Skip to main content

அரசு கல்லூரிகளில் 5,699 கவுரவ விரிவுரையாளர்கள் நியமனம்; 20 ஆயிரம் ரூபாய் தொகுப்பூதியம்

Published on 25/06/2023 | Edited on 25/06/2023

 

nn

 

அரசு கலை, அறிவியல் கல்லூரிகள், கல்வியியல் கல்லூரிகளில் நடப்புக் கல்வி ஆண்டில் 5,699 கவுரவ விரிவுரையாளர்களை நியமித்துக் கொள்ள உயர்கல்வித்துறை அனுமதி அளித்துள்ளது. அவர்களுக்கு மாதம் 20 ஆயிரம் தொகுப்பூதியம் வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளது.

 

தமிழகம் முழுவதும் 164 அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் மற்றும் கல்வியியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இக்கல்லூரிகளில் நடப்புக் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. இது ஒருபுறம் இருக்க, காலியாக உள்ள கவுரவ விரிவுரையாளர் பணியிடங்களை நிரப்ப உயர்கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. ஏற்கனவே கடந்த 2022 - 2023 ம் கல்வி ஆண்டில் 2423 கவுரவ விரிவுரையாளர்கள் நியமிக்கப்பட்டனர்.

 

இதற்கிடையே, பல்கலைக்கழகங்கள் கட்டுப்பாட்டில் இருந்த 41 உறுப்புக் கல்லூரிகள் இரண்டு கட்டங்களாக அரசுக் கல்லூரிகளாக மாற்றப்பட்டன. நடப்பு 2023 - 2024ம் கல்வி ஆண்டில் அரசுக் கல்லூரிகளில் காலியாக உள்ள 5,699 கவுரவ விரிவுரையாளர் பணியிடங்களை நிரப்பிக் கொள்ள உயர்கல்வித்துறை செயலாளர் கார்த்திகேயன் அனுமதி அளித்துள்ளார்.

 

அதன்படி, அரசு கலை, அறிவியல் கல்லூரிகள், கல்வியியல் கல்லூரிகளில் காலியாக உள்ள உதவி பேராசிரியர்கள் பணியிடங்கள் நிரப்பப்படும் வரை, தொகுப்பூதிய அடிப்படையில் கவுரவ விரிவுரையாளர்களை நியமித்துக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

 

கவுரவ விரிவுரையாளருக்கு மாதம் 20 ஆயிரம் ரூபாய் தொகுப்பூதியமாக வழங்கப்படும். ஓராண்டில் 11 மாதங்களுக்கு இந்த தொகுப்பூதியம் வழங்கப்படும். இதற்காக 125.37 கோடி ரூபாய் ஒதுக்கி அரசு ஆணையிட்டுள்ளது. யுஜிசி விதிகளின்படி, கவுரவ விரிவுரையாளர் பணியிடங்கள் நிரப்பப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

 

தங்களுடைய பணிக்காலத்தில் இடைநிற்றல் ஏற்பட்டாலோ, இறப்பு அல்லது இதர காரணங்களால் காலியிடம் ஏற்படும் நிலையில், அந்தப் பணியிடத்தை அரசின் அனுமதி பெற்ற பின்னரே நிரப்பப்பட வேண்டும். இது தொடர்பாக ஏற்கனவே வெளியிடப்பட்ட அரசாணைகளில் உள்ள வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி, அதன் அடிப்படையில் பணி நியமனம் மேற்கொள்ளப்பட வேண்டும். ஆசிரியர், மாணவர் விகிதாச்சாரம் 1:30 என்ற அடிப்படையில் இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் உயர்கல்வித்துறை உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்