இந்தியாவில் தமிழ்நாடு, டெல்லி, கேரளா, புதுச்சேரி, ஆந்திரா, கர்நாடகா, குஜராத், மஹாராஷ்ட்ரா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால், அந்தந்த மாநில, யூனியன் பிரதேச அரசுகள் கரோனா தடுப்பு பணிகள் மற்றும் கரோனா தடுப்பூசி போடும் பணிகளை முடுக்கிவிட்டுள்ளன. மேலும், மத்திய சுகாதாரத்துறை அமைச்சகமும் மத்திய உள்துறை அமைச்சகமும் அனைத்து மாநில, யூனியன் பிரதேச அரசுகளுக்கு அறிவுறுத்தல்களை வழங்கி வருகின்றன.
குறிப்பாக, பல்வேறு மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு, முழு நேர ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. மேலும், பொதுமக்கள் வெளியில் செல்லும்போது கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும்; பொது இடங்களில் தனிமனித இடைவெளியைக் கடைபிடிக்க வேண்டும்; அடிக்கடி சோப்பு (அல்லது) கிருமிநாசினி கொண்டு கைகளைக் கழுவ வேண்டும் போன்ற அறிவுறுத்தல்களை மத்திய, மாநில அரசுகள் அவ்வப்போது வழங்கி வருகின்றன.
இருப்பினும் இந்தியாவில் கரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், டெல்லியில் இருந்தவாறே பிரதமர் நரேந்திர மோடி இன்று (17/04/2021) இரவு 08.00 மணிக்கு காணொளி மூலம் அவரச ஆலோசனை நடத்துகிறார். பிரதமர் தலைமையில் நடைபெற உள்ள ஆலோசனையில் மத்திய அமைச்சர்களும், பல்வேறு மத்திய அமைச்சகங்களில் உள்ள உயர் அதிகாரிகளும் பங்கேற்க உள்ளனர்.
கரோனா தடுப்பூசிக்குத் தட்டுப்பாடு உள்ளதாக பல்வேறு மாநில அரசுகள் கூறிய நிலையில், பிரதமரின் ஆலோசனை முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. இந்த ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே கரோனா தடுப்பு பணிகள், கரோனா தடுப்பூசி போடும் பணிகள் குறித்து அனைத்து மாநில முதல்வர்கள், மாநில ஆளுநர்களுடன் பிரதமர் ஆலோசனை நடத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.