தென் ஆப்பிரிக்கா உடனான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின்போது, பந்தை சேதப்படுத்திய குற்றத்திற்காக கடுமையான ஆஸ்திரேலிய வீரர்கள் ஸ்டீவன் ஸ்மித், டேவிட் வார்னர் மற்றும் இளம் வீரர் பான்கிராஃப்ட் ஆகியோர் கடுமையாக விமர்சிக்கப்பட்டனர். மேலும் ஸ்மித், வார்னருக்கு தலா ஓராண்டும், பான்கிராஃப்டுக்கு 9 மாதங்களும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாட தடைவிதித்தது கிரிக்கெட் ஆஸ்திரேலியா.
இதையடுத்து, ஆஸ்திரேலிய திரும்பிய ஸ்மித் மற்றும் வார்னர் நடந்த தவறுகளுக்கு முழுமையாக பொறுப்பேற்றுக் கொள்வதாக கண்ணீர் மல்க பேட்டியளித்திருந்தனர். இத்தனை காலம் சேர்த்த புகழ் மட்டுமின்றி, தனிப்பட்ட முறையில் கிரிக்கெட் ரசிகர்களின் உணர்வுகளை பாதிக்கும் வகையில் ஈடுபட்டதால் கிரிக்கெட் ஆஸ்திரேலியா அவர்களுக்கு விதித்த தடை மூலம், மிகப்பெரிய வருவாய் இழப்பையும் இந்த வீரர்கள் சந்தித்துள்ளனர்.
இந்நிலையில், பந்தை சேதப்படுத்திய குற்றத்திற்காக சம்மந்தப்பட்ட வீரர்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் தண்டனை மிகவும் அதிகப்படியானது என ஆஸ்திரேலிய விளையாட்டு வீரர்கள் கூட்டமைப்பு தலைவர் கிரேக் டையர் கருத்து தெரிவித்துள்ளார். மேலும், இந்த தண்டனையை குறைத்து அறிவிக்கலாம் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.