இந்தியா - இங்கிலாந்து இடையேயான டெஸ்ட் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இந்தநிலையில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த, இங்கிலாந்து நாட்டின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் மான்டி பனேசர், இங்கிலாந்து - இந்தியா தொடருக்கு 'டெண்டுல்கர் - குக் டிராஃபி' எனப் பெயரிட வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "இங்கிலாந்து - இந்தியா டெஸ்ட் தொடரை "டெண்டுல்கர்- குக் டிராஃபி" என்று அழைக்க வேண்டும், ஏனெனில் இருவரும் தங்கள் நாடுகளுக்கு அதிக டெஸ்ட் ரன்களைக் எடுத்துள்ளனர். பல போட்டிகளில் அவர்கள் ஒருவருக்கொருவர் எதிராக விளையாடியுள்ளனர். மேலும், டெண்டுல்கர் ஒரு ஜாம்பவான் என்பது நமக்குத் தெரியும். அவர் பெயரில் எந்த சீரிஸும் இல்லை" எனக் கூறியுள்ளார்.
மேலும், மான்டி பனேசர் தனது ட்விட்டர் பக்கத்தில், இந்தியா- இங்கிலாந்து இடையேயான தொடருக்கு யார் பெயரை வைக்கலாம் என, ஒரு வாக்கெடுப்பையும் நடத்தியுள்ளார். அதில் அதிகமானோர் 'டெண்டுல்கர் - குக் டிராஃபி' என்பதையே தேர்வு செய்துள்ளனர். இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையேயான டெஸ்ட் தொடர், 'பார்டர் - கவாஸ்கர் ட்ராஃபி' என அழைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.