அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் தென் மண்டல பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மகளிர் கால்பந்து போட்டிகள் பல்கலைக்கழக உடற்கல்வித் துறை விளையாட்டு மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் ஆறு மாநிலங்களில் இருந்து 26 பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த அணிகள் பங்கேற்கின்றன. இந்தப் போட்டியைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் ராம.கதிரேசன் துவக்கி வைத்தார்.
தமிழ்நாடு விளையாட்டுப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் வைத்தியநாதன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார். அகில இந்தியப் பல்கலைக்கழகக் கூட்டமைப்பு சார்பாக உடற்கல்வி இயக்குநர் ராம்குமார், பல்கலைக்கழகக் கல்வி புல முதல்வர் குலசேகர பெருமாள் பிள்ளை, உடற்கல்வித் துறைத்தலைவர் செந்தில்வேலன், துறை இயக்குநர் ராஜசேகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில் கண்ணூர் பல்கலை., கோழிக்கோடு பல்கலை., சென்னை வேல்ஸ் இன் டாஸ் பல்கலை., தமிழ்நாடு விளையாட்டு பல்கலை., திருவள்ளுவர் பல்கலை., மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை., பாரதியார் பல்கலை., வீடியு பெல் காவி பல்கலைக்கழகம் உள்ளிட்ட 26 பல்கலைக்கழக அணிகள் பங்கு பெறுகின்றன.
இதில் சனிக்கிழமை நடைபெற்ற காலிறுதிப் போட்டியில் பெரியார் பல்கலைக்கழக அணி, மதுரை காமராஜர் பல்கலைக்கழக அணியை (6 - 0) என்ற கோல் கணக்கிலும், வேல்ஸ் இன் டாஸ் பல்கலைக்கழகம் அணி, சென்னை பல்கலைக்கழக அணியை (5-4) என்ற கோல் கணக்கிலும், அண்ணாமலை பல்கலைக்கழக அணி, புதுவை பல்கலைக்கழகத்தை (10-0) என்ற கோல் கணக்கிலும், பாரதியார் பல்கலைக்கழகம் அணி, பாரதிதாசன் பல்கலைக்கழக அணியை (4-2) என்ற கோல் கணக்கிலும் வீழ்த்தி அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறின.
அதேபோல் காலிறுதியில் வெற்றி பெற்ற அண்ணாமலை பல்கலைக்கழகம், சேலம் பெரியார் பல்கலைக்கழகம், சென்னை வேல்ஸ் இன் டாஸ் பல்கலைக்கழகம் மற்றும் கோவை பாரதியார் பல்கலைக்கழகம் ஆகிய தமிழகத்தைச் சேர்ந்த 4 பல்கலைக்கழக அணிகளும் குவாலியரில் நடைபெறும் அனைத்து இந்தியப் பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளன.
இதனைத் தொடர்ந்து, சனிக்கிழமை மாலை நடைபெற்ற அரையிறுதிப் போட்டிகளில் அண்ணாமலை பல்கலைக்கழக அணி, பாரதியார் பல்கலைக்கழக அணியை (5-0) கோல் கணக்கில் வெற்றி பெற்றது. மற்றொரு லீக் போட்டியில் வேல்ஸ் இன் டாஸ் பல்கலைக்கழக அணி, பெரியார் பல்கலைக்கழகம் ஆகிய இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்காமல் சமநிலையில் போட்டி நிறைவு பெற்றது.