16 ஆவது ஐபிஎல் சீசனின் 37 ஆவது லீக் போட்டி ராஜஸ்தானில் நடைபெற்றது. சென்னை சூப்பர் கிங்ஸ் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதிய இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பேட்டிங் தேர்வு செய்தது.
முதலில் களமிறங்கிய ராஜஸ்தான் அணியில் ஜெய்ஸ்வால் அதிரடி ஆட்டத்தால் 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்கள் இழப்பிற்கு 202 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக ஜெய்ஸ்வால் 77 ரன்களையும் துருவ் ஜூரல் 34 ரன்களையும் பட்லர் மற்றும் படிக்கல் தலா 27 ரன்களையும் எடுத்தனர். சென்னை அணியில் துஷார் தேஷ்பாண்டே 2 விக்கெட்களையும் தீக்ஷனா மற்றும் ஜடேஜா தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர். ராஜஸ்தான் அணி பவர்ப்ளேவில் மட்டும் விக்கெட் இழப்பின்றி 64 ரன்களை குவித்தது. முதல் 3 ஓவர்களில் 42 ரன்களையும் அடுத்த 3 ஓவர்களில் 22 ரன்களையும் குவித்தது.
தொடர்ந்து களமிறங்கிய சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்கள் இழப்பிற்கு 170 ரன்களை மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக துபே 52 ரன்களையும் ருதுராஜ் கெய்க்வாட் 47 ரன்களையும் எடுத்தனர். ராஜஸ்தான் அணியில் ஆடம் ஜாம்பா 3 விக்கெட்களையும் அஷ்வின் 2 விக்கெட்களையும் குல்தீப் யாதவ் 1 விக்கெட்டையும் வீழ்த்தினர். சென்னை அணியில் இம்பேக்ட் ப்ளேயராக வந்த ராயுடு 2 பந்துகளில் ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறினார்.
இந்த போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் ராஜஸ்தான் அணி 8ல் 5ல் வெற்று பெற்று 10 புள்ளிகளுடன் புள்ளிப் பட்டியலில் முதல் இடத்திற்கு முன்னேறியது. இந்த போட்டியில் தோல்வி அடைந்த சென்னை அணி 8ல் 5ல் வெற்றி பெற்று 3 தோல்வியுடன் 10 புள்ளிகளுடன் ரன்ரேட் வித்தியாசத்தில் புள்ளிப் பட்டியலில் 3 ஆம் இடத்தில் உள்ளது. இரண்டாவது இடத்தில் குஜராத் அணி உள்ளது.