ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் பிரிஸ்பேன் நகரில் இன்று தொடங்கி நடைபெற்றுவருகிறது. ஆஸ்திரேலியா - இந்தியா அணிகளுக்கு இடையில் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் டெஸ்டில் ஆஸ்திரேலியாவும், 2-வது டெஸ்டில் இந்தியாவும் வெற்றி பெற்றது. 3-வது டெஸ்ட் டிராவில் முடிந்தது. எனவே, இந்த போட்டியில் வெற்றிபெறும் அணி தொடரைக் கைப்பற்றும். இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பேட்டிங்கைத் தேர்வு செய்து விளையாடியது.
இந்திய வீரர்களின் அடுத்தடுத்த காயங்கள் காரணமாக இந்த போட்டியில் விளையாடும் வாய்ப்பு தமிழக வீரர் நடராஜன் மற்றும் வாஷிங்டன் சுந்தருக்கு கிடைத்தது. ஆட்டத்தின் முதல் தினமான இன்று நடராஜன், சுந்தர் என இருவருமே சிறப்பாகப் பந்துவீசி இந்திய ரசிகர்களிடம் அப்லாஸ்க்களை அள்ளினர். இதில் தமிழக வீரர் நடராஜன் இரண்டு விக்கெட்டுகளையும், வாஷிங்டன் சுந்தர் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினார்.
இந்த போட்டியின் மூலம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தனது போட்டியிலேயே முதல் டெஸ்ட் விக்கெட்டை வீழ்த்தியுள்ள நடராஜன் மேலும் ஒரு சாதனையையும் படைத்துள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் ஒரே சுற்றுப்பயணத்தின் போது மூன்று விதமான ஃபார்மெட்களிலும் அறிமுகமான முதல் இந்திய கிரிக்கெட் வீரர் என்ற சாதனைதான் அது. ஆஸ்திரேலிய தொடருக்கு நெட் பவுலராக சென்ற நடராஜன், மூன்று ஃபார்மெட்களிலும் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி பலரையும் வியப்படையவைத்துள்ளார் என்றால் மிகையாகாது.