ஃபிஃபா கால்பந்து உலகக்கோப்பையில் போர்ச்சுக்கல் அணி பயிற்சியாளர் போர்ச்சுக்கல் அணியின் நட்சத்திர வீரரான ரொனால்டோவை தென்கொரியா உடனான ஆட்டத்தில் களமிறக்கவில்லை. எனினும் மாற்று வீரராக களமிறக்கப்பட்ட கோன்கலோ அந்தப் போட்டியில் 3 கோல்களை அடித்தார். ஆனால், இந்த யுக்தி காலிறுதியில் எடுபடவில்லை. மொராக்கோ உடனான போட்டியில் ரொனால்டோ முதல் பாதியில் பெஞ்ச் செய்யப்பட்டார்.
அந்தப் போட்டியில் போர்ச்சுக்கலுடன் மொராக்கோ அணி கடுமையாகப் போட்டியிட்டு முதல் பாதியிலேயே கோல் அடித்தது. இரண்டாம் பாதியில் ரொனால்டோ களமிறக்கப்பட்டாலும் மொராக்கோ அணி சிறந்த தடுப்பாட்டத்தை வெளிப்படுத்தி போர்ச்சுக்கல்லை ஒரு கோல் கூட அடிக்கவிடாமல் செய்தது.
இதனால் இந்தப் போட்டியில் மொராக்கோ வெற்றிபெற்றது. இதனால் போர்ச்சுக்கல்லின் பயிற்சியாளர் பெர்னாண்டோ சாண்டோஸ் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளானார். போர்ச்சுக்கல் அணி உலகக்கோப்பையில் இருந்து வெளியேறியதன் விளைவாக அணி நிர்வாகம் பயிற்சியாளர் சாண்டோஸை விடுவித்துள்ளது. 2024 யூரோ தொடர் வரை ஒப்பந்தம் செய்யப்பட்டு இருந்த சாண்டோஸ், இந்த உலகக்கோப்பையில் இருந்து போர்ச்சுக்கல் வெளியேறியதன் காரணமாக விடுவிக்கப்பட்டுள்ளார்.
37 வயதாகும் ரொனால்டோ இம்முறையாவது உலகக்கோப்பையை வெல்ல வேண்டுமென்ற கனவுடன் இருந்தார். போட்டியில் தோற்றதாலும் அடுத்த உலகக்கோப்பையில் விளையாடும் வாய்ப்பு குறைவு என்பதாலும் களத்திலிருந்து கண்ணீருடன் வெளியேறினார்.