2024 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள மக்களவை பொதுத் தேர்தலுக்கான ஆயத்தப்பணிகளின் முக்கிய அம்சங்களை ஆய்வு செய்வதற்காக தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம், கேரளா மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி, அந்தமான் - நிக்கோபார் தீவுகள் மற்றும் இலட்சத்தீவுகளின் தலைமைத் தேர்தல் அதிகாரிகள் மற்றும் மாநில காவல்துறை ஒருங்கிணைப்பு அதிகாரிகளின் மண்டல மாநாடு சென்னையில் இன்று (09.11.2023) நடைபெற்றது.
இந்த மாநாடு இந்திய தேர்தல் ஆணையத்தால் ஏற்பாடு செய்யப்பட்டு, தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி .சத்யபிரத சாகு தலைமையில் நடத்தப்பட்டது. இம்மாநாட்டில் மூத்த துணைத் தேர்தல் ஆணையர் மற்றும் மக்களாட்சி மற்றும் தேர்தல் மேலாண்மைக்கான இந்திய சர்வதேசப் பயிற்சி நிறுவனத்தின் தலைமை இயக்குநர் தர்மேந்திர ஷர்மா, மூத்த துணைத் தேர்தல் ஆணையர் நிதேஷ் வியாஸ், துணைத் தேர்தல் ஆணையர் மனோஜ்குமார் சாஹூ உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டார்கள்.
அதனை தொடர்ந்து தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, நீக்கம் தொடர்பாக வந்துள்ள விண்ணப்பங்களின் எண்ணிக்கை உள்ளிட்ட விவரங்களை தேர்தல் ஆணைய அதிகாரிகள் கேட்டறிந்தனர். மின்னணு வாக்கு எந்திரங்களைப் பொறுத்தவரை, நாடாளுமன்ற தேர்தலுக்கு தேவையான அனைத்து எந்திரங்களும் தமிழகத்திற்கு வந்துள்ளன. இவ்வாறு வந்துள்ள மின்னணு வாக்கு எந்திரங்களில் விரைவாக சோதனைகளை செய்து முடித்துள்ளோம். இவை அனைத்தும் தேர்தலுக்காக தயார் நிலையில் உள்ளன. வரைவு வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணிகள் நடைபெற்று கொண்டுள்ளன. இதையடுத்து 2024 ஆம் ஆண்டு ஜனவரி 5 ஆம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்.
பாராளுமன்ற தேர்தல்களை வெப் காஸ்டிங் மற்றும் வீடியோகிராபி மூலமாக கண்காணிப்பது, மைக்ரோ அப்சர்வர் மற்றும் மத்திய ரிசர்வ் பாதுகாப்பு படையினரின் பாதுகாப்பு அம்சங்கள் போன்றவை பற்றி விவாதிக்கப்பட்டது. சட்டம் ஒழுங்கு பிரச்சனை இல்லாத மாநிலமாகத் தமிழ்நாடு உள்ளதாக இந்தியத் தேர்தல் ஆணையத்திடம் தெரிவித்துள்ளோம். 2024 நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ளத் தயாராக உள்ளோம்” என தெரிவித்தார்.