இந்தியாவில் கரோனா பாதிப்பு அதிகரித்தும் வரும் நிலையில் வீடியோ மூலம் நாட்டு மக்களிடம் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, "ஊரடங்கை மதித்து நடக்கும் நாட்டு மக்களுக்கு நன்றி. அரசுக்கு மக்கள் முழு ஒத்துழைப்பு அளித்து வருகின்றனர். இந்தியாவின் மக்கள் ஊரடங்கு உலகளவில் முன்னுதாரணமாகி இருக்கிறது.
நாடே ஒன்றிணைந்து கரோனாவுக்கு எதிராகப் போராடும் என்பதை மக்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். மத்திய அரசு எடுக்கும் நடவடிக்கைகள் உலக நாடுகளுக்கு முன்னுதாரணமாக இருக்கிறது.ஊரடங்கால் 130 கோடி மக்கள் வீட்டில் இருந்தாலும் நாம் அனைவரும் ஒற்றுமையாகத்தான் இருக்கிறோம். கரோனாவை எதிர்ப்பதில் நாடே ஒற்றுமையாகச் செயல்பட்டு வருகிறது. கரோனாவுக்கு எதிராகப் போராடும் மக்கள் அனைவரும் இறைவனின் வடிவம்.
ஏப்ரல் 5- ஆம் தேதி ஞாயிறன்று இரவு 09.00 மணி முதல் 09.00 நிமிடங்கள் மின் விளக்குகளை அணையுங்கள்; பல்ப்புகளை அணைத்து விட்டு வீட்டில் 9 நிமிடங்கள் மெழுகுவர்த்தி, அகல்விளக்குகளை ஏற்றுங்கள்; டார்ச் லைட் அல்லது செல்போன் மூலமாகவும் 9 நிமிடங்கள் ஒளியேற்ற வேண்டும்.9 நிமிடங்கள் விளக்கு ஏற்றும் போது, அமைதியாக இருந்து நாட்டு மக்களைப் பற்றி சிந்தியுங்கள்.
கரோனாவால் மக்கள் இருண்ட நிலையில் இருந்து வெளிச்சத்துக்கு வருவதற்கு உதவி செய்ய வேண்டும். ஒரேநேரத்தில் ஒளியேற்றுவதன் மூலம் நாம் அனைவரும் ஒற்றுமையாக இருக்கிறோம் எனக் காட்டுவோம். வெளியே வராமல் வீட்டு வாசல் அல்லது பால்கனியில் மக்கள் ஒளியேற்றலாம். உற்சாகமாக இருந்து கரோனாவை எதிர்த்து மக்கள் போரிட வேண்டும். உற்சாகத்தை விட மிகச்சிறந்த சக்தி எதுவும் இல்லை;அனைவரும் உற்சாகமாக இருக்க வேண்டும்." இவ்வாறு பிரதமர் பேசினார்.
ஏற்கனவே மார்ச் 22- ஆம் தேதி மக்கள் ஊரடங்கின் போது மக்கள் கைத்தட்ட பிரதமர் நரேந்திர மோடி கூறியிருந்த நிலையில், தற்போது வரும் ஞாயிறன்று இரவு 09.00 மணிக்கு 9 நிமிடம் மின்விளக்கை அணைக்க கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.