்களை எதிர்பார்த்துக் காத்திருந்த இந்திய அணி ரசிகர்களுக்கு, இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் மற்றும் பேட்ஸ்மேன்கள் இணைந்து தங்களது சிறப்பான ஆட்டத்தின் மூலம், இலகுவான தருணங்களாக மாற்றி, ஒரு இமாலய வெற்றியைப் பரிசாகக் கொடுத்துள்ளனர். இதன் மூலம் எட்டாவது முறையாக வரலாற்று வெற்றியை இறுகப்பற்றியுள்ளது இந்தியா. இந்தப் போட்டியில் சிறப்பாகப் பந்து வீசிய வேகப்பந்து வீச்சாளர் பும்ராவுக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.
இந்தப் போட்டி குறித்து இந்திய பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் சமூகவலைதளப் பக்கத்தில், “அகமதாபாத்தில் இந்தியா சிறந்த வெற்றியைப் பெற்றுள்ளது. இந்த வெற்றிக்கும், எதிர்வரும் ஆட்டங்களுக்கும் இந்திய அணிக்கு வாழ்த்துகள்” எனத் தெரிவித்தார். இந்தியா முழுக்க ரசிகர்கள் இந்திய வெற்றியை கொண்டாடினர்.
உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணி இது வரை பாகிஸ்தானிடம் தோற்றதே கிடையாது எனும் வரலாற்றை தக்க வைத்தபோதிலும், இந்தப் போட்டியில் பல சர்ச்சைகள் எழுந்துள்ளன. குறிப்பாக பாகிஸ்தான் அணியினர் பேட்டிங்கில் இருந்தபோது மைதானத்தில் இருந்த ரசிகர்கள் ‘ஜெய் ஸ்ரீராம்.. ஜெய் ஸ்ரீராம்’ என தொடர்ந்து கோஷம் எழுப்பினர். அதேபோல், பாகிஸ்தான் வீரர் முகமது ரிஸ்வான் அவுட் ஆகி பெவிலியன் திரும்பியபோது அங்கிருந்த இந்திய ரசிகர்கள் மீண்டும், ‘ஜெய் ஸ்ரீராம்.. ஜெய் ஸ்ரீராம்’என கோஷம் எழுப்பினர். இதற்கு பல்வேறு தரப்பினரும், விளையாட்டை விளையாட்டாக பார்க்க வேண்டும். என தங்களது கண்டனங்களைத் தெரிவித்துவருகின்றனர்.
தமிழ்நாட்டு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இது குறித்து தனது சமூகவலைதளப் பக்கமான எக்ஸில், “இந்தியா அதன் விளையாட்டுத்திறன் மற்றும் விருந்தோம்பல் ஆகியவற்றிற்கு புகழ்பெற்றது. இருப்பினும், அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் பாகிஸ்தான் வீரர்களுக்கு நேர்ந்தது ஏற்றுக்கொள்ள முடியாதது. விளையாட்டு நாடுகளுக்கு இடையே ஒருங்கிணைக்கும் சக்தியாக இருக்க வேண்டும், உண்மையான சகோதரத்துவத்தை வளர்க்க வேண்டும். வெறுப்பைப் பரப்பும் கருவியாகப் பயன்படுத்துவது கண்டிக்கத்தக்கது” என்று தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் அணியின் இயக்குநர் மிக்கி ஆர்தர், “இது ஐ.சி.சி. நடத்திய போட்டிபோல் இல்லை. பி.சி.சி.ஐ. நடத்திய போட்டிபோல் இருந்தது. மைதானத்தில் பாகிஸ்தானுக்கு ஆதரவான எந்த கோஷமும் அடிக்கடி வரவில்லை. நான் இதை (தோல்விக்கு) காரணமாக கூறவில்லை” என்று தெரிவித்தார்.